Skip to main content

பாஜகவுக்கு எதிராக முடிவெடுக்கும் துணிச்சல் அதிமுகவிற்கு எப்படி வந்தது? உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமிக்க பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தும் எடப்பாடியின் முடிவு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் எடப்பாடியின் இந்த முடிவை ரசிக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க. அரசின் எஜமானராக வர்ணிக்கப்படும் பா.ஜ.க., எடப்பாடியின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு எடப்பாடி நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட அனைத்தும் அதிரடி ரகங்கள் என்கிறார்கள் அரசுக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்கள்.
 

admk



மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட எடப்பாடி அரசு, தேர்தலை எதிர்கொள்வதற்காக அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு வாங்கும் வைபவத்தை துவக்கியது. இருந்தாலும், தேர்தலை மேலும் 1 மாதம் தள்ளிவைக்க விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, இதற்காக கடந்த வாரம் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் அவசர மனுவை தாக்கல் செய்ய வைத்தார். உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த நிலையில், தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார் எடப்பாடி. உடனே, தேர்தலுக்கான தேதியை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கிறோம் என உறுதியளித்தது மாநில தேர்தல் ஆணையம். இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும் என சில மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், இனியும் ஏமாற்ற முடியாது என்கிற நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து மூத்த அமைச்சர்களிடமும், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் ஆலோசனைகளை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
 

election



இது குறித்து விசாரித்தபோது, "இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை அமைச்சரவை கூட்டம் நடந்திருக்கிறது. கடந்த 7-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில்தான், நேரடி தேர்தலை ரத்து செய்து மறைமுக தேர்தலை நடத்த ஆலோசித்தனர் (நவம்பர் 9-12 தேதியிட்ட இதழில் இதனை பதிவு செய்திருக்கிறோம். இதனை முதலில் சொன்னது நக்கீரன்தான்). அதிகாரமிக்க மேயர் மற்றும் தலைவர் பதவிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு தாரை வார்க்க எடப்பாடி உள்பட அமைச்சர்கள் யாருக்குமே விருப்பமில்லை. தி.மு.க.வுக்கும் இதே மனநிலைதான் என்பதை எடப்பாடியிடம் ஏற்கனவே உளவுத்துறையினர் சொல்லியிருந்ததால் இதையெல்லாம் மையமாக வைத்துத்தான் அமைச்சரவையில் விவாதித்தனர். மறைமுக தேர்தலுக்கு ஒருமித்த கருத்து உருவானதால் கவர்னரின் ஒப்புதலை பெறுவதற்கான கோப்புகளை ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்தனர். அவரும் ஒப்புதலளித்தார். அதைத்தான் அரசின் கெஜட்டில் ஏற்றப்பட்டு தற்போது அரசாணையாக ரிலீஸ் செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
 

congress



அதேசமயம், 19- ந்தேதி கூடிய அமைச்சரவையில் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சில விசயங்களை உள்ளாட்சித் தேர்தலுக்காக மாற்றுவது என விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்து வரும் கடுமையான வரி உயர்வை மாற்றியமைத்து உயர்வுக்கு முந்தைய நிலையையே தொடர்வது , சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற அனுமதிப்பது, நாடாளுமன்றத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட 2000 ரூபாயை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்தனர். மறைமுக தேர்தல் குறித்து முந்தைய கூட்டத்திலேயே ஆலோசித்துவிட்டதால் இந்த கூட்டத்தில் அது குறித்து விவாதங்களே எழவில்லை. அதனால்தான், மறைமுக தேர்தல் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என ஓ.பி.எஸ். தெரிவித்தார் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சீனியர்கள்.

 

bjp



எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘இப்போதும் கூட உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் எடப்பாடிக்கோ அமைச்சர்களுக்கோ விருப்பமில்லை. அ.தி.மு.க.வின் 99 சதவீதத்தினரின் மனநிலையும் அதுதான். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதாவது, உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் அ.தி.மு.க.வினரின் தேவைகள் அனைத்தும் தற்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தினால் அவையெல்லாம் தடைபடும். மேலும், முழுமையான வெற்றிக்கும் உத்தரவாதம் கிடையாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை தி.மு.க. கைப்பற்றிவிட்டால் அந்த பக்கம் அ.தி.மு.க.வினர் எட்டிக்கூட பார்க்க முடியாது.

அத்துடன், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் அ.தி.மு.க.வினர் நடத்திய ஊழல்களும் அம்பலமாகும். இவையெல்லாம் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நெகடிவ்வாக மாறும் அபாயம் உண்டு. இதுபோன்ற காரணங்களால்தான் தேர்தலை நடத்த விருப்பமில்லை. ஆனால், இப்போதைக்கு வேறு வழியின்றி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானதால், உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற என்ன திட்டத்தை அமல்படுத்தலாம் என மூத்த அமைச்சர்களுடன் தீவிரமாக விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட தமது கூட்டணிக் கட்சிகள் நிறைய எதிர்பார்ப்பில் இருப்பதை எடப்பாடி விவரித்தார். எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநகராட்சிகளை கேட்கிறது என்பதையும் பட்டியலிட்டார்.


