Skip to main content

டிசம்பர் 6 பாரம்பரிய நெல் தினம்...174 பாரம்பரிய நெல் ரகம் மீட்ட நெல் ஜெயராமனின் நினைவு தினம்!

Published on 05/12/2019 | Edited on 06/12/2019


இயற்கையின் மீது காதல் கொண்ட நம்மாழ்வார் காவிரியில் இறங்கி நடந்த போது அவருடன் நடந்த இளைஞர் இரா.ஜெயராமன் மீது கொண்ட பற்றினால் பாரம்பரிய நெல் ரகங்களை நீ மீட்க வேண்டும் என்று சொன்னதோடு சில ரக நெல் விதைகளையும்  அவரிடம் கொடுத்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்படி திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரங்கம் கிராமத்தைச்  சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமன் தனது தேடல்களை  தொடங்கினார். ஒவ்வொரு நெல் ரகமாக தேடித் தேடி ஒவ்வொரு  ஊராக ஓடினார்.  இறுதியில் 174 பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரித்தார். சேகரித்த நெல்லை தனது வீட்டில் வைத்து கண்காட்சி  நடத்தவில்லை. மாறாக ஒவ்வொரு மே மாதமும் நெல் திருவிழாவை நடத்தி திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதையைக் கொடுத்து அடுத்த திருவிழாவுக்கு வரும் பொது 4 கிலோ நெல்லை வாங்கி  அடுத்தடுத்த விவசாயிகளுக்கு கொடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகளை தயார்படுத்திவிட்டார்.

 

nel jayaraman



இதனால் இவருக்கு குடியரசுத் தலைவர்  விருதும் மற்றும் பல விருதுகளும் கிடைத்தது. விருதுகளுக்காக நெல்லை சேகரிக்கவில்லை. என் மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இயற்கையாக விளையும் பாரம்பரிய நெல் வேண்டும் என்பதால் தான் சேகரித்து வருகிறேன் என்று தொடர்ந்து தனது சேவையை செய்து வந்தார். விவசாயிகளால் கைவிடப்பட்ட பழைய பாரம்பரிய நெல் ரகங்கள் கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, குள்ளக்கார், கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குடவாலை, காட்டுயானம், கூம்பாலை, குழியடிச்சான் போன்ற நெல் 174 நெல் ரகங்களை  சேகரித்தவர் கடந்த 2012 ம் ஆண்டு தனது வீட்டுக்குள் 1969 ம் ஆண்டு அறுவடையின் போது சாமிக்காக துணியில் முடிந்து வைத்த ஒரு படி கைவரச்சம்பா நெல்லை விதைத்து சுமார் 400 கிலோ அறுவடை செய்து கைவரச்சம்பா என்ற பாரம்பரிய நெல்லையும் மீட்டார்.

பாரம்பரிய நெல் விதைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முளைக்கும், விளைச்சலும் தரும் என்பதற்கு கைவரச்சம்பாவே சான்றாக இருந்தது. நஞ்சை விதைக்கும் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட வீரியமில்லா விதைகளால் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து இன்று தமிழகம் முழுவதும் நஞ்சில்லா உணவுக்காக பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வந்த நெல் ஜெயராமனுக்கு கொடிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மனிதனுக்கு எந்த நோய் வரக் கூடாது என்று 174 ரக பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தாரோ அவருக்கே அந்த நோய் வந்துவிட்டது. பாரம்பரிய நெல் ஜெயராமனை அந்த கொடிய நோயிலிருந்து மீட்போம் என்று உணர்வுள்ள அத்தனை உள்ளங்களும் கலங்கினார்கள். கைகொடுத்து துணைக்கும் நிற்கிறார்கள்.  கிட்னியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். நஞ்சில்லா உணவுக்காக போராடி விதைகளை சேகரித்த விவசாயி நெல் ஜெயராமனுக்கு சிகிச்சை என்றதும் நேரில் கூட சென்று பார்க்காமல் தனது உதவியாளர் மூலம் அப்பல்லோ நிர்வாகத்திடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் மருத்துவ செலவுகள் அத்தனையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் முதலில் வைப்புத் தொகைக்கு ரூ. 1 லட்சம் காசோலையும் வழங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி மருத்துவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தும் வந்துள்ளார். 

