தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து அரசியல் வெடிகளை ஏகத்துக்கும் வீசியிருக்கிறார் ரஜினிகாந்த். குறிப்பாக, எம்.ஜி.ஆர். மீது பாசம் மிக்கவராக காட்டிக்கொள்ளும் அவதாரத்தை (அரிதாரத்தை) எடுத்துள்ள ரஜினி, தலைமை இல்லாது தத்தளிக்கும் தமிழகத்தைக் கட்டிக்காக்க தன்னால்தான் முடியும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் வாக்குகளை குறிவைத்து அரசியல் பேசிய ரஜினி, தனது பேச்சினூடே நடிகர்திலகம் சிவாஜி குறித்தும் பதிவு செய்த செய்திகள் சிவாஜி சமூக நலப்பேரவையினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ரஜினிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கவும் தயாராகி வருகின்றனர்.
இது குறித்து, சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரனிடம் நாம் பேசியபோது, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல. ஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து சிவாஜியே ஜெயிக்கமுடியவில்லை என கூறுவதுதான் ஃபேஷன் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி நடிகர்திலகத்தோடு, பாக்யராஜையும், ராஜேந்தரையும் கூட ஒப்பிடுகிறார்கள். சிவாஜி திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி சுயம்புவாக வளர்ந்தவர்.
அரசியலைப் பொறுத்தவரை பெரியாரோடு, அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். மாற்றுக்கட்சிக்கு சென்றபோது அண்ணாவால் 'தம்பி எங்கிருந்தாலும் வாழ்க' என்று பாராட்டப்பட்ட நடிகர்திலகம், பெருந்தலைவர் காமராஜரைப் பின்தொடர்ந்து, எதிர்பார்ப்பில்லாமல், இறுதிவரை காமராஜர் புகழ் பாடி மறைந்தார்.
நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.
திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்க முடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை. தூய்மையான, நேர்மையான அரசியலைத் தரவேண்டும்; மக்கள் மத்தியில் நடிக்கக்கூடாது என நடிப்புத் துறையில் சம்பாதித்த பணத்தை வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கும், சீனா, பாகிஸ்தான் என்று போர் வந்தபோதெல்லாம் இந்திய நாட்டிற்கும் விளம்பரமில்லாமல் வாரி வழங்கிய நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை வள்ளல் என்றும் புகழ்ந்த அந்த பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் நடிகர்திலகம் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார்.
ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார். அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொல்ல வைத்தாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதியை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.
அந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வராத எம்.ஜி.ஆர் பாசம், கட்சி ஆரம்பிக்கப் போகும்போது வந்திருக்கிறது. தான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். இதனையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து அரசியல் மேடையிலும் பேசி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே.
சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகு பார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.
இப்படித்தான் இருந்தது எம்.ஜி.ஆர்.ஆட்சி. அவரது வாக்கு வங்கியை குறி வைத்து அரசியல் பேசும் ரஜினி, ஏதோ மாயாஜால வார்த்தைகளை சொல்லிவிட்டுப்போகட்டும். அதற்காக, சிவாஜியின் அரசியலையும் அவரது ஆளுமையையும் கொச்சைப்படுத்துவது போல பேசக்கூடாது. அதனால் ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர். பாசம் என்பது ஆன்மீக அரசியலையும் தாண்டி ஏமாற்று அரசியலே" என போட்டுத்தாக்குகிறார் சந்திரசேகரன்.