இதற்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் கடும் எதிர்ப்புக்காட்டினார்கள். ஒவ்வொரு அமைச்சரும் தங்களது மாவட்டத்திலுள்ள மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளில் அ.தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என விரும்பினர். கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. தங்களது மாவட்டத்தில் கூட்டணிக் கட்சி ஜெயித்து அதிகாரம் செலுத்தவும் அரசியல் செய்யவும் அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்கள். மேலும், தோழமை கட்சிகளின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவே திரும்பும். நம்முடைய வலிமையில் அவர்களை ஜெயிக்க வைத்தாலும் அல்லது அந்த இடங்களில் தி.மு.க. ஜெயித்தாலும் பாதிப்பு நமக்குத்தான். அதனால் எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாது.

இதற்கு கூட்டணி கட்சிகளை சம்மதிக்க வையுங்கள் அல்லது தேர்தலை நடத்தாமல் இருக்க வாய்ப்பிருக்கிறதா என யோசிக்கலாம் என அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும், "தேர்தலை நடத்தாமல் இருக்க இனியும் வழி இருக்குமான்னு தெரியலை. நடத்துவதாக இருந்தால் என்ன செய்யலாம்' என கேட்க, அப்போது முன்வைக்கப்பட்டதுதான் மறைமுக தேர்தல். "இந்த தேர்தலில், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைப் போல பெரும்பான்மை இடங்களில் நாமும், மீதியுள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகிற மாதிரி இடங்களை பகிரலாம். ஆனால், இதனை அமல்படுத்த நினைக்கும்போது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் நம்முடைய தோழமைக் கட்சிகளும் எதிர்க்கும் என்றும், இதனை எதிர்த்து யாரேனும் கோர்ட்டுக்குப் போனால் நல்லதுதான் என்றும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்தே மறைமுக தேர்தல்ங்கிற முடிவு எடுக்கப்பட்டது' என்று பின்னணிகளை விவரிக்கின்றனர்.


எடப்பாடியின் இந்த அதிரடி முடிவை அறிந்து அதிர்ச்சியடைந்த பா.ஜ.க. தலைமை, நேரடி தேர்தலை ரத்து செய்யக்கூடாது என எடப்பாடிக்கு கடிவாளம் போட்டது. அதில் மிரண்டு போன எடப்பாடி, டெல்லியின் கோரிக்கையை ஏற்பது போல நாடகமாடினார். அதற்காகத்தான் மேயர் உள்பட அனைத்து நேரடி பதவிகளுக்கும் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கும் சடங்கை நடத்தினார் எடப்பாடி (இதனையும் இரு இதழ்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியது நக்கீரன்). இதனையறிந்து அமைதியானது பா.ஜ.க. தலைமை. ஆனால், அடுத்த ஒரே வாரத்தில் நேரடி தேர்தலை ரத்து செய்து மறைமுக தேர்தலை கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பா.ஜ.க.வின் கட்டளைகளுக்கு எதிராக முடிவெடுக்கும் துணிச்சல் அ.தி.மு.க.வுக்கு எப்படி வந்தது? என்கிற கேள்வி அனைத்துக் கட்சிகளிடமும் எதிரொலிக்கவே செய்கிறது.

 

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "நேரடி தேர்தலை ரத்து செய்யக் கூடாது என டெல்லியின் கட்டளையை தொடர்ந்து அமைச்சர்களிடம் மீண்டும் விவாதித்தார் முதல்வர் எடப்பாடி. அந்த விவாதத்தில், "பா.ஜ.க.வின் கட்டளையை நாம் ஏன் ஏற்க வேண்டும்? பா.ஜ.க.வுக்கு நாம் அடிமை இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு நாம் தான் தலைமை. அப்படியிருக்க நம்முடைய அரசியல் முடிவுகளில் பா.ஜ.க.வை தலையிட அனுமதிக்கக்கூடாது' என அமைச்சர்கள் காட்டமாகவே வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அப்போது, "பா.ஜ.க.வின் விருப்பத்தை புறக்கணித்தால், அவர்களின் கோபத்துக்கு ஆளாகலாம்' என விவாதம் நடந்த நிலையில், "அதைப்பற்றி கவலைப்படாமல் மறைமுக தேர்தல்தான்ங்கிறதை வலியுறுத்துவோம். அதேசமயம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலுமுள்ள மொத்த வார்டுகளில் பெரும்பான்மை எண்ணிக்கையில் அ.தி.மு.க. போட்டியிடும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தோழமைக் கட்சிகளுக்கு மேயர் பதவி வழங்கப்படும்' என பா.ஜ.க. மற்றும் தோழமைக் கட்சிகளிடம் சொல்வோம். இதனை ஒப்புக் கொண்டு கூட்டணியில் அவர்கள் இருந்தாலும் கூட்டணியை முறித்துக்கொண்டாலும் நமக்கு நல்லதுதான். அ.தி.மு.க. கூட்டணி இல்லைன்னா ஒரு வார்டுல கூட பா.ஜ.க.வால் ஜெயிக்க முடியாது' என அமைச்சர்கள் சொல்ல, இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் அதற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார்கள்''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர்.

