தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டி பேசியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
திமுகவின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதியை குறிவைத்து அதிமுக, பாஜக தரப்பிலிருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். அவருக்கு அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது, கலைஞர் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி இவர்களைத் தவிர வேறு யாரும் கட்சியில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாரே, ஆனால் தற்போது நீங்களும் அதே மாதிரி தானே செய்கிறீர்களே என்று கூறியுள்ளாரே?
நீங்களும் கேள்வி எழுப்புங்கள், மக்கள் ஆதரிப்பவர்கள் முன்னே வரப்போகிறார்கள், ஜனநாயகத்தில் யார் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதே கலைஞர் முதல்வராக இவர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் பல திட்டங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார். அவசர நிலையின்போது அவரை எதிர்த்து அரசியல் செய்த காலமும் உண்டு. எனவே இது அனைத்தும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஜனநாயகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மக்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதுதான் முடிவு. அதற்காக அவர்களை மக்கள் புறக்கணித்தார்களா? அதுதானே முக்கியம்.
இன்றைக்குக் காங்கிரஸ் கட்சிக்கு கார்கே வந்துள்ளார். அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். இது மக்களுடைய முடிவு, நாளைக்கு திமுகவுக்கு ஒருவர் வருவார். இது கட்சிக்காரர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் வந்தபோது யாராவது எதிர்த்தார்களா? எடப்பாடியை பன்னீர் செல்வமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரே? எடப்பாடி மாதிரி திடீரென காலில் விழுந்தாரு திடீரென சேரில் உட்கார்ந்தாரே அதுமாதிரி யாரும் பதவிக்கு வரவில்லை.
76ல் மிசாவில் சிறைக்குச் சென்றவர் 2021ல் தான் முதல்வராக வந்தார். திடீரென கலைஞரோ, ஸ்டாலினோ இந்த இடத்துக்கு வரவில்லை. இவர்கள் வேண்டுமானால் அப்படி வந்திருக்கலாம். ஜெயலலிதா எதற்காக ஜெயிலுக்கு போனார். சொத்துக்குவிப்பு வழக்கில்., சொத்து என்ன தானாகவே வந்து குவிந்து விடுமா? அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான வழியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி வாரிசு என்று முதலில் பேசுவதற்கு முன்பு தன்னுடைய கட்சியின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.