‘எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா’ காலக்கட்டத்தில், அஇஅதிமுக எதிர்கொண்ட துரோக வரலாற்றை விரிவாகவே பார்த்து வருகிறோம்! இந்த வரிசையில் அடுத்து வருவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2018-ல் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன். இவருக்கும் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் என்ற தகுதியோடு அதிமுகவுக்குள் நுழைந்த இவரால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக முடிந்தது.
2011-ல் சசிகலாவோடு சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்களையும் அதிமுகவிலிருந்து விலக்கி வைத்த ஜெயலலிதா, தான் உயிரோடு இருந்தவரையிலும், தினகரனை போயஸ் கார்டன் பக்கம் தலைகாட்டவே விடவில்லை. இந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்ட தினகரனை, ஜெயலலிதா மறைந்ததும், தன்னுடைய சுயநலத்துக்காக, தண்டனை பெற்று சிறை செல்வதற்கு முன்பாக, 2017-ல் அவசரகதியில் கட்சியில் சேர்த்து, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆக்கினார் சசிகலா. இந்த நடவடிக்கையை மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டதால், ‘கழகமே கோவில்; அம்மாவே தெய்வம்’ என்று அக்கட்சியினர் உச்சரித்து வந்ததெல்லாம், பொய்யாகிப் போனது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், அதிமுக, திமுக வேட்பாளர்களை, டோக்கன் மூலம் வீழ்த்தி, தினகரன் எம்.எல்.ஏ. ஆனதெல்லாம், வரலாற்றில் பதிவான வீரதீர சாகசமே!
அக்கட்சியின் அம்சமே துரோகங்கள் தொடர்வதுதானே! சசிகலாவும்கூட திடீர் பொதுச் செயலாளராக முடிந்தது. ஆனாலும், நான்காண்டு சிறைத்தண்டனை தீர்ப்பால், 45 நாட்களிலேயே முதலமைச்சர் கனவு தவிடுபொடியானது. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி இழைத்த பெரும் துரோகமாகப் பேசப்படுகிறது.
இந்த நேரத்தில், ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ‘தர்மயுத்தம்’ வேறு நினைவுக்கு வருகிறது. 2016, டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறந்துவிட, மறுநாள் 6-ஆம் தேதி முதலமைச்சரானார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா முதலமைச்சராவதற்கு அவர் இடைஞ்சலாக இருக்க.. கட்டாயப்படுத்தி முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறக்கப்பட்டார். பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். பிறகுதான், சுதாரிப்பாகி தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ். கூவத்தூர் விடுதியிலோ, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி, சசிகலா முன்னிலையில், அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். பின்னாளில் சமாதானமாகி, துணை முதல்வர் பொறுப்பு கிடைத்தாலும், தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவியைத் தட்டிப்பறித்ததை, இன்றுவரையிலும் ஜீரணிக்க முடியாதவராகவே இருக்கிறார் ஓ.பி.எஸ்.
‘சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்பதே லட்சியம்’ என்று மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்ட சசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஏனிந்த கோபம்? சிறையிலிருந்து வெளிவந்த தனக்கு உரிய மரியாதையை ஆட்சியாளர்கள் தரவில்லை என்பது சசிகலாவின் ஆதங்கமென்றால், அதிமுகவை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்பது தினகரனின் திட்டமாக இருக்கிறது.
‘அதிமுகவினர் போற்றிப் பாட வேண்டிய மரியாதைக்குரிய தலைவரா சசிகலா?’ என்று கேட்டால், அந்த அடிமட்டத் தொண்டனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வருகிறது. “அதிமுக என்ற கட்சி எம்.ஜி.ஆர். சிந்திய கண்ணீரில் அல்லவா தோன்றியது? ஆட்சிக்கு வருபவர்கள் தூய்மையானவர்களாகவும், தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்றுதானே இந்தக் கட்சியை ஆரம்பித்தார்? லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சிதானே அவரது லட்சியமாக இருந்தது? அதிமுக என்ற கட்சி மீதும் ஆட்சி மீதும் இத்தனை குறியாக இருக்கிறார்களே? கட்சியில் ‘முதல் மரியாதை’ கிடைத்தே ஆகவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்களே? ஆதாயத்துக்காக அனைத்தையும் பண்ணிவிட்டு, ‘கட்சியையும் ஜெயலலிதாவையும் பாதுகாத்தோம்’ என்று தியாகப் பட்டம் சூட்டிக்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ‘எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்’ என்ற கட்சிக் கொள்கையை சசிகலாவும் தினகரனும் எந்த விதத்தில் கடைப்பிடித்தனர்?” என்று திருப்பிக் கேட்கிறார்.
அதையும் பார்த்துவிடுவோம்!
தொடரும்..
\