Skip to main content

எல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை நீக்க வைத்தது, அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசிய வீடியோதான் எனச் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியானது, அவர் பதவிப் பறிப்புக்குப் பிறகான அந்த ஆடியோ. மணிகண்டனின் முன்னாள் பி.ஏ. காந்தி. அப்புறம் பி.ஏ.வான செல்வராஜ் இருவரும், அமைச்சரின் பதவிப் பறிப்புக்குப் பிறகு இப்படி பேசிக் கொண்டார்கள். 

 

admk



செல்வராஜ் : ஐயா வணக்கம். சொல்லுங்க.

காந்தி : முடிச் சிட்டீங்கல்ல. சந்தோஷமா?

செல்வராஜ் : என்ன முடிச்சிட்டீங்களா, சந்தோசமா? ஹலோ...

காந்தி : போட்ட ஆட்டத்துக்கு முடிச்சிட் டீங்களா அவரை?

செல்வராஜ் : நாங்க ஆட்டம் போட்டோம் நீங்க ஆட்டம் போடலை?

காந்தி : என்ன ஆட்டம் போட்டோம்?

செல்வராஜ் : நான் என்ன ஆட்டம் போட்டேன் நீ கண்ட?

காந்தி : என்ன ஆட்டம் போடலை?

செல்வராஜ் : நீ என்ன ஆட்டம் போடலை... உன்னை மாதிரி ஊரெல்லாம் ஏமாத்தி ஒளிஞ்சிருக்கேனா?

காந்தி : உன்னை மாதிரி பொம்பள வேலையையா நான் பாத்தேன். உழைச்சோமய்யா... அவருக்காக நைட்டும், பகலுமாக உழைச்சோம். உன்னை மாதிரி...

என இருவரும் மாறி மாறி தொடர்ந்து பேசுகின்றனர். ஒன்றரை நிமிட அந்த ஆடியோ கெட்ட வார்த்தைகளில் முடிகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல பதவி நீக்கப்பட்ட மணிகண்டனின் பலவீனங்களை இந்த ஆடியோ அம்பலப்படுத்தியுள்ளது. ஜெ.வால் 2016-ல் தகவல் தொழில்நுட்ப மந்திரியாக்கப்பட்டவர் டாக்டர் மணிகண்டன். பதவிக்கு வந்ததும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேபிள் நடத்துவதற்கான எம்.எஸ்.ஓ.வை தி.மு.க. நகரச் செயலாளர் கார்மேகத்தின் மருமகனுக்கு கொடுத்தது, மாலை நாளிதழின் தொலைக்காட்சிக்காக அதன் அதிபரிடம் வாங்கிய பல "சி'க்கள் ஆகியவற்றை அறிந்ததும் மா.செ. பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அமைச்சர் பதவி தொடர்ந்தது. ஜெ. உடல்நலன் குன்றி, மரணமடைய எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் புகுந்து விளையாடியது அமைச்சர் தரப்பு. அதனால், சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு அதிகமானது.

 

admk



ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஒன்றி யங்கள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகள் இதில், திருவாடனை, திருப்புல்லாணி, போகளூர், பரமக்குடி, நயினார்கோவில், கமுதி, கடலாடி, சாயல்குடி ஒன்றியச் செயலாளர்களும், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் நகரச் செயலாளர்களும் மந்திரிக்கு எதிர் அணிதான் தற்பொழுது வரை.. ஐ.டி. மந்திரியாக ஆனவுடனே அனலாக் முறையிலிருந்த கேபிள் டி.வி.யினை செட்டாப் பாக்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம் என செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் ஞயப எனப்படும் செட்டாப் பாக்ஸினை தேர்வு செய்து, ஒரு செட்டாப் பாக்ஸிற்கான விலை ரூ.1850 என தீர்மானிக்கப்பட்டு, அந்த விலையினை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மொத்தமாக கொடுத்துவிடுவதாகவும், மக்களுக்கு இலவச முறையில் விநியோகம் என அறிவித்ததால் சேனல் பேக்கேஜுடன் மாதம் ரூ.35 இணைத்து வாங்குவதெனவும் தீர்மானித்து தனக்கு வேண்டப்பட்டவரிடம் ஒப்பந்தத்தைக் கொடுத்தது மந்திரி தரப்பு. ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் அதிகமான ஞயப செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது வரை புழக்கத்திலுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகின்றது.


"இந்த ஒப்பந்தத்தால் ரூ.200 சி வரை கை மாறியது. அது சிங்கப்பூரிலுள்ள வங்கி ஒன்றில் உறவினர் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது அமலாக்கத்துறையால் மோப்பம் பிடிக்கப்பட்டு, இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். உறவினருக்கும் சம்மன் போனது. இதையறிந்த முதல்வர், நெருக்கடியைத் தவிர்க்க அரசு கேபிள் கழகத் தலைவராக தனக்கு தோதான உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார். இது குறித்து எடப்பாடியிடம் மணிகண்டன் குரல் உயர்த்தியபோது பதிலுக்கு, "எல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால் நான் ஒரு முடிவுக்கு வந்தாகணும். வருகின்ற வியாழனன்று சென்னையில் சந்தித்து இதுபற்றி பேசலாம்' என்றிருக்கின்றார்.

அதற்கு முன், " 2 லட்சம் கனெக்ஷன் கொண்ட தனியார் நிறுவனத்தை வைத்திருக்கும் அமைச்சர் உடுமலை, கேபிள் கழக தலைவராகிவிட்டார். அவர் முதலில் தன்னிடம் இருக்கும் கனெக்ஷன்களை அரசு கேபிளுக்கு வழங்க வேண்டும். அவரை நியமிப்பது பற்றி முதல்வர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை' என பிரஸ்மீட்டில் போட்டுத்தாக்க மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மணிகண்டன்''என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஆடம்பரத்திற்கும் அந்தரங்கத்திற்கும் பயன்படுத்த நினைத்த அமைச்சர் பதவி எனும் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டு, பவர் இழந்திருக்கிறார் மணிகண்டன்.