புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால், அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்து ஏழை மாணவிக்கு உதவ முன்வந்த பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். அதே போல கிராமலாயா என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்த போது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா இல்லை என்றால் கிராமாலாயா கட்டித்தரும் என்றனர்.
இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, “என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால் என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுகிறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்குள்ள டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும் அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு 'வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க' அதனால எங்க ஊருக்கு எல்லாருக்கும் கழிவறை கட்டித் தரமுடியுமா?” என்று கேட்டார்.
அசந்து போன கிராமாலயா நிர்வாகிகள் 'உன் ஒருவருக்கு கிடைப்பதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கும் பறந்த மனதை பாராட்டுகிறோம்' என்று சொன்னதோடு ஊருக்கே கழிவறைகள் கட்ட ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று கழிவறைகளின் அவசியம் குறித்து மாணவியும் கிராமாலாயா நிர்வாகிகளும் எடுத்துக் கூறி 126 கழிவறைகளை கட்டியுள்ளனர். ஆனால், மாணவியின் கனவான நாசா போகும் திட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுவிட்டது.
கிராமத்து மாணவியின் இந்த கழிவறைத் திட்டம் அறிந்து பலரும் பாராட்டி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். அதே போல சுற்றுப் பயணம் வந்த திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி., மாணவி ஜெயலெட்சுமியின் ஆதனக்கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று பழங்கள், புத்தகங்கள், சால்வை வழங்கி பாராட்டியதுடன் அவருக்கு எப்படி இந்த திட்டம் தோன்றியது என்றெல்லாம் கேட்டறிந்து பாராட்டியதுடன் மாணவியின் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் உரையாற்றினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைந்து மாணவி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டார்.
அப்போது மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “கனிமொழி எம்.பி, திடீர்னு வீட்டுக்கு வந்தாங்க. 2 கலைஞர் புத்தகம், 2 அப்துல் கலாம் புத்தகங்கள் கொடுத்தாங்க. அப்பறம் கழிவறை கட்டும் யோசனை எப்படி வந்ததுன்னு கேட்டு பாராட்டினாங்க. அவங்க வந்தது நினைவாக மரக்கன்று நட்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவராலும் பாராட்டப்பட்டு வந்த மாணவி ஜெயலெட்சுமி, தற்போது இளங்கலை வரலாறு கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், மாணவி ஜெயலெட்சுமிக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக மகாராஷ்ட்ரா மாநில தமிழ் புத்தகத்தில் அவரின் சாதனை இடம் பெற்றுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநில பள்ளிகளில் ‘தமிழ் பாலபாரதி’ என தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. அதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் மாணவி ஜெயலெட்சுமியின் சாதனை ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. மாணவி ஜெயலெட்சுமி பற்றிய பாடத்தை ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். தமிழ் மாணவியின் சாதனையை வேற்று மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் படிப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் ஏராளமானோர் பெருமையாக நினைக்கின்றனர்.
இது குறித்து மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “என் கனவு மெய்ப்படத் தொடங்கியிருக்கிறது அண்ணா. நாசா போக நினைத்தேன் கரோனா தடை போட்டது. அதனால் மனமுடையவில்லை அந்த நேரம் தான் கிராமாலாயா என்னை தேடி வந்து உதவி செய்தது. கிராமாலாயாவின் உதவி எனக்கு மட்டுமின்றி என் கிராமத்தில் உள்ள 126 வீடுகளுக்கும் கிடைக்க செய்தேன். ஒரு பெண்ணின் வலியும் வேதனையும் எனக்கு தெரியும். அதனால் தான் கழிவறையை கேட்டு பெற்றேன். இன்று எங்கள் கிராம பெண்களிடம் அந்த வேதனை இல்லை என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இதெல்லாம் ஒரு பாடமாக நம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்னும் போது பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி. நம்மால் முடியும்; சாதிப்போம் என்ற எண்ணம் இருந்தால் போதும், எந்த தடைகளையும் உடைக்கலாம் அண்ணா” என்றார்.