விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மனுநீதி குறித்து பேசியது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருமாவளவனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தின் மிகப்பெரிய சொத்தாக திகழ்கின்ற, எல்லா நாட்டு அரசியல் வரலாற்றையும் கற்று அறிந்தவரும், தன்னுடைய வாழ்க்கையே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அளித்தவருமான என் அருமை இளவல் தம்பி திருமாவளவனை ஆபாசப்படுத்துவதற்காக ஒரு கூட்டம் தற்போது புறப்பட்டுள்ளது. என் இளவல் தமிழ்நாட்டில் அதுபற்றி எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளிலும் அதுகுறித்து பேசவில்லை. ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பெரியார்வாதிகள் நடத்திய கூட்டத்தில் அவர் பேசுகிறார். அப்போது அவர்களிடம் பேசுகிறபோது நம் நாட்டில் என்னென்ன கொடுமைகள் இருந்தது, அதை எல்லாம் பெரியாரும், அம்பேத்காரும் எவ்வாறு ஒழித்தார்கள் என்ற செய்தியை விரிவாக எடுத்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக மனுநீதி குறித்து அவர் பேசினார். மனுநீதியில் இல்லாத எந்த ஒரு வார்த்தையையும் என்னுடைய தம்பி திருமா சொல்லிவிடவில்லை.
உங்கள் அனைவருக்கு தெரியும். நாம் எப்படி பிறந்தோம் என்று கூட அவர்கள் எழுதிவைத்துள்ளார்கள். பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் பிராமணர்கள் என்று, கழுத்தில் பிறந்தவர்கள் சத்ரியர்கள் என்றும், வயிற்றில் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் நம்மை அவாள் சூத்திரர்கள் என்று தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். நம்மை மட்டும் எழுதினாலும் பரவாயில்லை, ஆனால் பிராமண சாதியில் ஒரு பெண் பிறந்திருந்தாலும் அவளும் சூத்திரர் தான் என்று வரையறுத்து வைத்துள்ளார்கள். ஆக, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பெண்கள் அனைவரும் கட்டுப்பாடு அற்றவர்கள், அவர்களால் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று அருவருக்க தக்க வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள். அதைத்தான் திருமா சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு பேசியதை எடுத்து அவரை அவமானப்படுத்த பார்க்கிறார்கள். யாருக்காக அவர் போராடுகிறாரோ அவர்களும் சேர்ந்துகொண்டு இவருக்கு எதிராக போராடுகிறார்கள். அவர் சாதிக்காக மட்டும் அவர் பேசவில்லை. இந்த விவகாரத்தை குஷ்பு கையில் எடுத்துக்கொண்டுள்ளார். குஷ்புவை எனக்கு பிடிக்கும். ஒரு புரட்சிகர பெண்ணாகத்தான் அவர் இருந்தார்.
திருமணத்துக்கு முன்பே கற்பு பறிபோகின்ற வாய்ப்பு ஏற்படும், ஜாக்கிரதையாக இருங்கள் என்று பேசினார். அதற்காக அவர் மீது 62 காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு புரட்சிகர கருத்துகளை பேசிய அவர், பாஜகவுக்கு சென்ற பிறகு சாதி மதம் என்று பேச ஆரம்பித்துவிட்டார். இஸ்ஸாத்தில் பெண்களுக்கு எதிராக முத்தலாக் இருக்கிறது என்று கூறி அதனை தடை செய்ய சட்டம் கொண்டு வந்த அரசு மனுநீதியை ஏன் தடை செய்யக்கூடாது. பெண்களை அவமானப்படுத்தும் அதனை எதிர்த்து தடை சட்டம் கொண்டு வரலாமே, ஏன் அதற்கான முயற்சியினை யாரும் எடுக்கவில்லை. ஏன் எடுக்கவில்லை என்றால் பெண்கள் கீழானவர்கள் தானே என்ற எண்ணம் அவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது. தற்போது மனுநீதியே வெள்ளையன் ஒருவன் எழுதியது என்று கதை விடுகிறார்கள். எத்தனையோ சாஸ்திரிகள், சர்மாக்கள் எழுதிய மனுநீதி புத்தம் என்னுடைய நூலகத்தில் உள்ளது. எனவே அவர்களை யாரும் காதுக்கு பூ சுற்ற முடியாது. திருமா பிரமணன் ஆக பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை காயப்படுத்த விரும்புகிறீர்களா என்ற கேள்வியை அவரை நோக்கி அம்பை எய்பவர்களிடம் கேட்கிறேன். இந்த கேள்விக்கு அவர்களிடம் ஆம் என்ற பதில் இருக்காது. ஆனால் உண்மை அதுதான்" என்றார்.