மதிமுக தலைவர் வைகோ, கலைஞருடனான தன் நெகிழ்ச்சியான தருணங்களை கடந்த ஆண்டு ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு பகுதி...
"நான் திமுகவில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு முறை சிகிச்சைக்காக வேலூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த சமயம் கலைஞர் சுற்றுப் பயணத்துக்காக திருநெல்வேலி வருகிறார். நான் டாக்டரிடம் சொன்னேன், "நான் செல்ல வேண்டும், தலைவர் என் ஊருக்கு வருகிறார்" என்று. டாக்டர் சொல்லிவிட்டார், "நீங்கள் இன்னும் ஒன்றரை மாதம் எங்கும் செல்லக்கூடாது...". நான் கேட்கவில்லை, புறப்பட்டுவிட்டேன். எந்த ரயில் நிலையம் வந்தாலும் கலைஞர் வெளியே வருவார், கழகத் தோழர்களை சந்திக்க. சங்கரன்கோவில் ரயில் நிலையம் வந்தது, கலைஞர் வெளியே வந்தார். நான் சால்வையோடு நின்று கொண்டு இருந்தேன். தலைவர் பார்த்தார். என்னை ரயிலில் ஏறச் சொன்னார், நானும் ஏறினேன். பிறகு என்னிடம் கேட்டார் 'என்ன இவ்ளோ மெலிந்து போய்ட்டீர்கள்?'. நான், 'இல்லை கொஞ்சம் உடம்பு சரியில்லை' என்றேன்.
பிறகு குற்றாலத்துக்குச் சென்று அறையில் தங்கினோம். கலைஞரின் பர்சனல் டாக்டர் என் அறைக்கு வந்தார். 'நீங்கள் என்ன கலைஞர்க்கு நெருக்கமானவரா?' என்றார். 'இல்லை' என்றேன். டாக்டர் சொன்னார், 'அவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிற்று' என்றார். பிறகு எல்லாரும் ஊருக்குச் சென்று விட்டனர். கவிஞர் கருணாநந்தமிடம் இருந்து அழைப்பு வருகிறது. 'முதலமைச்சர் உத்தரவு நீங்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு போக வேண்டும்' என்கிறார். நான் உடனே சி.எம்.சி.க்கு சென்றேன். நான்கு வாரங்கள் கழித்து கலைஞர் வேலூர் வந்தார். சால்வை கொண்டு வரவேற்றேன். அவர் அப்பொழுது ஒன்றும் பேசவில்லை. பிறகு தனியாய் அழைத்து "நீ எப்படி சி.எம்.சி. வந்த தெரியுமா? டாக்டர்கிட்ட பேசிட்டுதான் உங்களை அங்க போகச் சொல்லும்படி சொன்னேன் தெரியுமா?" என்றார். "இது வரைக்கும் உங்களுக்கு நான் கடிதம் எழுதினது இல்லை. 'தாய் என்று சாலம் பரிந்து' என்று தொடங்கி ஏழு பக்கம் எழுதி உங்களுக்கு கடிதம் அனுப்பினேன் அண்ணன்" என்றேன். நலம் விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்.
பிறகு ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் சென்றேன். கருப்பணன், கலைஞரின் பி.ஏ "சார் என்ன சார் இது... வேலூரில் வந்தாரு துப்பாக்கி எடுத்து சுடாத குறைதான். வைகோ கடிதம் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள என் டேபிள் வரணும் என்றார். நாங்க எப்படியோ கண்டுபிடிச்சு வச்சிட்டோம்" என்றார். 1988ஆம் ஆண்டு 'ரத்தம் கசியும் இதயம்' நூலுக்கு அணிந்துரை எழுதினார், 'என் தம்பிக்கு உடல் நலம் குறைவு என்று பதறிப்போனேன். வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன், அவன் குணமானான், அன்று வரை அண்ணனாக இருந்த நான் அவனுக்கு தாயும் ஆனேன்' என்று எழுதினார். கலிங்கப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வந்த என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நன்றி என் உதிரத்தோடு கலந்திருக்கிறது."