Skip to main content

தேவை ஏற்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் - கமல் பேச்சு!

Published on 20/11/2019 | Edited on 21/11/2019


ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சில தினங்களுக்கு முன்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சினிமா, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் கமல்ஹாசனின் பங்களிப்பை பாராட்டி, செஞ்சூரியன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக  சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த கமல், இதுதொடர்பாகவும் அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

உங்களோடு இணைந்து செயல்பட ரஜினிகாந்த் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த இணைப்பு எப்போது நடக்கும், அதனை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம்?

நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள். அது நல்லதுதான், ஆனால் அதை இந்த தேதி என்று கூறிப்பிட்டு சொல்ல முடியாது. நாங்கள் சொல்லியிருப்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் என்று தான் சொல்லியிருக்கிறோம். தமிழகத்திற்கு தேவைப்பட்டால் அதனை இணைந்து செய்வோம். இதுதான் அதில் இருக்கும் செய்தி. அதனை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதில் முக்கியமாக இருப்பது எங்களின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் என்பதை பார்க்க வேண்டும்.


இணைந்து செயல்படுவது என்பது இரண்டு கட்சிகளாக இணைந்து செயல்படுவதா அல்லது மக்கள் நீதி மய்யத்தில் ரஜினி இணைந்து செயல்படுவார் என்று புரிந்து கொள்ளலாமா?

இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லைங்க... நீங்கள் உங்கள் செய்தியை மட்டும் பார்க்கிறீர்கள், அதில் நல்ல செய்தியை விட்டுவிட்டு பரபரப்பான செய்தியை எதிர்பார்க்கிறீர்கள். நல்ல செய்தி என்னவென்றால் தமிழகத்திற்காக உழைப்போம் என்ற செய்திதான் அதில் இருக்கிறது. அதை விட்டுவிட்டு வேறு எதையும் நாம் பார்க்க தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. அந்த செய்தியை முதலில் நம்புங்கள். வேறு எதையும் உங்களுக்கு தெரியாமல் நாங்கள் செயல்படுத்த போவதில்லை என்பதையும் நீங்கள் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளீர்கள், அதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

எனக்கு கிடைக்கும் பட்டங்கள் பாராட்டுகளை விட இத்தனை ஆண்டுகாலமாக என்மீது காட்டப்படும் அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அது எத்தனை பரிசுகள், பாராட்டுக்களை விட மிக உயர்ந்தது, அதற்கு எல்லையே கிடையாது. நான் தமிழகத்திற்கான குழந்தை. பல்வேறு வயதுடையவர்கள் என்னை தூக்கி விட்ட காரணத்தால்தான் இன்று உங்கள் முன் நான் நிற்கிறேன். அவர்கள் எல்லாம் இல்லாமல் இது சாத்தியபட்டிருக்காது. எனக்கு நீங்கள் காட்டும் அன்பை தமிழகத்திற்கு நீங்கள் அனைவரும் காட்ட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். எங்கள் கட்சியை சேர்ந்த மகேந்திரன் ஒரு டாக்டர். நிஜ டாக்டர். கொடுத்து பெற்றதல்ல, படித்து பெற்றது. அவருக்கு டாக்டர் ஆக 5 வருடம் ஆனது. எனக்கு 60 வருடம் ஆனது. அந்த வகையில் நான் எதையும் பொறுமையாக கற்றுக்கொள்பவன். தமிழகத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகம் உள்ளது. அதற்கான முயற்சிகளை மக்கள் நீதிமய்யம் விரைவாக செய்யும் என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.