ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ம் தேதி போதை பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் குடிக்கு அடிமையாகி வரும் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மீது கவனம் செலுத்தி அந்த குடியிலிருந்து மீட்பதற்கு உதவ வேண்டும் என்பதுதான் இதனுடைய நோக்கமாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும் குடிக்கு அடிமையாகாதவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை குடிமகன்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறார்கள்.
இந்த குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் கூட குடிமகன்களும் குடிகாரர்கள் சங்கம் வைத்து குடித்து வருகிறார்கள். ஆம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியில் குடிகாரர்கள் சங்கமே இயங்கி வருகிறது. அதிகாலையில் தோட்டம், காடுகளுக்கு வேலைக்கு போகும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையை தட்டி ஒரு கட்டிங் அடித்துவிட்டு தான் வேலைக்கு போய் வருகிறார்கள்.
அதன்பின் மாலையில் குடிகாரர்கள் சங்கத்தை கூட்டி தலைவர் முத்துச்சாமியோடு குடித்து கும்மாளம் போடுவார்கள். இதில் போதை மப்பில் தள்ளாடியும், கீழே விழுந்து விடும் குடிமகன்களை கொஞ்சம் நிதானத்துடன் இருக்கும் குடிமகன்கள் கைத்தாங்கலாக கூட்டிட்டு போய் வீட்டில் விட்டுவிட்டும் வருவார்கள்.
இப்படி ஒரு பக்கம் குடிமகன்களின் நிலை இருந்து வருகிறது என்றால் மற்றொருபுரம் டாஸ்மாக் பார்களில் குடித்துவிட்டு அங்கங்கே சாலை ஓரங்களில் பஸ் ஸ்டாண்டுகளில் போதைமப்பில் படுத்து கிடக்கிறார்கள். ஆனால் பல குடிமகன்கள் போதையிலேயே வீடுகளுக்கு போய் மனைவி, பிள்ளைகளை சண்டை போட்டு அடித்து துன்புறுத்தி குடும்பத்தையே சீரழித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட தூத்துக்குடியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்த மாணவன் தினேஷ், தான் இறந்த பிறகாவது என் தந்தை குடியை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில்வே பாலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்படியிருந்தும் கூட குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து போதைக்கு அடிமையாகி வருவதால் குடிமகன்களின் குடும்பங்களும் சீரழிந்து வருவதுடன் மட்டுமல்லாமல் பல குடும்பங்களும் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
இப்படி குடும்பங்களையே சீரழித்து வரும் குடிமகன்களிடமிருந்து குடியை நிறுத்த முடியுமா? என்பதை பற்றி குடிபோதை நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளித்து வரும் மதுரையில் உள்ள ஷாக் (Sacc) போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குனரான ரமேஷ் கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது...
உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது.
‘போதை’ சமூகத்தை அழிக்கும் ஒரு ‘அரக்கன்’ போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதிக்கிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. வல்லரசு ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நம் நாடு பயணித்து கொண்டுள்ளது. இன்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூட தலைமுறைகளை பாதிப்பதில் தலையாக பிரச்சனையாக இருப்பதும், மனித சமுதாயத்தையும், ஆற்றலையும் அழித்து கொண்டிருப்பதும் மது போதை பழக்கம் ஆகும்.
முன்பெல்லாம் கஞ்சா, சாராயம் என்ற வார்த்தைகளை மக்கள் உச்சரிக்கவே கூச்சப்பட்ட நிலையில் இன்று வீடுகளில் ஒரு குடிமகன் உருவாகும் நிலை வந்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் 60 சதவீத குடும்பங்களில் ஒருவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சில குடும்பங்களில் மதுவிற்கு அடிமையானவர்களை பற்றி வெளியில் கூற அச்சப்பட்டு மனம் புழுங்கிஅழுது, அறியாமை காரணமாக இதுவும் ஒரு நோய் என தெரியாமல் மருத்துவம் பார்க்க மறந்து மாய்ந்து போக காரணமாக உள்ளனர்.
நம் அன்பானவர்களின் நிலை தடுமாறி ஆயுள், உடமை, கவுரவம், உறவுகளை இழக்கும் போது நிலை தடுமாறி நிற்கிறோம். தனி மனித தடுமாற்றம் மட்டும் அல்லது தனி மனித மனமாற்றம், கலாச்சார ஒழுக்க சீரழிவுகள், உடலின் உள் உறுப்புகள் அதிகபட்ச பாதிப்புகள் இந்த போதை மற்றும் குடியினால் ஏற்படுகிறது.
மாத்திரை, ஊசி, கஞ்சா, மது உட்பட சில விஷயங்கள் மூலம் போதை மனிதனை அடிமையாக்குகிறது. இதனால் அடிமைப்பட்ட மனிதனோ தன் நிலை மாறி, குடும்பம், சமூகம், நாடு இவற்றை துறந்து, தனித்து மனநேயாளிகளாகி மாண்டும் போகிறான். இதற்கு தீர்வு இல்லையா என கேள்வி அவ்வப்போது எழுகின்றன.
