Skip to main content

அரசாங்கம் தனக்குக் கிடைத்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுள்ளது... கரோனா விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

gh


தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவி வரும் நிலையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் காணொளி காட்சி மூலமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "கடந்த இரண்டரை மாதமாகக் கரோனா நோய்த் தாக்குதல் தமிழகத்தில் தீவிரமாக இருந்து வருகின்றது. நாட்டின் பிற மாநிலங்களில் எல்லாம் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு நிலைமை சீராகி வருகின்ற போது, தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் நோய்த் தொற்றைப் பார்த்துவிட்டு நாம் எப்படி இயல்பு நிலை பற்றி யோசிக்க முடியும்.
 


இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இன்றைக்கு இந்திய நாடே தமிழ்நாட்டின் சூழ்நிலையைப் பற்றி பேசும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்காமல் தமிழக அரசு திணறிக்கொண்டு இருக்கின்றது. மக்கள் கரோனா நெருக்கடியில் இருந்து தமிழக அரசு தங்களை மீட்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், நோய்க் குறித்த போக்கை மறைக்கின்ற அரசின் நிலை மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றது. இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகத்தான் உங்களை எல்லாம் அழைத்து காணொளி காட்சி மூலமாகப் பேசிக்கொண்டு இருக்கின்றேன். 

இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதைத் தவறு என்று சாதாரணமாக நாம் கடந்துவிட முடியாது. அரசின் பொறுப்பற்ற தனத்தால் பல்லாயிரக்கணக்காணவர்கள் தினமும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. இன்றைக்கு நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 15 தேதி ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நோய்தொற்று இன்று பத்து சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 பேரை பரிசோதனை செய்தால் அதில் ஒருவருக்கு கரோனா என்ற நிலை உருவாகிவிட்டது. நோய்தொற்றின் எண்ணிக்கை 11 நாட்களில் இரண்டு மடங்காகி வருகின்றது. இதைத் தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் வேறு எந்த நகரத்தைக் காட்டிலும் சென்னையில் நோய்ப் பரவல் அதிகம் இருக்கின்றது. 
 


தில்லியில் நோய்த்தொற்று 900 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தாலும், சென்னையில் தினமும் 1500க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் 475 பேர் நோய்தொற்றால் இறந்திருப்பதாகவும் அது 0.7 சதவீதம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அரசாங்கம் எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கின்றது என்பது இதன் மூலம் தெரிகின்றது. தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களில் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்குப் பதற்றமோ படப்படப்போ வந்ததாகத் தெரியவில்லை. அரசாங்கம் தனக்குக் கிடைத்த வாய்ப்பை எல்லாம் தவறவிட்டுள்ளது. முதலமைச்சரின் பொறுப்பற்ற தனத்தால் இன்றைக்குத் தமிழகம் இந்தியாவிலேயே அதிக நோய்த்தொற்றுள்ள இரண்டாவது மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது" என்றார்.