தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி வரும் சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை உருவாக்கி விட்டது.
சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளன் கைது செய்யப் பட்டார். அவரை அந்த கடத்தல் சம்பவத்திலிருந்து தப்பிக்க வைப்பதற்காக அந்த வழக்கை விசாரித்த காதர்பாஷா என்கிற டி.எஸ்.பி. மீது சிலைக் கடத்தல் குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான பொன். மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்தார். தன் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கு என காதர் பாஷா, காவல்துறை மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததுடன். "என் மீது பொய் வழக்குப் போட்டு தீன தயாளனை தப்பிக்க வைக்க பொன்.மாணிக்கவேல் முயற்சி செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வழக்கும் போட்டார். இந்நிலையில்தான், சிலைக் கடத்தலில் அதிகாரிகள், அமைச்சர்களுக்குத் தொடர்பிருக்கிறது என பொன்.மாணிக்கவேல் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தனக்கு இடைஞ்சல் தருவதாக, பொன். மாணிக்கவேல் தரப்பிலிருந்து வெளிப்பட்ட குற்றச்சாட்டு, யார் அந்த அமைச்சர்கள் என்ற கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில், அந்த அமைச்சர்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் என தனியார் சேனலில் செய்திகள் வெளியாகின. இதற்கு அமைச்சர்கள் இருவரும் மீடியாக்களிடம் நேரிலும் மறுப்பு தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட சேனல் குறித்து பிரஸ் கவுன் சிலில் புகார் தெரிவித்திருப்ப தாகவும் கூறினார்கள். அமைச்சர் சேவூர் ராமச் சந்திரனின் உறவினர்களிடம் பேசினோம். "அமைச்சரின் பெயர் பிளாஷ் நியூஸில் வெளிவந்தவுடன் அவர் முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அழைத்தார். மூவரும் கூடிப் பேசும் போது, "பொன்.மாணிக்க வேல் இரண்டு அமைச்சர்கள் என்றுதான் கூறியுள்ளார். யார் என சொல்லவில்லை. எனவே இந்த செய்தியை வெளியிட்ட தொலைக் காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சி.வி.சண்முகம் சொன்னார். அந்த தொலைக் காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொன்.மாணிக்கவேல் சொல்லும் குற்றச்சாட்டுகளெல்லாம் முந்தைய ஜெ. ஆட்சியில் நடந்தவை. பழனி கோவில் விவகாரம் சசிகலா குடும்பம் சம்பந்தப்பட்டது. சேவூருக்கும் சிலைக் கடத்தல் விவகாரங்களுக்கும் தொடர்பில்லை என்றனர்.
இந்து அறநிலையத்துறையில் நடந்த விவகாரங்களுக்கும், காவல்துறையில் நடந்த விசாரணைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்படி சம்பந்தப்படுவார்' என அவரது தரப்பைச் சேர்ந்தவர்களும் மறுக்கிறார்கள். இதனிடையே, கோவில்கள் நிறைந்த மாவட்டத்தைச் சேர்ந்த உணவு அமைச்சர் காமராஜை பொன்.மாணிக்க வேல் குற்றம்சாட்டினாரா என்றும் விவாதிக்கப் பட்டது.
பொன்.மாணிக்கவேலுவுக்கு நெருக்க மானவர்களிடம் கேட்டபோது, ""யார் யார் என்பதை முதலமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும் அறிவார்கள்'' என்றனர். அறநிலையத்துறை வட்டாரங்களில் கேட்ட போது, "சசிகலா ஆதரவுடன் கோலோச்சிய அறநிலையத்துறை அதிகாரி தனபால் அவரால் பழிவாங்கப்பட்ட அதிகாரிகள் என இருதரப்பினரும் மோதிக் கொள்ளும்போது வெளியாகும் தகவல்களை வைத்துக் கொண்டுதான் பொன். மாணிக்கவேல் விசாரணை செய்கிறார். யாருக்கும் கட்டுப்படாத அதிகாரியான அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை கட்டுப்படுத்த பல வழிகளில் மாநில அரசு முயன்றது. சசிகலா குடும்பம் + பெரிய வி.ஐ.பி.க்களை எல்லாம் பொன். மாணிக்கவேல் சிக்க வைக்க முயற்சி செய்தபோது, முதல்வர் அலுவலகத்தின் உத்தரவுப்படி தலையீடுகள் நடந்தன, அமைச்சர்களும் தலையிட்டார்கள். எல்லாம் விரைவில் வெளிப்படும்'' என்கிறது.