தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. ஆளும் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறார்கள். அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
திமுக கூட்டணிக்காக மாநிலம் முழுவதும் நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். அவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது. மக்களின் மனநிலைகள் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்களா?
திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற சத்திய ஆவேசம் இந்த மக்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. இந்த அடாவடி ஆட்சியைக் குழித்தோண்டி புதைக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
நீங்கள் தற்போது திமுகவில் உறுப்பினராக இல்லை, இருப்பினும் உங்களைப் போன்று பலரும் திமுக ஆட்சி வர வேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்?
ஒரு கலாச்சார பாசிசம் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது. என்னுடைய மொழிக்கும், பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பேராபத்தை உருவாக்க மதவாதிகள் காத்துக்கிடக்கிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். நான் பேசுகின்ற மொழி என்ன என்பதையும் அவர்கள் தீர்மானிப்பார்கள். இப்படி நாம் உண்ணும் உணவில், நாம் உடுத்தும் ஆடையில், நாம் பேசும் மொழியைத் தீர்மானிக்க சதிகாரர்கள் நம்மை காவு கேட்கிறார்கள். அவர்கள் இங்கே காலூன்றக் கூடாது என்பதற்காக எங்களைப் போன்றவர்கள் தீர்க்க தரிசனமாக யோசித்து செயலாற்றி வருகிறோம். அவர்களுக்கு எடுபிடியாக இந்த எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே அந்த கொடுமுடியையும், இந்த எடப்பாடி பழனிசாமியையும் அகற்றும் தேர்தலாக வரப்போகின்ற தேர்தலை நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த வாரம் அமித்ஷா குமரி வந்தபோது, வருகின்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், காமராஜரை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது என்று கூறினார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
காமராஜர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியில்லாதவர்கள் இவர்கள். அவரை கொலை செய்ய கடுமையாக முயற்சி செய்தவர்கள். இதை யாரும் மறக்க மாட்டார்கள். தலைவர் காமராஜர் டெல்லியில் தங்கியிருந்தபோது, அவர் குடியிருந்த வீட்டை ஆர்எஸ்எஸ் அடிவருடிகள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அவரை கொல்ல வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்திற்காக இவ்வாறு செய்தார்கள். இன்றைக்கு அவர்கள் நல்லவர்கள் போல் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். அவரின் செயலை யாரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் ஏமாற்று வேலைகள் செல்லுபடியாகாது. வெள்ளாட்டின் தலையைக் காட்டி ஓநாயின் கறியை விற்பனை செய்யும் கயமைத்தனத்திற்கும் இவர்களின் செயலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
அதிமுக கூட்டணியில் தாங்கள் பெற்றுள்ள 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம் என்று பாஜக தலைவர் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்களே?
அதிமுக, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே அந்த 20 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய அடுத்த நிமிடமே அந்தத் தொகுதிகள் திமுக வசம் வந்துவிட்டன. தேர்தலை சந்திக்காமல் 43 தொகுதிகள் திமுகவின் மடியில் இருக்கிறது. இந்த 43 தொகுதிகளிலும் அவர்கள் தோற்பார்கள், நாங்கள் தோற்கடிப்போம். ஏனென்றால் அதிமுக மீது மேலாதிக்கம் செலுத்தி தமிழகத்தில் ஊடுருவலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது, நாங்கள் அதனை ஒருபோதும் நடக்க விடமாட்டோம்.