அதிமுகவில் உள்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சில வாரங்களாக தொடர் ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக தேர்தல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சில அமைச்சர்கள் மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளை திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழக அமைச்சர்கள் வீடுகளில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள். இதில் முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை நாங்கள் யாரும் எவ்வித தவறும் செய்யவில்லை என்று ரெய்டுக்குள்ளாகும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிமுக முன்னாள் அமைச்சர்களை பார்த்து பயப்படும் அளவுக்கா திமுக இருக்கிறது. இவர்கள் எல்லாம் திமுகவை அச்சுறுத்தும் விதத்திலா இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ஆளாக இவர்களை, இவர்களே நினைத்துக்கொள்வார்கள் போல! காழ்ப்புணர்ச்சி கொள்ளும் அளவுக்கு இந்த ஊழல் திமிங்கலங்களிடம் எந்த தகுதியும் இல்லை. ஒருவரை பார்த்து மற்றொருவர் பொறாமை கொள்ள வேண்டுமானால் அவருக்கு ஏதாவது திறமை இருக்க வேண்டும், பலமான ஆளுமை தன்மை இருக்க வேண்டும். இவர்களிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் கூட ஒன்றும் தேறாது. இவர்களை பார்த்து அப்புறம் யார் காழ்ப்புணர்ச்சி அடையப் போகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக வீறுகொண்டு எழுவதை பார்க்க முடியாமல் தமிழக அரசு எங்களை பழிவாங்க பார்க்கிறது. நாங்கள் யாரும் எவ்வித பிரச்சனைகளிலும் ஈடுபடாத நிலையில், வேண்டும் என்றே காவல்துறையை வைத்து தமிழக அரசு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாரே?
குடும்ப கட்டுப்பாடு செய்தவன் குழந்தை பிறக்கும் என்று சொல்வதை போல் அவரின் பேச்சு உள்ளது. அதிமுக வீறுகொண்டு எழும் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை. அதிமுக அப்படி திரும்ப வர வேண்டும் என்றால் அதிமுகவை தலைமை தாங்கும் தலைவர் யோக்கியவானாக இருக்க வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் தகுதி படைத்தவனாக இருக்க வேண்டும். யாருக்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும். அந்த தகுதி படைத்த யாராவது தற்போது அதிமுகவில் இருக்கிறார்களா என்று பாருங்கள். ஒருவர் கூட இல்லை. அப்புறம் எப்படி அதிமுக வீறுகொண்டு எழும். அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பாதி பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இவர்கள் கூச்சப்படாமல் அதிமுக எழுச்சி பெறும் என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிறது, ஒரு ஒன்றிய கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்துள்ளீர்களா? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதம் செய்து இருக்கிறீர்களா? அப்புறம் என்ன எழுச்சி வேண்டி கிடக்கிறது. ஏதாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் எதையாவது தொடர்ந்து உளறி வருகிறார்கள். இவர்களின் பேச்சை சீரியசாக யாரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அதாவது, வாய் இருக்கிறது என்று பேசி வைப்பார்கள்.
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை, இல்லை என்றால் குறைந்தது 15 இடங்களிலாவது நாம் வெற்றிபெற்றிருப்போம், அவர்கள் சரியான முறையில் நம்மை மதித்திருந்தால் நாம் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதை பற்றிய தங்களின் பார்வை என்ன?
அதிமுக கூட்டணி தர்மத்தை மதித்த காரணத்தால் தான் பாமகவுக்கு 23 சீட்டை கொடுத்தார்கள். முதலமைச்சர் வேட்பாளர் என்று தேர்தல் சமயத்தில் கூறி அந்த சமூக மக்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் நின்ற தோற்றுப்போன உங்களுக்கு இத்தனை சீட்டுக்கள் கொடுத்தே மிக அதிகம். நீங்கள் எல்லாம் கூட்டணி தர்மத்தை பற்றி பேசலாமா? பாமகவுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்? அந்த கட்சிக்கு உழைத்தவர்களை இதுவரை மதித்துள்ளீர்களா? ஸ்டாலின் செய்கிறார், நீங்கள் அவ்வாறு செய்துள்ளதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அப்புறம் எப்படி கட்சிக்காரர்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். நம்பி வந்தவர்களை மதித்தால்தான் நமக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். எனவே இவரின் பேச்சை காமெடியாக கடந்துவிட வேண்டும்.
பாமகவின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு பதில் அளித்து இருந்தார். அதில், " தேர்தலில் சீட் மட்டும்தான் நாங்கள் கொடுக்க முடியும், பொதுமக்கள் தான் வாக்களிக்க முடியும், அதை நாங்கள் எப்படி செய்யும் முடியும். பாமகவுக்கு தேர்தல் முடிந்த உடன் இப்படி பேசுவது வாடிக்கையான ஒன்று" எனத் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதைத்தானே அண்ணன் புகழேந்தி கூறினார், அவரை எதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள். வேறு ஏதாவது கட்சி விரோத கருத்தை அவர் கூறினாரா? அப்படி ஏதுவும் அவர் கூறவில்லையே, அப்புறம் என்ன காரணத்துக்காக அவரை அவசர அவசரமாக கட்சியை விட்டு நீக்கினார்கள். நான் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். புகழேந்தியை கட்சியில் சேர்த்துக்கொண்டு அவருக்கு பெரிய பதவியை தர வேண்டும். நீங்கள் பேசினால் சரி, அவர் பேசினால் தவறு என்றால் அதை யார் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே செய்த தவறுக்கு நான் சொல்வதையாவது செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள்.