சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சிப் பணி பதவியிலிருந்து விலகிய மூன்றே நாட்களில் அவர் தேர்தல் அதிகாரியாக எப்படி நியமிக்கப்பட்டார் என்ற கேள்வியை அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வைத்தனர். இதுதொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "மத்திய அரசு இதற்கு முன்பு இதே மாதிரியான நியமனங்களில் பலவித விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இது ஒன்றும் தற்போது நடைபெறுவதைப் போன்று பார்க்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற பல்வேறு நியமனங்களில் இத்தகைய விதிமீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உள்ளது.
தற்போதுதான் அது உச்சநீதிமன்றம் வரை புகாராகச் சென்று விசாரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேட்கும் எவ்வித கேள்விகளுக்கும் அவர்களால் சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை. இப்போதுதான் உச்சநீதிமன்றம் விழித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் சிரச்சேதம் செய்யப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமும் தற்போது உணர்ந்துள்ளது. அங்கே தொட்டு இங்கே தொட்டு தற்போது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அவர்களால் ஆன அயோக்கியத்தனத்தைச் செய்கிறது. அருண் கோயல் நியமனத்தின் மூலம் தற்போது இது வெட்ட வெளிச்சமாக மாறியுள்ளது.
உச்சநீதிமன்றமே அவர்களைக் கண்டிக்கின்ற அளவுக்கு மோடியின் ராம ராஜ்ஜியம் இருந்துகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் மோடி இந்நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தார்மீக தகுதியை இழந்துவிட்டார். காலியாக ஒரு பதவி இருக்கிறது என்றால் ஒருத்தரை ஏற்கனவே இருக்கின்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரைப் புதிய பதவியில் அமர வைப்பியா என்றுதானே நாட்டில் உள்ள அனைவரும் கேட்கிறோம். இன்றைக்கு உச்சநீதிமன்றமும் அதே கேள்வியைத்தானே கேட்கிறது. இதை நாம் கூறினால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதே மாதிரியான பதவிகளை இதே போன்று நிரப்பி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரசைப் பத்தி கேள்வி கேட்பது நாட்டில் ஒரு நோயாகவே மாறிப் போய்விட்டது.
இவர்கள் சரியில்லை என்றுதானே பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் காங்கிரசைச் செய்யவில்லையா என்று கேள்வி கேட்டு இவர்களின் செயலை ஒரு பகுதியினர் நியாயப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது பச்சை அயோக்கியத்தனம். தங்கள் மீதுள்ள தவற்றை மறைக்க அடுத்தவர்களைக் குறை சொல்லுவதைப் போன்றது. இதைத்தான் இந்த எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் பாஜக தொடர்ந்து செய்து வருகிறார்கள். தற்போது மக்கள் முன் சரியான முறையில் அம்பலப்பட்டுப் போய் உள்ளார்கள், நீதிமன்றத்திடமும் சரியான முறையில் மாட்டியுள்ளார்கள்.