
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சென்னை கிண்டி பகுதியில் போலீஸாரால் சுட்டுபிடிக்கப்பட்ட சம்பவம் காலையிலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளரை கடத்திச் சென்று மிரட்ட கூலிப்படை கும்பல் ஒன்று முயற்சி செய்ததாக ஐந்து பேரை போலீசார் கைது செய்திருந்தனர். ஆதம்பாக்கம் பகுதியில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த ஆட் கடத்தல் வழக்கின் பின்னணியில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து திருநெல்வேலி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி மகாராஜாவை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4:15 மணியளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க வேண்டும் போலீசாரிடம் மகாராஜா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகனத்தை எடுக்க அனுமதித்த பொழுது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது பணியில் இருந்த உதவிக் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரவுடி மகாராஜாவை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். காயம் பட்ட ரவுடி தற்பொழுது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்தில் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் ரவுடி ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.