Skip to main content

‘தொண்டர்களை மதிப்பதில் எம்.ஜி.ஆர்.! கண்டிப்பில் ஜெயலலிதா!’ - ஓ.பன்னீர்செல்வம் ஓஹோ!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

O. Panneerselvam is person who will appreciate like MGR Jayalalithaa!

 

“கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணங்கள் அனைத்தும் தொண்டர்களைப் பற்றியதாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் அங்கம் வகிப்பது ஓ.பி.எஸ். மட்டுமே!” என பெரியகுளத்திலிருந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அவரது விசுவாசி ஒருவர். மேலும் அவர், “வழிகாட்டும் குழுவில் அனைத்துச் சமுதாய மக்களும் இடம்பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் வேறு யாருக்கு வரும்?” என்று பெருமிதப்பட்டார். அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் சமுதாய ரீதியாக யார் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர்?  

 

சி.வி.சண்முகம் -வன்னிய குல சத்திரியர்
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  காமராஜ் - முக்குலத்தோர்
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி - கொங்கு வேளாளர்,
ஜெ.ஜெயக்குமார் - மீனவர்
ஜே.சி.டி.பிரபாகர் - கிறிஸ்துவ வன்னியர்
மனோஜ் பாண்டியன் - கிறிஸ்தவ நாடார்
முன்னாள் அமைச்சர் பா.மோகன் - பிள்ளைமார் 
மாணிக்கம் M.L.A -  தேவேந்திரகுல வேளாளர்
கோபாலகிருஷ்ணன் – யாதவர்

 

‘என்றும் ஒரே தலைவன்!’ என ஓ.பன்னீர்செல்வத்தை, தாங்கள் கொண்டாடுவதற்கான காரணங்களை, அவர்களே அடுக்குகின்றனர். நடந்தவற்றை, ஓ.பி.எஸ்.ஸின் வாய்ஸாகவும், தங்களது கருத்துகளாகவும் விவரிக்கின்றனர்.  
 

இனி கட்சியில் எது நடந்தாலும் ஓ.பி.எஸ் ஒப்புதல் இல்லாமல் நடக்க முடியாது! அது, ஓ.பி.எஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கையெழுத்து எனும் அதிகாரம்தான்! நடந்தது என்னவென்றால், ஒருபக்கமாகவே அனைவரும் சேர்வது அதிகரித்தது. இதுதான்,  ஓ.பன்னீர்செல்வத்தைச் சிந்திக்க வைத்தது. பொறுமையாக இருப்பதற்கும், அடங்கிப் போவதற்கும் வேறு வேறு அர்த்தம் உண்டு! அதன் வித்தியாசத்தைக் கடந்த வாரத்தில், ஓ.பி.எஸ் லேசாகக் காட்டினார்!! ஆடிப்போய்விட்டார்கள் பலரும்.. 


அனைத்தையும் மேலே இருக்கிறவர் பார்த்துக்கொள்வார் என்று ஆடியவர்களுக்கு, மேலே இருப்பவருக்கே என் பொறுமைதான், அரசியல் நகர்வைச் செய்வதற்கு வழிவகுக்கிறது! என்னையே அசைத்துப் பார்க்கிறீர்களா? என அவர் காட்டிய சிறு அசைவுதான், இன்று தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

ஆகஸ்டு 15-ம் தேதி சிறு நெருப்பாக எழுந்தது! ‘அதெல்லாம் ஒன்னுமில்லீங்க; அணைத்துவிட்டோம்!’ என்று சொன்னது, சில மூத்த தலைகள்! எரிமலை லேசாகப் புகையும்போது, எல்லாம் அமைதியாகவே தெரியும். அது வெடிக்கும் எரிமலையென்று அப்போது யாருக்கும் தெரியாது!! சமாதானம் பேச வந்தவர்கள், ஓ.பி.எஸ் பேசிய சில வார்த்தைகளால், ஆடித்தான் போனார்கள்! மூச்சுப் பேச்சில்லை!! அடுத்த நாள், வழக்கம்போல் சென்னையின் மாவட்டச் செயலாளர்கள், பகுதிகள் பட்டியலுடன் முதல்வரைப் பார்க்கப்போக, ‘போய், ஒருங்கிணைப்பாளரைப் பாருங்கள்’ என அவர் அனுப்ப, ஓ.பி.எஸ்.தானே! என்று அலட்சியமாக வந்த அவர்களிடம், ஓ.பி.எஸ். வெளிப்படுத்திய சிறு சீறல்தான் கட்சியின் டாப் டாபிக்காக மாறிப்பொனது. 

