Skip to main content

தெளிவாக இருக்கும் ராகுல்; தனித்து விடப்பட்ட மோடி - பசுபதி தங்கராஜ்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Pasupathi Dhanraj Interview

 

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பசுபதி தங்கராஜை சந்தித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

எமர்ஜென்ஸிக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்திரா காந்திக்கு பிறகு மூன்று தலைமுறைகள் வந்துவிட்டனர். அதனால் இந்த கூட்டத்தை எமர்ஜென்ஸியோடு ஒப்பிடுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

 

எமர்ஜென்ஸியின் போது கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று அமித்ஷா குறிப்பிடுகிறாரே?

அது பக்குவமான நிலையைத் தான் காட்டுகிறது. எமர்ஜென்ஸியின் போது பாதிக்கப்பட்டவர்களே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அதை விட பெரிய ஆபத்து இருக்கிறது என்பதற்கு தான்.

 

இந்த கூட்டத்தில் கொண்ட கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் ஒன்றிணைந்திருக்கிறார்கள், நாட்டு நலனுக்காக அல்ல எனவும் குறிப்பிடுகிறார்களே?

பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற வாதங்களிலோ நம்பிக்கை இல்லை. அவர்களது ஒரே நம்பிக்கை வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும். அதனால் தான் அவர்களை வைத்து மற்றவர்களை அடக்க பார்க்கிறார்கள். இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கே பேராபத்து வருகிறது என்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இவர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 

 

இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஒற்றுமை இல்லை அதனால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்களே?

அப்படி பார்த்தால் அன்றைக்கு ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் மாறுபட்ட சித்தாந்தம் உடையவர்கள் ஒன்றிணைந்தார்கள். ஆனால் இன்றைக்கு கூடியிருக்கும் கூட்டத்தில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே சித்தாந்தம் உடையவர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். மேலும் இந்த கூட்டம் முதல் கட்டம் தான். அதனால், கட்சிகள் வென்ற பின்பு யார் பிரதமராக இருக்கப் போவது என்று பிறகு முடிவு செய்து கொள்வார்கள்.

 

எங்களுக்கு நெருக்கடி தந்த மத்திய அரசை எதிர்த்து எந்த ஆதரவும் காங்கிரஸ் தரவில்லை என்று ஆம் ஆத்மி கூறுகிறார்களே?

காங்கிரஸ் கட்சியோடு ஆம் ஆத்மி உள்பட சில கட்சிகள் கொள்கைகளில் வேறுபாடாக இருந்தாலும் இந்த எதிர்க்கட்சிகளின் உறவை எந்த விதத்திலும் பாதிக்காது. பாஜக போன்ற பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை தவிர்த்து விட்டு பாஜகவை ஒழிப்பதே ஒரே குறிக்கோள்.

 

எங்களுக்கு ஆளுநர் நெருக்கடி தருகிறார்கள். காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு தரவில்லை. அப்படியென்றால் காங்கிரஸும் அதே மனநிலையில் தான் உள்ளதா என்று கேள்வி கேட்கிறார்கள்?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜகவை விட காங்கிரஸை எதிர்ப்பது தான் முதல் குறிக்கோள். ஏனென்றால், மற்ற மாநிலங்களில் போட்டியிடாமல், ஆம் ஆத்மி குஜராத்தில் மட்டும் போட்டியிட்டு காங்கிரஸ் வாக்கை சிதற வைத்தார். கெஜ்ரிவால் ஒருவரை தவிர மற்றவர்களால் எந்த ஆபத்தும் இல்லை. மம்தாவும் இதே தான் செய்தார். ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு கூட்டத்தில் பங்கேற்றது நல்ல விசயமாகத் தான் பார்க்க முடிகிறது. மேலும் மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கூட்டாட்சி தத்துவத்தை ராகுல் காந்தி பேசியிருக்கிறார். முதல் கூட்டத்திலேயே எல்லாவற்றையும் பேசமாட்டார்கள். அதனால் கெஜ்ரிவால் பொறுமையாக இருக்க வேண்டும்.

 

ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிகள் வலுவாக இருக்கிறதோ அந்த கட்சிகளுக்கு அதிக தொகுதி கொடுக்கும் நிலைமை வருகிறது. இதனால் காங்கிரஸ் ஆளாத நிலைமை வருகிறதே?

தெலுங்கானா, மத்திய பிரதேஷ், சத்திஸ்கர், ராஜஸ்தான் போன்ற 4 மாநிலங்களில் அடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற 3 மாநிலங்களை தவிர தெலுங்கானாவில் மட்டும் சந்திர சேகர ராவ் கட்சியையும் பாஜகவையும் எதிர்த்து மோத வேண்டியுள்ளது. இந்த ஒரு மாநிலத்தை தவிர மற்ற 3 மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அதனால், நாடாளுமன்ற தேர்தலில் எந்த மாநிலத்தில் பெரும்பான்மையான கட்சிகள் இருக்கிறதோ அவர்களுக்கு அதிக தொகுதி கொடுக்கப்படும். நமக்கு பாஜகவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 

பாட்னாவில் நடந்த கூட்டம் மோடியை வீழ்த்துவதற்காக அல்ல; அரசு கஜானாக்களை கைப்பற்றுவது தான். மேலும் இது பல தலைகளை கொண்ட ஓநாய்களின் கூட்டம் என்று சுமிருதி ராணி கூறுகிறாரே?

வெறிநாய்களுக்கு எதிராக ஓநாய்கள் கூடுவது ஒன்றும் தப்பில்லை. 

 

எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது மேலும் 300 இடங்களை கைப்பற்றும் என்று அமித்ஷா கூறுகிறாரே?

கர்நாடகாவில் படைபலமாக இருந்த பாஜக. வெறும் 66 சீட்டுகளை கைப்பற்றியது. இன்னும் சில இடங்களில் டெபாசிட் கூட இல்லாமல் போனது. ஆளுங்கட்சியாக இருந்த பாஜக டெபாசிட் வாங்கியது இதுவே முதல் முறை. அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நடைமுறையில் என்ன இருக்கிறதோ அதுதான் நடக்கும்.

 

பாட்னா கூட்டத்தை நிதிஷ் குமார், தேர்தலுக்கான திருமண ஊர்வலத்தை போல் நடத்தியிருக்கிறார் என்று ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் வைத்திருக்கிறார்?

பாட்னாவில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தது தான் அவர்களது பிரச்சனை. அதனால் யார் தலைவராக இருப்பார் என்பது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும்.

 

சிம்லாவில் அடுத்த கூட்டத்தில் வேறு சில கட்சிகள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பிரதான கட்சியான நவீன் பட்நாயக் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி நமக்கு பிரச்சனை வேண்டாம். மத்தியில் யார் வெல்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியினுடைய தங்கை தெலுங்கானாவில் கட்சி வைத்திருக்கிறார். அங்கு செல்வாக்கு அதிகம் உள்ள அவரும் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகா தேர்தலை போல் 4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

 

பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாமல் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்களே?

இந்திய அரசியலில் பாராளுமன்ற அமைப்பு முறை தான். அதனால் பாராளுமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மையாக இருக்கிறதோ அவர் தான் பிரதமராக இருப்பார். மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் தான் களத்தில் நின்றோம். அது போல் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. ராகுல் காந்தியோ, ப்ரியங்கா காந்தியோ பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கலாம். ஆனால், அது  கூட்டணி எதிர்க்கட்சிகளுக்கு ஏற்ப அது மாறலாம்.