நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்கார்டன் வீட்டின் முன்பாக, அதாவது வீட்டிற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பது வழக்கம். நேற்று முன் தினமும் ரஜினிகாந்த் அவ்வாறே தனது இல்லத்திற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘’குடியுரிமை திருத்த சட்டம் அவசியமானது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை’’என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிய்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் குறித்து, ‘’சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடும். தீர ஆராய்ந்து, பேராசிரியர்கள், பெரியவர்களிடம் கலந்து பேசி முடிவெடுத்து போராட்டத்தில் இறங்குங்கள்’’ என்று கூறினார். ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பானது. தலைப்புச்செய்தியாக செய்தித்தாள்களில் வந்தன.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’யாராவது கேட்டை திறந்து வாசலில் நின்று பேட்டி அளித்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தலைப்புச் செய்தியாக வருகிறது. உண்மைச் செய்திகள் மறைக்கப்படுகிறது’’என்று கூறி, ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.