தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலம் வரை ஆளுமைமிக்க தலைமைகளால், மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் 60% என்பது தனது சொந்த வரி வருவாயிலிருந்து கிடைக்கும்படியான நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் பரவலான வரி வருவாய் அரசுக்கு கிடைத்து வந்த நிலையில், ஊரடங்கினால் அவை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. வரி வருவாயாக அதற்கு முன், மாதத்திற்கு குறைந்தபட்சம் 10ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்து வந்தது. ஆனால் மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கான வரி வருவாய் அதில் வெறும் 10 முதல் 20 சதவீதம் வரையே இருந்தது. ஊரடங்கு நிவாரணத்திற்காக 3ஆயிரத்து 280 கோடி ரூபாய்க்கான சிறப்புத் தொகுப்பை அறிவித்த எடப்பாடி அரசு அதனை வழங்குவதற்கு திணறியது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு மாதச் சிறப்பு ஊதியம் மே 5ஆம் தேதி வரை வழங்கப்படவில்லை. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் கட் ஆகிவிட்டது. அரசின் வரி வருவாய்க்கு அடுத்தபடியாக டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமானது. மத்திய அரசின் உத்தரவின்றி டாஸ்மாக்கைத் திறக்க முடியாது என்பதால், அடுத்த கட்ட வருவாய் தரும் இடமான பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்தது எடப்பாடி அரசு.
தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலர்கள், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. இதனால் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து இயங்க வேண்டும் என உத்தர விடப்பட்டது. நாள் ஒன்றுக்கு 24 ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. எந்த அரசு அலுவலகமும் பின்பற்ற முடியாத பல்வேறு நிபந்தனைகளுடன் பதிவுத்துறை தலைவர் உத்தரவு அடிப்படையில் திறக்கப்பட்டன. சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கஷ்டப்பட்டு அலுவலகம் சென்றனர்.
கரோனா வார்டில் பணியில் உள்ள டாக்டர்கள்- நர்சுகளுக்கே கிடைக்காத பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு உடைகள் பத்திரப்பதிவு அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு ஆவணங்கள் ஏதும் பதிவாகவில்லை. ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் மட்டுமே பதியப்பட்டன.
"ஏப்ரல் 22 அன்று நிறைந்த அமாவாசை நாளாகும். இந்த நாளில் அதிகார மட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளுக்கு ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டியது இருந்த காரணத்தினால் தான் 20 ஆம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட வேண்டும் என உத்தர விடப்பட்டது'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வழக்கமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டால், தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு அதிகாரிகள் தகவல்களைப் பார்க்க முடியும். ஆனால் 22 ஆம் தேதிக்கு முன்னர் உள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் இணையத்தளத்தில் பார்க்க முடிகிறது. 22 ஆம் தேதி மட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 23, 24, 25ஆம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இணையத்தளத்தில் பார்க்க முடிகிறது.
சென்னையில் பத்திரபதிவு செய்ய ஆட்கள் வாரத நிலையில், தமிழகத்திலே மதுரையிலும், முதல்வரின் சேலத்திலுமே மட்டுமே அதிக அளவில் நடந்து உள்ளது. அதே போன்று திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டத்தில் தினமும் 1 என்கிற விகித அடிப்படையில் பதிவு நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களில் குறைவாக நடைபெற்றதற்கு காரணம், பத்திரம் எழுதுபவர்கள் அலுவலங்கள் திறக்காத நிலையில் பத்திரபதிவு நடைபெற்றது என்கிறார்கள்.
ஆளுந்தரப்பினர் விரும்பிய ஒரு சில பதிவுகள் கச்சிதமாக முடிந்தாலும், அரசு எதிர்பார்த்த வருமானம் வரவில்லை. பத்திரப் பதிவு போலவே வாகனப்பதிவிலும் வருமானம் உண்டு. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் இல்லை. நிதிநெருக்கடி, கடன்சுமை எனத் தவித்த தமிழக அரசை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது, டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்கிற மத்திய அரசின் க்ரீன் சிக்னல்.
டெல்லி உள்பட பல மாநிலங்களிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா- கர்நாடக பார்டர்களில் தமிழக குடிமகன்கள் பெருங்கூட்டமாகக் கூடியதால், அதையே காரணமாகக் காட்டி, மே 7ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து 5 வரை 6 அடி இடைவெளி என்கிற சமூக ஒழுங்குடன் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குக்கர் சாராயம் வரை குடிமக்கள் இறங்கி விட்டார்கள் என மக்கள் மீது பழிபோட்டு, அரசாங்கம் தனது வருமானத்தைத் தேடுகிறது. பேரிடர் காலத்தில் மக்களுக்கு அரசு உதவவேண்டும். மாறாக, அரசுக்கு உதவுகிறார்கள் 'குடி'மக்கள்.