Skip to main content

ஒரு குடம் தண்ணிக்கு ரோடு ரோடா அலையுறோம்... ஆனா இந்த அரசியல்வாதிங்க... பொதுமக்களின் கண்டன குரல்கள்...

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் நாங்க நான்கு பேர் தங்கியிருக்கோம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாள்தான் குளித்தோம். எங்களது உடைகளும் தண்ணீர் இல்லாமல் துவைக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு குளிக்காமல் போவதும், துவைக்காத உடைகளை மறுநாள் அணிந்து செல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறார் ஒரு இளைஞர். 

 

Water shortage


பல்லாவரத்தில் அதிகாலை 3 மணிக்கு சைக்கிள்களிலும், பைக்குகளிலும் பிளாஸ்டிக் குடங்களை கட்டிக்கொண்டு அலைந்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்கிறனர் பொதுமக்கள். டீ கிளாஸ்ஸில் டீ கொடுத்தப் பிறகு அதனை கழுவி சுத்தம் செய்ய தண்ணித் தட்டுப்பாடா இருக்கு... பிளாஸ்டிக் கப்பிலும் டீ கொடுக்கக்கூடாதுன்னு சொல்றாங்க என்கிறார் ராயப்பேட்டையில் டீக்கடை வைத்துள்ள ஒரு வியாபாரி. குளிப்பதற்காக தண்ணீர் வருவதற்காக அரை மணி நேரம் காத்திருந்தேன் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் மேடையிலேயே பேசியிருக்கிறார். ராயப்பேட்டை, வடபழனி, பல்லாவரம் மட்டுமல்ல, சென்னை மற்றும் புறநகர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இதே நிலைதான். 
 

சமைக்கும்போது, காய்கறிகளை சுத்தம் செய்யும்போது, காலையில் பல் துலக்கும்போது, குளிக்கும்போது, துணி துவைக்கும்போது, முகசவரம் செய்யும்போது தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும், தண்ணீரை சேமிப்பது எப்படி என்று இணையதளங்களில் பொதுமக்களுக்கு சொல்லப்பட்டும் வருகிறது. அதற்கு தண்ணீர் இருந்தாதானே இதையெல்லாம் செய்வதற்கு என்று பதில் கமெண்டுகளும் வருகின்றன. 
 

கடுமையான வெள்ளம் ஏற்படும்போது, கடுமையான புயல் ஏற்படும்போது எந்த ஆட்சி இருந்தாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், அமைச்சர்கள் வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவது மாதிரி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அதைப்போலவே தண்ணீர் தட்டுப்பாடு வரும் நேரத்தில் அதுகுறித்து ஏசி அறையில் ஒரு சில அமைச்சர்களை வைத்து பேசுவது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, உத்தரவிடப்பட்டுள்ளது என பேட்டி கொடுப்பது போன்றவைதான் நடக்கிறது. அரசின் இந்த போக்கு ஒவ்வொரு தெருவிலும் வைத்திருக்கும் காலி குடங்களை நிரப்புமா? 


 

 

ஒவ்வொரு எம்எல்ஏவும், அமைச்சரும் தங்கள் தொகுதியில் உள்ள எந்த பகுதிக்கு இன்று தண்ணீர் சென்றது. நேற்று எந்த பகுதிக்கு சென்றது. நாளைக்கு எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கணக்கு எடுக்கிறார்களா? வீதியில் இறங்கி சென்று தண்ணீர் நேற்று வந்ததா என்று விசாரிக்கிறார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

இந்த நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்களாம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார். 

 

o panneerselvamபல கிராமங்களில் குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல், பல கி.மீ.தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணிக்கு ரோடு ரோடா மக்கள் அலைகின்றனர். மக்கள் இந்த அளவுக்கு வேதனையை அனுபவித்து வரும் நிலையில், அது குறித்த எந்தவித கவலையும் இல்லாமல் துணை முதல்வர் புத்துணர்வு சிகிச்சை பெறுவது அவசதியம்தானா? இப்போது இது தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

இதுதொடர்பாக அதிமுகவினரை விசாரிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் கோவை வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடந்தது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர். 

 


 

 

 

 

Next Story

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Increase in water flow in Cauvery

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திற்கு வினாடிக்கு 34 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (19.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (18.07.2024) வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நான்காவது நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
arrested ADMK executive in Armstrong case she from party removed

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும்  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார்.

எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.