கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், அதன் தாக்குதலிலிருந்து இந்தியப் பொருளாதாரமும் தப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இம்மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் நேற்று மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவின் மொத்த ஜிடிபி -யில் சுமார் பத்து சதவீதத்தை மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். சுமார் 220 லட்சம் கோடி ஜிடிபி மதிப்பை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 20 லட்சம் கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால் இத்திட்டத்தின் நடைமுறை சாத்தியங்கள் என்ன..? இதனை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை அலசுகிறது இத்தொகுப்பு.
இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது 20 லட்சம் கோடி ரூபாய் என்ற தொகையைத் தான். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த 20 லட்சம் கோடியில், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள சுமார் ஏழு லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களும் சேர்த்தே கணக்கிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கடத்த ஒரு மாதத்தில், ரிசர்வ் வங்கி சுமார் 5.2 லட்சம் கோடி ரூபாயைப் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியாக அறிவித்துள்ளது. முதலாவது மார்ச் 27 அன்று ரெப்போ விகித மாற்றங்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி 3.74 லட்சம் கோடி ரூபாயையும், இரண்டாவது ஏப்ரல் 17 அன்று, மற்றொரு ரூ .1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப்புழக்க நடவடிக்கையையும் அறிவித்தது. இதனைக் கடந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மார்ச் மாதத்தில் ரூ .1.7 லட்சம் கோடிக்குப் பொருளாதார மீட்பு நிதியுதவியை அறிவித்தார். இவையல்லாமல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆக, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிதி தொகுப்பு சுமார் 7.1 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, மேலும் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மட்டுமே மத்திய அரசு புதிதாகச் செயல்படுத்த உள்ளது.
அடுத்ததாக இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணி, இந்தத் தொகை எவ்வாறு மக்களைச் சென்றடையும் என்பதே. இந்தத் தொகையின் பெரும்பான்மை பகுதி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், தொழில்துறைக்குக் கடன் உதவி வழங்கவுமே செலவிடப்பட உள்ளது. இதில் சில நீண்ட கால நடைமுறைகளைக் கொண்டவை ஆகும். நடப்பு நிதியாண்டில் அரசாங்கத்தின் நிதி தேவைகளைப் பாதிக்கப்படாததை உறுதி செய்யும் வகையில், இந்த நீண்ட கால நடைமுறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணத்தை உட்செலுத்தி பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான நிதி ஆதாரம் மத்திய அரசிடம் இல்லாத நிலையில், மீதமுள்ள இந்த உதவித்தொகை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி உத்தரவாதங்கள், மறுநிதியளிப்பு வசதிகள் மற்றும் தொழில்களுக்கான நீண்ட வரி விலக்கு ஆகியவற்றின் மூலம் மறைமுகமாகவே வெகுஜன மக்களிடையே சென்றடையும் வாய்ப்புள்ளது.
பிரதமரின் இந்த அறிவிப்பில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், எப்படி இவ்வளவு பெரிய தொகையைத் திரும்ப ஈட்ட மத்திய அரசு திட்டமிடும் என்பதே. ஏற்கனவே இந்த ஆண்டின் நிதி செலவுகளுக்காக மத்திய அரசு மேலும் 4.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டிற்கான ரூ.12 லட்சம் கோடி தேவையில் ரூ .7.8 லட்சம் கோடிக்கு மட்டுமே அரசின் வசம் உள்ளது. இதனைச் சரிசெய்யவே 4.2 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. இந்தச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையைச் சந்தைக்குள் செலுத்தி அதன் விளைவுகளை அரசு எவ்வாறு கையாளும் என்பதும் கேள்விக்குறியே. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா தொழில்கள் என அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், இந்தக் காலாண்டிற்கான மத்திய அரசின் வருவாயும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கருத்தில்கொள்ளும் போது, பணப்புழக்க அதிகரிப்புக்கும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்கும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்தக் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் பாதை நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது நிதர்சனம்.
பொருளாதார அறிஞர்களும் இதே கருத்தை முன்வைக்கும் இந்தச் சூழலில், மத்திய அரசோ மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே 5 அன்று, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு முறையே லிட்டருக்கு ரூ .10 மற்றும் ரூ .13 உயர்த்தியது. இது மத்திய அரசுக்கு இந்த நிதியாண்டில் சுமார் 1,75,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை வழங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு தயாரிப்புகளின் மீதான வரியை லிட்டருக்கு ரூ .3 முதல் 6 வரை மத்திய அரசால் இன்னும் உயர்த்த முடியும் எனும் இந்த நிலையில், இதன் மூலம் கூடுதலாக ரூ .50,000-60,000 கோடியை அரசு வருவாயாகப் பெரும். ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.2,25,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் மத்திய அரசு இந்தப் புதிய காலால் வரி மூலமாகக் கூடுதலாக இரண்டு லட்சம் கோடி வரை வருமானம் ஈட்ட முடியும். மேலும், கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கியிடமிருந்து அதிகளவு ஈவுத்தொகையைப் பெற்ற அரசு, இந்த ஆண்டும் அதையே செய்யும் எனவும் கணிக்கப்படுகிறது. மொத்தத்தில் பணப்புழக்கம், நிதியாதாரம், பணவீக்கம், வளர்ச்சி விகித பாதிப்பு என இப்படிப் பல இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட இந்த 20 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை, மக்களையும், ரிசர்வ் வங்கியையும் நம்பியே மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல மத்திய அரசின் துணிச்சலான இந்தத் திட்டத்தின் மொத்த வெற்றியும், இந்த உதவிகள் மக்களுக்கு எப்போது? எப்படி? போய்ச் சேருகிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பதும் மறுக்கமுடியாததாக உள்ளது.