அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன். இவர் ஆசிரியராக பணியில் இருக்கும்பொழுது நல்லாசிரியர் விருது பெற்றவர், சமூக சேவைகள் செய்தவர். இவருக்கு மூன்று மகள்கள். நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கும் அவர்களில் மூன்றாவது மகள் ஆனந்தவள்ளி திருமணம் முடித்து அமெரிக்காவில் வசிக்கிறார்.
தந்தை தியாகராஜனின் சமூக சேவை மனப்பான்மை, அவருக்கும் இயல்பாக இருந்தது. தானும் தனது ஊருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆனந்தவள்ளி வறட்சி மாவட்டங்களின் பட்டியலில் உள்ள அரியலூர் மாவட்டத்திற்கு என்ன செய்யலாம் என்று தந்தையிடமும், கணவரிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்ற ஆண்டு அவர்களது விளாங்குடி கிராமத்தில் உள்ள 64 ஏக்கர் பெரிய ஏரியை தூர்வார முடிவெடுத்து அமெரிக்காவில் உள்ள 'எய்ம்ஸ் இன்டியா பவுண்டேசன் ப்ரம் அமெரிக்கா' என்ற அமைப்பை அணுகி உதவி பெற்றார். அந்த அமைப்பு ரூபாய் 1 லட்சத்து என்பதாயிரத்து 500 கொடுக்க தனது பங்களிப்பாக 4 லட்சம் சேர்த்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாயை ஊரில் இருக்கும் தந்தைக்கு அனுப்பினார்.
முயற்சிகள் தொடங்கி, வேலைகள் நடந்து கடந்த ஆண்டு ஏரி தூர்வாரப்பட்டு கருவேல முட்கள், காட்டாமனுக்கு செடிகள் எல்லாம் அகற்றப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்காக கிராமத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழை நீர் வீணாகாமல் குளத்தில் தேங்கியது. ஊரில் உள்ள 44 ஏக்கர் பரப்பளவு நன்செய் நிலத்திற்கு விவசாய பாசனத்திற்கும் மக்கள், கால்நடைகளின் தண்ணீர் பயன்பாட்டிற்கும உதவி வருகிறது.
ஒரு ஏரியுடன் முடித்துவிடாமல் இதன் தொடர்ச்சியாக, தற்போது விளாங்குடி கிராமத்தில் முற்புதர்கள் சூழ்ந்துள்ள 2 குளங்களை தேர்வு செய்து மீண்டும் ஆனந்தவள்ளி அனுப்பிய ரூபாய் 3 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினார் தியாகராஜன்.
தங்களது பொதுசேவை குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தியாகராஜன், "ஆரம்ப காலம் முதலே பொதுசேவையில் ஈடுபட்டு வந்த எனக்கு எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து வந்தனர். இந்த ஊரில் உள்ள ஏரியை தூர் வார எனது மகள் ஆசைப்பட்டார். அதற்கான மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று பணிகளை தொடங்கினேன். கடந்த ஆண்டு தூர் வாரியதால் அதற்கான பயனை இப்போது பொதுமக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சேவையை செய்ய மாவட்ட நிர்வாகம் முறையாக அனுமதி கொடுத்தது சந்தோஷம்தான். ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள சில அதிகாரிகள், 'இதை எப்படி நீங்கள் செய்யலாம், செய்யக்கூடாது' என தொந்தரவு கொடுத்தனர். விசாரித்துப் பார்க்கையில் அவர்கள் பணம் எதிர்ப்பார்ப்பது தெரிய வந்தது. 'என்னால் முடியாது' என்று உறுதியாக இருந்தேன். ஒரு நாளைக்கு ஜெ.சி.பி. வாடகை எவ்வளவு தெரியுமா சார்? ரூபாய் 8 ஆயிரம். இந்த ஊர் ஏரியை சுத்தப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை. தானாக முயற்சி செய்து இப்படி செய்தால் சில அதிகாரிகளின் கீழ்த்தரமான நடவடிக்கையை நினைத்தால்தான் மனம் வலிக்கிறது" என்றார் வேதனையாக.
அமெரிக்காவில் பணிபுரிந்தாலும் சொந்த மண்ணை மறக்காத தமிழ் மகளான ஆனந்தவள்ளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் 'சிவாஜி' திரைப்படத்தில் வருவது போல நல்லது செய்ய நினைப்போருக்கு இடைஞ்சலாக லஞ்சம் கேக்கும் அதிகாரிகளை என்ன செய்வது?