தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. வழக்கு ஒன்றில் இவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும் அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இரண்டு அமைச்சர்களுக்கு பதிலாக புதிதாக இரண்டு பேரை நியமிக்க எடப்பாடி பழனிசாமி எண்ணி வருகிறார். தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே புதிய அமைச்சர்களை நியமிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தனது கோஷ்டியைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளராம். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லையாம்.
தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, ராஜன் செல்லப்பா, செம்மலை உள்ளிட்டோர் அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்புகள் எதுவும் வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அதுகுறித்து கடிதம் கொடுத்திருந்தார். இதுபற்றி அப்போது விசாரித்தபோது, அமைச்சர் பதவியை அவர் எதிர்பார்க்கிறார் என்று கூறப்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று குரல் எழுப்பிய ராஜன்செல்லப்பா, எடப்பாடி பழனிசாமி தனக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவியை வழங்குவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். அமைச்சராவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு உள்ளது என்று செம்மலை தரப்பு நினைக்கிறதாம். ஆனால் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.
இந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு போட்டி நடப்பதால், வெளிநாட்டு பயணத்திற்கு முன்பே புதிய அமைச்சர்களை தேர்வு செய்து பதவியேற்க வைத்துவிட்டால், பதவி கிடைக்காதவர்கள், தான் வெளிநாட்டில் இருக்கும்போது ஏதாவது சிக்கல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. ஆகையால் அமைச்சரவை விரிவாக்கம் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் முடிந்த பின்னர் இருக்கும் என்கிறார்கள் அதிமுகவினர்.