 

Rice



இந்த நிலையில் தான் தனக்கு மருத்துவ உதவி செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க வேண்டும் என்று நெல் ஜெயராமன் சொல்ல அப்பல்லோ வந்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் மருத்துவ உதவிக்கு நன்றிகள் என்று நெல் ஜெயராமன் சொல்ல.. ”அய்யா நீங்க இந்த நாட்டின் பொக்கிஷம்”  உங்களை காக்க  வேண்டியது எங்கள் கடமை. அந்த கடமையை தான் செய்திருக்கிறேன். அதுக்காக நன்றி சொல்லாதீங்க. உங்களைப் போன்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உங்க மருத்துவச் செலவு மட்டுமில்லை உங்க மகன் சீனிவாசராமின் முழு படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் பூரண குணமடைஞ்சுடுவீங்க என்று நெகிழ்ச்சியாக சொல்ல.. அவர் கைகளை பற்றிக் கொண்டார் நெல் ஜெயராமன்.

இதைத்தொடர்ந்து நடிகர்கள் சத்தியராஜ், சூரி, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.க. வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், அ.ம.மு.க கலைராஜன், டி.ஜி.பி. ராசேந்திரன் மற்றும் பலரும் போய் பார்த்து நலம் விசாரித்துச் சென்றனர். இந்த தகவல்கள் நக்கீரன் இணையத்தில் செய்திகளாக வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சென்று பார்த்து மருத்துவச் செலவை ஏற்பதாக சொன்னார்கள். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். இப்படி அனைவரும் சென்று பார்த்து அவர் மீண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் கொடிய நோய் அவரை உயிருடன் விட நினைக்கவில்லை. தொடர் சிகிச்சையில் இருந்த நெல் ஜெயராமன் 2018 டிசம்பர் 6 ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனைபேரும் நெல் ஜெயராமனை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அவரது இழப்பை விவசாயிகள் பெரிய இழப்பாக அனுசரித்தனர். ஆனாலும் அவர் செய்து வந்த அத்தனை பணிகளையும் அவரது அண்ணன் மகன் உள்பட அவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். அதனால் தான் இத்தனை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுத்த  நெல் ஜெயராமன் பற்றி பாடப்புத்தகத்தில் சிறு பகுதி  சேர்க்கப்பட்டிருந்தாலும் அவரது நினைவு நாளான டிசம்பர் 6 ந் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது நக்கீரன் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை டிசம்பர் 6 ந் தேதி அவரது சொந்த கிராமத்தில் மட்டுமல்ல கிரீன் நீடா அமைப்பினர் சென்னையில் அனுசரிக்க திட்டமிட்டு பிரபலங்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அழைப்பு கொடுத்துள்ளனர். மேலும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை அனுசரிக்கிறார்கள்.

 

rice



இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேல்  "நெல் ஜெயராமன் அவரது வாழ்க்கை முழுவதும் பாரம்பரிய நெல் தேடலுக்காகவே செலவிட்டார். அதனால் தான் 174 ரகங்களை மீட்டார். மீட்டதோடு விவசாயிகளுக்கு கொடுத்து மறு உற்பத்தியும் செய்ய வைத்துவிட்டார். அவரது இழப்பு இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு.  அவர் மீட்ட ரகங்களை தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செய்த பாரம்பரிய நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பதால் மறுபடியும் உற்பத்தி செய்ய அச்சப்படுகிறார்கள். அவர் மீட்ட பாரம்பரிய நெல் அரிசி மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும். அதனால் இன்று பணக்காரர்கள் அந்த ரகங்களை உற்பத்தி செய்தோ வாங்கியோ சாப்பிடுகிறார்கள்.

ஆனால்ஏழை மக்களுக்கு நஞ்சான உணவே கிடைக்கிறது. அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நஞ்சில்லாத இயற்கையாக விளையும் பாரம்பரிய அரிசி கிடைக்க அரசுகள் உதவி செய்ய வேண்டும். மேலும் பாரம்பரிய நெல் உற்பத்திக்கு உழவு செலவு உள்ளிட்ட செலவினங்களை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கினால் சில ஆண்டுகளிலேயே தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல் உற்பததி அதிகரிக்கும்.  மேலும் அவரைப் பற்றி அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சென்னையில் மாணவர்கள் மத்தியில் அஞ்சலி நிகழ்ச்சியை வைத்திருக்கிறோம். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பற்றி நடிகர்கள் சத்தியராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் சிறிய வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.  

ஒட்டுாமொத்த விவசாயிகளின் கோரிக்கை, நெல் ரகங்களை மீட்டுத்தந்த ஜெயராமனின் மறைந்த நாளான டிசம்பர் 6 பாரம்பரிய நெல் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பாரம்பரிய நெல் தினத்தில் பாரம்பரிய நெல் விளைச்சலில் சாதித்த விவசாயிகளுக்கு நெல் ஜெயராமன் பெயரில் விருது வழங்க வேண்டும். இதை தமிழ்நாடு அரசு ஏற்று கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார். நமது கோரிக்கையை விவசாயிகளும் முன் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது..இனி அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டும். 

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.