அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததையொட்டி நேற்று (01.12.2021) சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, கட்சியின் மற்ற நிர்வாகிகளும் அவரை வாழ்த்தினர்.
இந்நிலையில், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனின் அரசியல் பயணம் குறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அப்போது, ‘தமிழ்மகன் உசேன் பள்ளி, கல்லூரி படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்துவந்தார். பின்னர் குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்ததும் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார் தமிழ்மகன் உசேன்.
பின்னர் திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். மூலம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் வேலை கிடைத்தது. இந்நிலையில், தமிழ்மகன் உசேன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு 24 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச்செல்லும் போது, ரோடுகளில் மக்கள் கூடி நிற்பதைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர்களிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து நீக்கிவிட்டனர் என அவர்கள் கூறியதைக் கேட்ட தமிழ்மகன் உசேன், தான் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு, ஒரு வெள்ளை பேப்பரில் ‘சர்வாதிகார ஆட்சியில் அரசு பதவி வேண்டாம்’ என்று தனது ராஜினமா கடிதத்தை நடத்துனரிடம் எழுதிக் கொடுத்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு நாகர்கோவில் வந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்டத்திலுள்ள 101 எம்.ஜி.ஆர். கிளை நிர்வாகிகளை அழைத்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவைக் கண்டித்து தமிழ்நாட்டிலே முதல் தீா்மானம் போட்டார். அதன் பிறகு இரவோடு இரவாக சென்னை சென்ற அவர், எம்.ஜி.ஆரை சந்தித்து அதிமுக தொடங்கும்வரை அவருடனே இருந்தார்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்குவதற்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியமான 11 பேரில் 4வது கையெழுத்தை தமிழ்மகன் உசேன் போட்டார். அதன்பிறகு அதிமுகவின் குமரி மாவட்ட முதல் மா.செ.வாக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அப்போது காங்கிரஸ் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தில் பட்டித்தொட்டியெல்லாம் அதிமுகவைக் கொண்டு சென்று கிளைகள் அமைத்து எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.
பின்னர் எம்.ஜி.ஆர். மறைந்ததும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இணைந்தார். அதன் பிறகு ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றியதும் ஜெயலலிதாவுடன் இணைந்து அதிமுகவில் தொடர்ந்தார். பின்னர் அதிமுகவில் ஜூனியர்கள் தலைதூக்க, சீனியர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கோலோச்சிய தளவாய் சுந்தரத்தால் பெரிதும் ஓரங்கட்டப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருகட்டத்தில் அரசியல் முகமே தெரியாத அளவுக்குத் தள்ளப்பட்டார்.
மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தும் தமிழ்மகன் உசேன் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் கேட்பதும், வட்டிக்குப் பணம் வாங்கியதும், இதனால் அவர் வசித்த வீடு வங்கி ஏலத்திற்குப் போகும் நிலை வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் கோலோச்சிய அவர், ஜெயலலிதா காலத்தில் கண்ணீா் வடித்ததைப் பத்திரிகை செய்திகளில் பார்த்த ஜெயலலிதா, தமிழ்மகன் உசேனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பதவி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவி என கொடுத்து அவரை ஆறுதல்படுத்தியதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒன்றையும் வழங்கினார்.
தன்னுடைய 68 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று அதிமுகவின் அவைத்தலைவராக, அதுவும் தற்காலிக தலைவராகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என தமிழ்மகன் உசேன் குறித்து நினைவுகூர்ந்தனர்.