2016- தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளில் கடைசி 3 சுற்றுக்களையும் தபால் வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதுமே, அதிமுகவுக்கு உதறல் ஆரம்பித்துவிட்டது. அக்.04-ந்தேதி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் அந்த தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான இன்பதுரை.
3 தொகுதிகளில் வெற்றி-ஸ்டாலின்...
ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை அக்.23-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இது ஓரளவுக்கு ஆளுங்கட்சிக்கு நிம்மதி. இருந்தாலும், 23-ந்தேதி இடைத் தேர்தல் முடிவுகள் வரும்போது திமுக கூட்டணிக்கு 3 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்று ராதாபுரத்தையும் சேர்த்தே திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது திமுகவினருக்கு உற்சாகத்தையும், அதிமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
21-ந்தேதி நடக்கும் இடைத் தேர்தலில் எப்படியாவது விக்ரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஜெயிக்க வேண்டும் என்ற படபடப்பு அதிமுகவிடம் தொற்றிக் கொண்டது. அதனால் தான் பிஜேபியை ஒதுக்கியே வைத்திருந்த அதிமுக, இப்போது இறங்கி வந்து, பிஜேபி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது. அதுவரைக்கு வீராப்பு காட்டிய பிஜேபியும், "பக்கத்து இலை வரைக்கு வந்த பாயாசம் இப்போது நம்ம இலைக்கும் வந்துவிட்டது என அக மகிழ்ந்து இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என அறிவித்திருக்கிறது.
பிடிகொடுக்காத கிருஷ்ணசாமி...
அதேபோல் "பட்டியல் வெளியேற்றம், தேவேந்திர குல வேளாளர் அரசாணை என்ற கோரிக்கையை முன்வைத்து, அதிமுகவிடம் முறுக்கிக் கொண்ட புதிய தமிழகத்தையும் அதிமுக கடைசிவரை கண்டு கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுகபேச முயன்றபோது அவர் பிடிகொடுக்கவில்லை."
ஜான்பாண்டியனுடன் அமைச்சர்கள் பேச்சு....
பிஜேபிகிட்டயே ஆதரவு கேட்கும்போது அவர்கிட்டயும் பேசி வைப்போம் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை நெல்லையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் சந்தித்தனர். ஆனால், அவரும் "7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடுங்கள் ஆதரவு தருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.. இதனால் முதல்வரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என அமைச்சர்கள் திரும்பிவிட்டனர்.
ஏற்கனவே வேலூரில் 8 ஆயிரம் வாக்குகளில் அதிமுக தோற்றது. நாங்குநேரியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுக்கள் உள்ளன. இந்த இடைத் தேர்தலில் அவர்களை புறக்கணித்தால், இடைத் தேர்தல் மட்டுமின்றி, அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலில்(ஒருவேளை தேர்தல் நடந்தால்) சறுக்கலை சந்திக்க நேரிடுமோ? என்ற அச்சம் அதிமுகவிடம் எழுந்திருக்கிறது.
இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் மட்டுமின்றி தேவேந்திரகுல சமூகத்தினர் வசிக்கும் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் கறுப்புகொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.