புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் வேம்பங்குடி, மேற்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ். 18 வயதுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. 10- ஆம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துமுடித்த போது 'ரோபோ' சார்ந்த படிப்புக்கு ஆசைப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பைத் தேர்வு செய்து சேர்ந்தார். முதல் வருடம் முடித்த பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளை புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்கிறார். இறுதி ஆண்டு மாணவர்.
தனது வயது, படிப்பைக் கடந்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக எளிமையாக, மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் பயனுள்ளதாக பல அரியவகை கருவிகளை உருவாக்கிச் சாதனை படைத்து பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு பல நிறுவனங்கள் வேலைக்கும் அழைத்துள்ள நிலையில், தற்போது சென்னை ஐஐடி நிறுவனம் சிவசந்தோஷுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது.
இந்த நிலையில், மாணவர் சிவசந்தோஷை அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, "சிறு வயதில் இருந்தே ரோபோ மேல அதிக பற்றுண்டு. அதனால தான் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) தேர்வு செய்தேன். தொடர்ந்து கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் இதே படிப்பை முடித்துள்ள எங்க ஊர் அண்ணன் சீனிவாசனுடன் இணைந்து புதிய கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். முதலில் பேசும் ரோபோவை உருவாக்கி கரோனா விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டேன்.
பலரது பார்வையும் எங்கள் மீது பட்டது. தொடர்ந்து கரோனா தொடங்கிய போது தானியங்கி உடல் வெப்பநிலை அறிந்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து ஒரு திருமண நிகழ்ச்சியில் வைத்தோம். பார்த்தவர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் செல்ஃபோன் மூலம் இயக்கக் கூடிய நகரும் ரோபோவை உருவாக்கி கரோனா வார்டுகளில் யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு போய் கொடுக்கும் வகையில் செயல்படுத்தினோம். பிறகு இதை உருவாக்கப் பொருளாதார உதவிகளை எங்கள் ஊர் அண்ணன்கள் பார்த்திபன் மற்றும் சரவணன் செய்துகொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
அதன்பிறகு, திறந்த வெளியில் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றும் கிருமிகளை அழிக்கும் 'யுவி லைட்' மூலம், கரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். இதையும் இணையம் மூலம் வெளிப்படுத்திய போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் (பொருட்கள் விற்பனை செய்யும்) நிறுவனம் வாங்கிச் சென்று இப்போது பல ஆயிரம் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.
அதன் பிறகு வளிமண்டலத்தில் உள்ள தட்பவெப்ப நிலையை அறிய 2.5 செமீ சதுர அளவில் 18 கிராம் எடை கொண்ட சிறிய கருவியை உருவாக்கி அதன் மூலம் தட்ப வெப்பம் அறிந்து பயிர்சாகுபடி செய்வது குறித்த ஆய்வு செய்துள்ளேன். மேலும், விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய சொட்டு நீர் பாசனத்திற்கான கருவியை (சூரிய ஒளியில் இயங்கும்) உருவாக்கினேன். அதேபோல சூரிய ஒளி மூலமே நேரடியாக தண்ணீரை சூடாக்கும் கருவியைக் கண்டுபிடித்தேன். இதை அறிந்த சென்னை ஐஐடி நிறுவனம் என்னை அழைத்துப் பாராட்டி அந்த இயந்திரத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வேலை தர முன்வந்துள்ளது.
இதே போல இன்னும் பல உபகரணங்களை உருவாக்குவதும் கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோ பற்றிய வகுப்புகள் எடுப்பதுமே என் லட்சியம். இப்பவும் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையவழியில் ரோபோடிக் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன்" இவ்வாறு அந்த மாணவர் கூறினார்.
கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தினால், இதுபோல இன்னும் பல ஆய்வாளர்களை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.