புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வேப்பங்குடி ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கிராமத்து ரோடு ஜல்லி கற்கள் உடைந்து நடக்க கூட முடியாத நிலை. அந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி யாக உள்ளார்.
கரடுமுரடான பயணங்களுக்கு பிறகு பவானியாவை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். முதலில் குடிக்கத் தண்ணீரும் இனிப்பும் கொடுத்து கிராமத்திற்கே உரித்தான வரவேற்பு கொடுத்த பிறகு நம்முடன் பேசினார். அடிப்படை வசதியில்லாத கிழக்கு செட்டியாப்பட்டி என்கிற சாதாரண கிராமத்தில் 3 வதாக பிறந்த எனக்கு கிராம மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது நாமும் மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் சின்ன வயதில் இருந்தே இருந்தது. உள்ளூர் அரசுப் பள்ளியில் தொடக்க கல்வியும் 5 கி மீ தூரத்தில் உள்ள ஏ.மாத்தூர் அரசு பள்ளியில் மேல்நிலை கல்வியும் படித்தேன். ஒரு பள்ளி நிகழ்ச்சியில் நந்தகுமார் ஐஆர்எஸ் பேசும் போது முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற அவரது பேச்சு எனக்கு மேலும் ஆசையை தூண்டியது.
அதன் பிறகு 4 கி.மீ சைக்கிளில் போய் பஸ் ஸ்டாண்ட்ல சைக்கிளை போட்டுட்டு பஸ் ஏறி புதுக்கோட்டை மகளிர் கலைக் கல்லூரிக்கு போய் பிஎஸ்சி மேக்ஸ் படிச்சேன். அப்ப ஒரு நிகழ்ச்சியில் சப் கலெக்டர் சரவு ஐஏஎஸ் வந்து பேசுனாங்க. பெண்கள் தான் தற்கொலை முடிவுக்கு போறாங்க. அதை நீங்கள் மாற்றனும் என்று பேசினார். எனக்கு அவங்க பேச்சு ரொம்ப ஆழமா பதிஞ்சது. அப்ப யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிக்கான மாணவர் தேர்வு நடந்தது. அதில் என்னை சேர்க்கல. 2019 ல் பிஎஸ்சி முடிக்கும் போது குரூப் 1 தேர்வு அறிவிப்பு வந்தது. உடனே விண்ணப்பிச்சுட்டு சுற்றியுள்ள மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி படிச்சேன். +1, +2 புத்தகம் கிடைக்கல ஆனால் நான் +2 படிக்கும் போது கொடுத்த அரசு லேப்டாப்பில் ஏற்றிக் கொடுத்திருந்த புத்தகங்களை படிச்சு தேர்வு எழுதினேன். முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அடுத்து உள்ள மெயின் எக்ஸாம்க்கு படிக்க புத்தகமும் இல்லை, வசதியும் இல்லை என்ற போதுதான் புதுக்கோட்டை பொதுப்பணித்துறை ஏ.டி சுந்தராசு சார் தகவல் தெரிஞ்சு என்னை பார்த்து விபரம் கேட்டவர் உடனே புத்தகங்களை வாங்கி கொடுத்து சென்னை மனிதநேய பயிற்சி மையத்திற்கு அனுப்பினார். நேரடி பயிற்சியின் போது கரோனா வந்துவிட்டது. பிறகு வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படிச்சதோட நிறைய தேடி குறிப்புகள் எழுதி படிச்சேன். இப்ப மெயின்லயும் தேர்ச்சி பெற்று கொஞ்சம் மார்க் குறைஞ்சதால டிஎஸ்பி கிடைத்திருக்கிறது. இதைப் பார்த்து குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஊரே என்னை கொண்டாடுறாங்க.
ஆனால் எனது இலக்கை இன்னும் நான் எட்டவில்லை. ஐஏஎஸ் தான் என் இலக்கு. அதனை எட்ட வேண்டும். அதற்காக மறுபடி படிக்க தொடங்கி இருக்கிறேன் என்றவர். இப்ப இளைஞர்கள், மாணவர்கள் தொட்டதற்கெல்லாம் தற்கொலை எண்ணங்களில் உள்ளனர். அதை மாற்ற வேண்டும். எதையும் பாசிட்டிவாக அணுக வேண்டும். அப்ப தான் நினைத்ததை சாதிக்க முடியும். நம்மால் முடியாதது எதுவுமில்லை. அப்புறம் மாணவர்கள் இளைஞர்களுக்கு செல்போன் மோகத்தால் விளையாட்டு, நண்பர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. தனிமையில் இருந்து செல்போன்களையே பார்ப்பதால் தான் இது போன்ற தவறான முடிவுகளுக்கும் போறாங்க. அந்த எண்ணங்களை மாற்ற நிறைய படிக்கலாம், நண்பர்களுடன் விளையாடலாம்'' என்றார்.
ஒரு கிராமத்து பெண்ணின் சாதனையை நாமும் பாராட்டியதோடு அடுத்த இலக்கை அடைய வாழ்த்து கூறினோம்.