கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து பல்வேறு விஷயங்களை நக்கீரனிடம் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், சென்னையில் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையின் வரலாறு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
வெள்ளைக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்தையுமே பதிவு செய்துள்ளார்கள். இந்திய பெண்களோடு எந்தெந்த ஊரில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றார்கள் என்பதைக்கூட பதிவு செய்துள்ளார்கள். உதாரணமாக ஒரு குறிப்பைக் கூறுகிறேன். கி.பி.1630இல் சென்னை நகரத்தில் நாயக்கரிடமிருந்து ஏக்கர் கணக்கான நிலத்தை வெள்ளைக்காரர் பிரான்ஸிஸ் டே விலைக்கு வாங்குகிறார். எதற்கு அந்த வீணான இடத்தை வாங்குகிறாய் என்று கிழக்கிந்திய கம்பெனியில் இருந்தவர்கள் பிரான்ஸிஸ் டேவை திட்டுகிறார்கள். ஆனால், அவருக்கு அதற்கான அதிகாரம் இருந்ததால் எதிர்ப்பையும் மீறி அந்த இடத்தை வாங்குகிறார்.
இது பற்றி வெள்ளையர்கள் எழுதியுள்ள குறிப்பில், பிரான்ஸிஸ் டேவுக்கு மயிலாப்பூருக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணோடு அங்கு அவர் குடும்பம் நடத்திக் கொண்டிருந்ததால்தான், அவ்வளவு பெரிய இடத்தை அந்தப் பகுதியில் வாங்கினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்காலத்தில் அந்த இடம் மிகப்பெரிய இடமாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படி தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அந்த இடத்தில்தான் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. லண்டன் சென்று அங்குள்ள ஆவணங்களைப் படித்தால் இது போன்ற பல பொக்கிஷமான தகவல்கள் தெரியவரும்.