Skip to main content

"அண்ணாமலைக்கு இது தேவையில்லாத வேலை; சூர்யா சஸ்பெண்ட் விவகாரமே நாடகமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.." - ராம.சுப்பிரமணியன்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

ஸல

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில், அண்ணாமலைக்கும் மூத்த தலைவர் கேசவ விநாயகத்துக்கும் இடையே பனிப்போர் இருப்பதாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 

 

கேசவ விநாயகத்துக்கும் அண்ணாமலைக்கும் மோதல் இருக்கிறது என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா? சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மையா?

 

இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் இருக்கிறது என்று நான் சொல்லத் தேவையில்லை. அனைவருக்குமே தெரியும், உங்களைப் போன்ற ஊடகங்களுக்குத் தெரியாதா என்ன? சூர்யா என்ற அந்தப் பையன் அந்த கேசவ விநாயகத்தை பத்தி என்னவெல்லாம் பேசியுள்ளார். அதை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு அண்ணாமலை அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தாரா? எனக்கு என்னவோ இதே ஒரு நாடகம் போல் தெரிகிறது. அந்த சூர்யா கட்சியிலிருந்து விலகியதை இதுவரை அண்ணாமலை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை இன்னும் கொஞ்ச நாள் கழித்து சூர்யாவை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு கேசவ விநாயகத்தை ஒழித்துவிடலாம் என்று கூட பார்ப்பார்கள். 

 

சூர்யா வெளியே போய்விட்டார், அவர் பாஜகவில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபடியும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். டெய்சி என்பவர் ஒரு பெண்ணாக இருந்து கூட எவ்வளவு ஆபாசமாகப் பேச முடியுமோ அப்படிப் பேசியுள்ளார். ஆனால் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் காயத்ரி ரகுராம் அவர்கள் தான். அவர்தான் கட்சியிலிருந்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர் இருந்த பொறுப்புகளுக்கு தற்போது தலைவர் துணைத்தலைவர் வரைக்கும் போடப்பட்டுள்ளது. எனவே அவர் திரும்பவும் கட்சியில் திரும்புவதற்கு உரியச் சூழ்நிலைகள் தற்போது இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர். 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை நான் மோடியிடமே நேரடியாகத் தெரிவித்துள்ளேன். ஐந்தாறு சீட்டுக்காக இனி நாம் அதிமுகவிடம் நிற்கத் தேவையில்லை. நாம் தனித்து நின்றாலே 20 சதவீத இடங்களைப் பெறும் ஆற்றல் நமக்கு இருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். தனியாக நின்றாலே நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இது எல்லாமே இன்றைக்குப் பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தெரிவித்துள்ளீர்கள். அந்த கூட்டத்தில் அதிமுவை பற்றி கடுமையாகப் பேசியிருக்கிறார். குறிப்பாக இபிஎஸ் அவர்களைப் பற்றி தவறாக ஒருமையில் பேசியதாகச் செய்திகள் வந்துள்ளது. அவர் கொடுக்கும் நான்கைந்து சீட்டையெல்லாம் பாஜக இனி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தொனியில் அவர் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் எல்லாம் கொதித்துப் போய் உள்ளார்கள். அதனால் தான் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் அவர்களை முடிந்தால் வெளியே வந்து பேசச் சொல்லுங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அதிமுகவுடன் மோதும் நிலை பாஜகவுக்கு நல்லதில்லை என்பது என்னுடைய கருத்து.