நீட் தேர்வு முடிவு மீண்டும் ஒரு பலி வாங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் கடைசி மகள் ப்ரதீபா. பெருவளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது 490 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
இதனைப் பாராட்டி அப்போதைய கலெக்டர், அரசின் சார்பில் நிதியுதவி தந்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்த்துள்ளார். அதன்படி கடந்த 2015 – 2016ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண் எடுத்துள்ளார்.
ப்ரதீபாவின் கனவு மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்பதில் இருந்துள்ளது. அதனால் அப்போது மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துகொண்டுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தது. கட்டணம் அதிகம் என்பதால் கொத்தனார் வேலை செய்யும் தனது தந்தையால் படிக்கவைக்க முடியாது என்பதால் அதில் சேரவில்லை.
இதனால் ஒரு வருடம் வீட்டில் இருந்து 2017ஆம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள நினைத்தபோது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வை கொண்டு வந்தது. அதனை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த ஒப்புக்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. ப்ரதீபாவும் நீட் தேர்வு எழுதினார். 155 மதிப்பெண்கள் எடுத்தார். இதனால் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. மனம் தளராமல் 2018ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார்.
நீட் தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது தொடர்பாக வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்கள் சிலர் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது. இந்நிலையில், 2018 ஜூன் 4ந்தேதி மதியம் நீட் ரிசல்ட் வெளிவந்தபோது, ப்ரதீபாவின் சகோதரி பார்த்தார். ப்ரதீபா தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது. இதனால் அந்தத் தகவலை அவருக்குத் தெரியப்படுத்தவில்லை. இதை நண்பர்கள் வழியாக தெரிந்துக்கொண்ட ப்ரதீபா, அதிர்ச்சியாகி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துள்ளார். ப்ரதீபாவின் இந்த முடிவை தாமதமாக தெரிந்துகொண்ட குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ மஸ்தான் (திமுக), விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், அதிமுகவின் தினகரன் அணியினர் மருத்துவமனையில் திரண்டனர்.
இறந்த ப்ரதீபாவின் சார்பில் மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதாவது, நீட் தேர்வு தடை செய்ய வேண்டும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை மனுவை கலெக்டர் கந்தசாமியிடம் வழங்கினர்.
மனுவளித்தபின் போலீஸார் நடவடிக்கை மாறியது. வேலூர் மண்டல காவல்துறை தலைவர் வனிதா தலைமையிலான போலீஸார், கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டு ப்ரதீபாவின் பெற்றோர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி உடற்கூறாய்வு செய்து உடலை ஒப்படைத்தனர்.
ப்ரதீபாவின் உடல் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ப்ரதீபாவின் உறவினர்கள், கட்சியினர் மறியலில் ஈடுப்படக்கூடாது என பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
'ப்ரதீபா, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்யவில்லை, வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துக்கொண்டார், அதனால்தான் விஷம் குடித்த அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மாவட்டம் மாறி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கொண்டு வந்தார்கள்' என்கிற தகவலை அரசியல் கட்சியினர் மத்தியில் மருத்தவமனை வளாகத்தில் போலீஸார் பரப்பினர். 'நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் தற்கொலைக்கு காரணமே பெற்றோர்தான்' என வழக்கு போடுவோம் என மிரட்ட ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள், இந்தத் தகவலால் பயந்து பின்வாங்கிய நிலையில் அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்ய கையெழுத்து வாங்கி உடலைத்தந்து அனுப்பி நிம்மதியடைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ்.