 

பகுதிப் பட்டியல் உள்ளது என மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்து தூக்கி எறிந்த ஓ.பி.எஸ், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினார். கனிவாக இருக்கவும் தெரியும், ஜெயலலிதாவைப் போல் கண்டிப்பாக இருக்கவும் தெரியும் என, அவர் கண்டிப்பைக் காட்டியபோது, முதன்முறையாக ஜெயலலிதாவைப் பார்த்தது போல், அவர்கள் வயிற்றுக்குள் பந்து உருண்டது! இப்போதுதான் உண்மையான தலைமையைப் பார்க்கிறோம் என்றெண்ணி, அனைவரும் தலைகுனிந்து நிற்க, ‘என்ன பார்க்கிறீர்கள்? கட்சித் தலைமை யாரைப் போடணும்னு முடிவு பண்ணும், நீங்க கிளம்புங்க! என்று அவர் சொல்ல, தலை குனிந்து வெளியேறியிருக்கின்றனர். 

 

அதே கண்டிப்பைத்தான், செயற்குழுவிலும் ஓ.பி.எஸ் காட்டினார்! ‘நான் அம்மாவின் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது என்றுதான் இத்தனை நாளும் பொறுமை காத்தேன். அதில் கை வைத்தால், இனி நான் யார், எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று காட்டுவேன்.’ என்று அமைதியாகச் சொன்னார், ‘இனி என் கையெழுத்தில்லாமல் கட்சியில் ஒரு அணுவும் அசையக்கூடாது என்று ஓ.பி.எஸ். சொல்ல, பலர் முகத்தில் ஈயாடவில்லை! மதிக்காத மாவட்டச் செயலாளர்களை மட்டுமல்ல, ஓ.பி.எஸ்.ஸின் சிறு சீறல், லேசான உறுமல், கட்சியின் மொத்த அமைப்பையும் அசைத்துள்ளது! என்ன செய்வது, ஏது செய்வதென்று தெரியாமல், ஆட்களை தூது அனுப்புவதும், வந்தவர்கள் அவர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிப்போவதும், சிலருக்கு சந்திப்பே இல்லை என திருப்பி அனுப்பப்படுவதும் வாடிக்கையாகிப் போனது. 

 

Ad

 

எதையும் எதிர்கொண்டு அடிப்பது ஒருவகை, நின்று நிதானித்து உறியடிப்பதுபோல், மொத்தமாக அடிப்பது ஒரு வகை!! ஓ.பி.எஸ் தற்போது உறியடித்துள்ளார்!! அவர் ஒன்றும் குருடரல்ல! கண்ணைக் கட்டிக்கொண்டே, அனைத்தையும் தன் அனுபவத்தால் அளந்தார், என்பதை தாமதமாக உணர்ந்தவர்கள் கலங்கி நிற்கின்றனர்!! இனி எது நடந்தாலும், அது ஓ.பி.எஸ்-ஸை சுற்றியே நடக்கும் எனப் பெருமையாக அங்குள்ளவர்கள் பேசுகின்றனர்! ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் என்னவென்பதை, ஓ.பி.எஸ் உணர்ந்து கையிலெடுத்துள்ளதால், அது இனி வரும் காலங்களில் கட்சியில் பலரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும், ஏன்? தேர்தல் வேட்பாளர் தேர்விலும், தேர்தல் கமிஷனுக்கு அளிக்கும் கடிதத்திலும் எதிரொலிக்கும் என்பதால், ஓ.பி.எஸ்-சின் பாலிசியால், மேல்மட்ட தலைகள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர்! முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,  எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடிக்கின்றனர். ஓ.பி.எஸ். விசுவாசிகளோ,  ‘விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை!’ போன்ற வார்த்தைகளால் வெடிக்கின்றனர்.