திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இணையவழிக் கல்வி தொடர்பாக சில முக்கியக் கருத்துகளை முன்வைத்தார். அந்தக் கருத்துகள் வருமாறு,
"ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூற உங்களை எல்லாம் இங்கே அழைத்திருக்கிறோம். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 'திராவிடப் பள்ளி' என்ற இணைய அஞ்சல் வழி கல்வி இயக்கத்தைத் தொடங்குவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு இயக்கமும் எதிர்ப்புகளைச் சந்திக்கும் என்பது இயற்கையான ஒன்று. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்புகளைச் சந்திக்கும் இயக்கமாக திராவிட இயக்கம் இருந்து வருகிறது. திராவிட இயக்கம் பற்றிய அவதூறுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
அய்யா பெரியார் அவர்கள் இறந்து 47 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அவரது சிலையைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுகிற நிலையை நாம் நேரில் பார்க்கிறோம். திராவிடம் என்ற சொல்லுக்கு பல்வேறு பொருள் உண்டு. திராவிடம் மட்டும் அல்ல. எல்லா சொற்களும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். சங்க இலக்கியத்தில் பயன்பட்ட பொருளுக்கு என்ன பெயரோ அது தற்போது கிடையாது. ஆனால் திராவிடத்தின் மீது திரும்பத் திரும்ப குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். திராவிடம் என்ற சொல்ல சங்க இலக்கியத்தில் இல்லை என்கிறார்கள். அப்பா அம்மா என்ற சொல் கூடத்தான் சங்க இலக்கியத்தில் இல்லை. எனவே அவையெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை என்று ஆகிவிடாது. திராவிடம் என்ற சொல் ஒரு கட்டத்தில் இனத்தைக் குறித்தது பிறகு நிலத்தைக் குறித்து, பிறகு மொழியைக் குறித்தது.
ஆனால் இன்றைக்கு திராவிடம் என்ற சொல் சமூக நீதியைத்தான் குறிக்கின்றது. எல்லா சொற்களுக்கும் வெறும் அகராதியில் இருந்து மட்டுமே பொருள் தேட முடியாது. திராவிடம் என்றால் சமூக நீதி, திராவிடம் என்றால் சுய மரியாதை, திராவிடம் என்றால் சமத்துவம், திராவிடம் என்றால் தீந்தமிழ் உணர்ச்சி என்பதுதான் இன்றைய நடைமுறை. இந்த உண்மையை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காகவே திராவிட இயக்கத் தமிழர் பேரவை இந்தத் 'திராவிடப் பள்ளி'யைத் தொடங்குவது என்று முடிவு செய்துள்ளது. பெரியாரின் மொழியிலே சொல்ல வேண்டுமானால் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த தினம் (15 ஜூலை) அன்று, எனவே கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுகிறோம்.
எங்கள் ஐயா பெரியாரின் பிறந்த தினத்தில் இந்த இணைய வழி அஞ்சல் வழி கல்வியகம் தொடங்கும். ஆண்டுக்கு 300 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சேரும் முதல் 300 மாணவர்கள் இந்த இணையவழிக் கல்வியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை ஒரு கல்வி ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்தடுத்த தலைமுறையினருத்து திராவிட இயக்க வரலாற்றை, சிந்தாந்தத்தைக் கொண்டு சேர்க்கும் வழியாக இது இருக்கும். திராவிட இயக்க ஆட்சியில் நடைபெற்ற விஷயங்களை இன்றைய இளம் தலைமுறையினர் அறியாமல் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த இணைய வழிக் கல்வி உதவியாக இருக்கும்" என்றார்.