தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவராக வலம் வந்தவர் தந்தைபெரியார். மேல்தட்டு மனிதராக, உயர்சாதியினர் என அழைத்துக்கொள்ளும் மக்களின் தலைவராக வலம் வந்தவர் ராஜாகோபாலாச்சாரி. இந்த இரு மேதைகள் தமிழகத்தை வலம் வந்தனர், வரலாற்றில் இடம்பிடித்தனர். அந்த தலைவர்களின் தளபதியாக இருந்தவரின் மறைவு தினம் இன்று.
தஞ்சாவூர் மாவட்டம், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அடுத்த கொடைவிளாகம் என்கிற கிராமத்தில் 1895 டிசம்பர் 30ந்தேதி பிறந்தவர் ராமநாதன். சென்னை பச்சையப்பா கல்லூரி, சென்னை கிருஸ்த்துவ கல்லூரி, சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற மேதையிவர். தமிழ் எந்தளவுக்கு இலக்கண சுத்தத்தோடு பேசுவாரோ அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் திறமையாக பேசுவார், எழுதுவார்.
சட்டக்கல்லூரியில் பயிலும்போது காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு அதில் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ்சில் உயர்சாதி – கீழ்சாதி என்கிற பாகுபாடு இருந்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பெரியார் தலைமையில் ஒரு அணி போராடிவந்தது. அப்போதை காங்கிரஸ் தலைவராக இருநத வ.வே.சு அய்யரின் சேரன்மாதேவியில் செயல்பட்ட பார்ப்பன சாதிக்கான குருகுலத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் கட்சி நிதியை குருகுலத்துக்கு வாரி வழங்கியதை பெரியார் கண்டித்தார். அப்போது பெரியார் தலைமையிலான அந்த அணியில் முக்கிய தளபதியாக இருந்தவர் ராமநாதன்.
1925 ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியில் புயல் வீசியகாலம். 1925 மே மாதம் பெரியார் வழிகாட்டுதலில், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது என ராமநாதனை காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரவைத்தார். அது பெரும் சர்ச்சைக்கும், கருத்து மோதலுக்கும் வழிவகுத்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் விலகினார். அவருடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களில் முக்கியமானவர் ராமநாதன்.
அதற்கு அடுத்த 6 மாதத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியபோது அதன் செயலாளர் பதவியில் ராமநாதன் அமர்த்தப்பட்டார். ஒருவகையில் சுயமரியாதை இயக்கத்தின் தளகர்த்த ராமநாதன் தான். பொதுவுடமை கட்சியின் பிற்காலத்தில் தொடங்கிய ஜீவா ஆரம்பத்தில் பெரியார், இராமநாதன்னுடன் இணைந்து செயல்பட்டார். சுயமரியாதை இயக்கத்தில் சார்பில் பெரியார், மனிதன் தன் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும், பார்ப்பன குருமார்கள் என்பவர்களை ஏற்றுக்கொள்ளகூடாது, சாதி மறுப்பு திருமணங்களை அதிகப்படுத்தவேண்டும், தீண்டாமை கொடுமையை அகற்ற வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்வைத்து போராடும்போது அதற்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்தியவர் ராமநாதன்.
1927ல் காந்தியடிகள் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, பெங்களுரூவில் தங்கியிருந்த காந்தியை சந்தித்து அவருடன் உள்ள பிணக்கை சரிசெய்துக்கொள்ள வேண்டும் என கடிதம் வாயிலாக பெரியாருக்கு வேண்டுக்கோள் விடுத்தார் இராமநாதன். அதனை ஏற்று காந்தியை சந்தித்து உரையாடினார் பெரியார்.
1931ல் பெரியார் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, உடன்சென்ற இருவரில் முதன்மையானவர் ராமநாதன். 11 மாதங்கள் ரஷ்யா உட்பட சில நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு வந்து அந்த நாட்டின் பெருமைகளை தமிழகத்தில் எடுத்துரைத்தவர் பெரியார். அதோடு ரஷ்யாவின் புரட்சிக்கரத்தலைவர் எழுதிய மதம் என்கிற நூலை பெரியாரோடு சேர்ந்து மொழி பெயர்த்தவர் இராமநாதன். இயக்கத்துக்காக ரிவோல்டு என்கிற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதன் முழு பொறுப்பும் இராமநாதனிடம் இருந்தது.
நீதிக்கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு சுயமரியாதை இயக்கம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. நீதிக்கட்சி தேர்தலில் ஆட்சியமைத்தது. அப்போது சுப்பராயன், ராமநாதன் போன்ற நீதிக்கட்சி தலைவர்கள் ஆட்சியை நடத்தினர். அப்போது காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்தும், ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருந்தது. மீண்டும் ஆட்சி பொறுப்பில் பங்கேற்க முடிவு செய்தது காங்கிரஸ்.
1933ல் காந்தி சென்னை வந்தபோது, அவரை சந்தித்து பேசினார் ராமநாதன். அதன்பின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பெரியாரின் நண்பரும், அரசியல் எதிரியுமான இராஜகோபாலாச்சாரி அழைத்தார் என காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி சென்றுவிட்டார். பதவி ஆசை சுப்பராயன், ராமநாதன் போன்றவர்கள் காங்கிரஸ்க்கு சென்றார்கள் என கடும் விமர்சனம் எழுப்பியது நீதிக்கட்சி.
காங்கிரஸ்சில் இருந்த ராஜகோபாலாச்சாரி அணியில் இருந்து செயல்பட்டார் இராமநாதன். 1936ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிட்டு இராஜகோபாலாச்சாரி தலைமையிலான மந்திரி சபையில் இடம் பிடித்தார். அரசியலில் நீண்டகாலம் அதன்பின் அவரால் இருக்கமுடியவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவை காங்கிரஸ் மீது பெரும் விமர்சனமாக எழுந்தது. காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் நீண்ட காலம் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தாருடன் வசித்து வந்தவர் 1970 மார்ச் 9ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார்.