எடப்பாடி அரசின் மறைமுக தேர்தல் முடிவு குறித்து சென்னையின் முன்னாள் மேயரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘நேரடி தேர்தலோ மறைமுக தேர்தலோ எது நடந்தாலும் தி.மு.க.தான் அனைத்து இடங்களையும் ஜெயிக்கப்போகிறது. ஆனாலும், எடப்பாடி எடுத்த முடிவு சர்வாதிகாரத்தனமானது. 1996 தி.மு.க. ஆட்சியிலும், 2001 ஜெயலலிதா ஆட்சியிலும் நேரடி தேர்தல், 2006 தி.மு.க. ஆட்சியில் மறைமுக தேர்தல், 2011 ஜெயலலிதா ஆட்சியில் நேரடி தேர்தல் நடந்தது. 2016-ல் மீண்டும் மறைமுக தேர்தலை நடத்த சட்டத்திருத்தம் செய்தார் ஜெயலலிதா. இதனை சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்து பேசினேன். தேர்தல் நோட்டிஃபிகேசன் அறிவித்த மறுநாளே அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அடுத்த நாளிலிருந்தே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது.

உள்ளாட்சி அமைப்புகளின் இடஒதுக்கீடு, வார்டு வரையறை உள்ளிட்ட எதுவுமே எதிர்க்கட்சிகளுக்கு தெரியாத நிலையில்தான், இத்தகைய ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க. வழக்குப் போட்டது. நீதிமன்றத்தின் உத்தரவால் தேர்தல் தள்ளிப்போனது. அதற்கேற்ப ஜெயலலிதாவும் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக, அவகாசம் வாங்கியபடியே தற்போதைய சூழல் வரை கொண்டு வந்துள்ளார் எடப்பாடி. மறைமுக தேர்தல் என ஜெயலலிதா எடுத்த முடிவை, 2018-ல் நேரடி தேர்தல் என சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியவர் எடப்பாடி. அவர் நிறைவேற்றிய சட்டத்தை அவரே திருத்துகிறார். இரண்டு திருத்தத்துக்கும் அவர் சொன்ன காரணங்கள் போலியானவை அபத்த மானவை'' என்கிறார் காட்டமாக.

தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அரசகுமார் நம்மிடம், "அ.தி.மு.க. அரசின் இந்த முடிவு அதிர்ச்சியைத் தருகிறது. மறைமுக தேர்தல் என்றாலும் உள்ளாட்சி பதவிகளில் பா.ஜ.க. விரும்பிய இடங்களை எடப்பாடி ஒதுக்குவார். அதாவது, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் அங்குள்ள மொத்த வார்டுகளில் பெரும்பான்மை எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும். அதற்கேற்பத்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்காது போனால், கூட்டணி உடையும். பாஜக தனித்துப்போட்டியிட தயங்காது'' என்கிறார் அழுத்தமாக.

சென்னையின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், "இன்றைய சூழலில், நேரடி தேர்தலோ, மறைமுக தேர்தலோ தேர்தல் நடத்தப்பட வேண்டும். மறைமுக தேர்தல்தான் நிர்வாக வசதிக்கு உகந்தது'' என்கிறார்.

எடப்பாடியின் மறைமுக தேர்தல் முடிவில் அதிர்ந்து போயிருக்கும் தமிழக பா.ஜ.க.வினர், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்; தனித்துப்போட்டியிடுவோம். எடப்பாடிக்கு பாடம் புகட்ட வேண்டும் என தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் செயல்தலைவர் நட்டாவுக்கும் கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, மறைமுக தேர்தலை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீடு கேட்டு இந்திய குடியரசு கட்சியின் தமிழ்மாநில தலைவர் செ.கு.தமிழரசனும் கோர்ட்டில் வழக்கு தொடரவிருக்கிறார். அவரிடம் நாம் பேசியபோது, ""உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து துணைத் தலைவர் இடங்களுக்கும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதுதான் சமூக நீதி. இதனை அ.தி.மு.க. அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.

இடஒதுக்கீட்டை அமல் படுத்தாதுபோனால் கோர்ட் டில் வழக்குப் போடுவோம்'' என்கிறார். இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது எதிர்க்கட்சிகளுக்கு பல அதிர்ச்சிகளைத் தர முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.