சி.பி.ஐ தீவிரமாக களம் இறங்கி விசாரித்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, ஜவ்வாக இழுத் தடிக்க வைக்கும் பலவித டெக்னிக்குகளில் இறங்கியிருக்கின்றனர் பொள்ளாச்சி போலீசார். அதில் ஒரு டெக்னிக்தான் கடந்த 07-ஆம் தேதி இரவு ‘"பார்' நாகராஜ் கைது செய்யப்பட்டது. விஷயமும் இது தான், விஷமும் இது தான். கோட்டாம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் ‘பக்’ என்ற வகையைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்திருக்கிறான். பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் மகன் சபரீசன், 25 ஆயிரம் ரேட் பேசி அந்த நாயை வாங்கியிருக்கிறான்.
நாய் விற்ற காசை வாங்கும் பிரச்சனையில் ரம்ஜான் அன்று இரவு அந்த இளைஞனையும் அவனது நண்பர்களையும் சபரீசன் தூண்டுதலில் வெளுத்துக் கட்டிவிட்டார்கள் பார் நாகராஜ் ஆட்கள். இரண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கைது செய்து கோவை மத்திய சிறையில் தள்ளிவிட்டனர் பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார். ""இங்க தானுங்க சூட்சுமமே இருக்கு.
அடிதடி கேஸுங்கிறது சும்மா ஒப்புக்குத் தாங்க. பார் நாகராஜை உள்ளே தள்ளிட்டா, சி.பி.ஐ. விசாரணை தள்ளிப்போகும்னு எங்க ஆளுங்க பக்காவா ப்ளான் போட்டுட்டாங்க. அரெஸ்ட் ஆனவுடனேயே நெஞ்சு வலின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட்டானான் பார் நாகராஜ். உடம்பு நல்லாத்தான் இருக்குன்னு டாக்டர்கள்கிட்ட சர்டிபிகேட் வாங்கி, நாங்க கரெக்டா இருக்கோம்னு காண்பிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நெஞ்சு வலின்னு நடிச்ச பார் நாகராஜைவிட எங்க ஆளுங்க நல்லாவே நடிக்கிறாங்க''’என நம்மிடம் விரிவாகவே பேசினார் நமது போலீஸ் சோர்ஸ்.