ஜாதகம் பார்த்தல், யாகம், மாந்த்ரீகம், வழிபாடு, போலி டாக்டர்களால் இவற்றை மாற்ற முடியாது. மேலை நாகரிகத்தில் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகம் நூற்றாண்டுகளாக இத்தவறை செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 1960 வரை நம் தலைவர்கள் மதுக்களை ஆதரிக்கவில்லை. ஆனால் அரசியல் லாப நோக்கத்திற்காக இன்று மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதை உணர்ந்தான் இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் மதுக்கடைகளை புறக்கணித்து குடியிலிருந்து இந்திய குடிமகன்களை காப்பாற்ற மதுவிலக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதுபோல் தமிழ்நாட்டிலயும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென போராடி சிலர் இறந்தும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும்; அரசு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. புதுச்சேரி, கோவா போன்ற மாநிலங்களில் மது சந்தைகளால் மக்கள் வசீகரிக்கப்பட்டாலும் கூட தமிழகத்தில் மது பழக்கம் ஏற்படுத்திய பாதிப்பை போல அங்கு ஏற்படுத்தவில்லை. தெருவிற்கு தெரு அரசே மதுக்கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் குழந்தைகளை பார்த்து கொள்வது குடும்பத்தினரின் கடமை. சமூகம் அதற்கு துணையாக இருக்க வேண்டும். குடிப்பவர்களை அதிலிருந்து படிப்படியாக மீட்க வேண்டும். குடிப்பவர்கள் எல்லோரும் குடி நோயாளிகள் அல்ல. ஆனால் மது அருந்தினால் உடலிலும், மனதிலும் பாதிப்பு ஏற்படுபது உறுதி. தொடர்ந்து குடிப்பவர்கள் குடித்து உடல், மனம், சமூகம் பொருளாதாரத்தை இழப்பவர்களே மாறி எல்லாவற்றையும் உடல், மானம், உறவு, கவுரவம் இழந்த பிறகும் குடிப்பதோ அல்லது வேறு போதை வஸ்துகளை பயன்படுத்துவதோ ஒரு வகை மனநோய் ஆகும்.
குடிநோயாளிகள் சாலையில் எதிர்பாராதவிதமாக விபத்தில் உள்ளம் தடுமாறி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களை போன்றவர்களே. அவர்களுக்கு முதலுதவி செய்து செம்மைப்படுத்தி வாழ்வு தருவது நம் கடமை. குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் தீயவர்களோ, மனநலம் குன்றியவர்களோ தீண்டத்தகாதவர்களோ அல்ல. சர்வதேச குடிநோய் அறிதல் கோட்பாடுகளின்படி குடிநோயாளிகளை அறிந்து கொள்ளலாம். உணவை தவிர்த்தல், குறை கூறுதல், உணவு அருந்தலில் காலமாற்றம், இயல்பான நடவடிக்கையில் மாற்றம் மற்றும் முரட்டுத்தனம் தீய வார்த்தைகளை பயன்படுத்தல், அடம்பிடித்தல், பிறர் மேல்பழி இடுதல், உடையில் நேர்த்தியின்மை, முடி, நகம் உடலில் சுகாதார குறைபாடு, வயிறு வீக்கம், மஞ்சள்காமாலை, மனைவி மற்றும் குடும்ப பெண்களை சந்தேகித்தல், தன் தொழில் மற்றும் பறி குடும்ப விஷயங்களை தவிர்த்தல், திருடுதல், பொய், ஏமாற்றுதல் மற்றவர்களுடன் சண்டை, சச்சரவு செய்தல், முற்போக்கு மனிதரை போல பேசுதல், ஆதீத பக்தி அல்லது புதிய நியாயங்களை கூறுவது போன்றவைகளை மூலம் குடிநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான மனநல ஆலோசனை உடற்பயிற்சி, தியானம், வாழ்க்கை வழிமுறைகள் எப்படியெல்லாம் வாழ வேண்டும், எப்படி குடிக்கு அடிமையானோம். அதனால் ஏற்பட்ட அவமானம், குடியினால் குடும்பங்கள் சீரழிந்து தனிமைப்படுத்தபட்டது இப்படி பல கவுன்சிலிங்களை அந்த குடிநோயாளிக்கு கொடுப்பதன் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக குடியிலிருந்து விடுபட்டபின் புதுவாழ்வு பெற்று ஒரு நல்ல மனிதனாக திரும்புகிறார்கள். இப்படி புதுவாழ்வு பெற்றவர்கள் வழக்கம்போல் வேலைகளுக்கும், தொழில் மற்றும் வியாபாரங்களுக்கும் சென்று கொண்டு குடும்பங்களோடு மனைவி, மக்களோடும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் எங்கள் ‘ஷாக்’ மறுவாழ்வு மையம் ஆரம்பித்த இந்த பத்து வருட காலத்தில் மட்டும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடிநோயாளிகளை திருத்தி மறுவாழ்வு கொடுத்து வருகிறோம் என்று கூறினார். ஆக இந்த சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தில் போதையில்லா நாடாக உருவாக்குவோம் என உறுதியேற்போம் “குடி”மக்களே!