இன்று (16.10.2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன் ரிஷ்வான் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர், மாதவரம் நெடுஞ்சாலையில் முறையே 460 மீ, 140 மீ அளவிலும் - பேப்பர் மில்ஸ் சாலை எஸ்.ஆர்.பி காலனி 8வது தெரு முதல் அண்ணா சிலை வரை 300 மீ - வ.உ.சி நகர் மற்றும் மதுரைசாமி மடம் வழியாக ஆண்டியப்பன் தெரு வரை 1020 மீ - ஆர்.கே சிண்டிகேட் நகரில் 250 மீ - ராஜாஜி நகர் 1வது மெயின் சாலையில் 350 மீட்டர் அளவுக்கு மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும், வார்டு 68ல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை துவக்கி வைத்து, ஜி.கே.எம் காலனியில் உள்ள மயான பூமியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் காவலர் அரை (Care Taker Room) கட்டும் பணியையும் துவக்கி வைத்தார்.
அதேபோல், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில், தொகுதியில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் கண் பரிசோதனை செய்யப்பட்ட 103 பேருக்கு கண் கண்ணாடிகளையும், விபத்தில் கால் இழந்த செல்வராஜ் என்பவருக்கு செயற்கை கால் வழங்கியும், தலைவர் கலைஞர் அவர்களின் இறப்பு செய்தி அறிந்து மரணம் அடைந்த டேனியல் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
ஸ்டாலின் : இன்று என்னுடைய சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
இன்றைக்கு தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவி, அதனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், என்னுடைய கொளத்தூர் தொகுதியைச் சார்ந்த 13 வயதே நிரம்பி இருக்கக்கூடிய சிறுவன் ரிஸ்வான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து இருக்கிறான்.
ஆனால், இதைக்கூட டெங்கு காய்ச்சல் என்று இந்த அரசு வெளியிலே சொல்வதற்கு வெட்கப்படுகிறது. ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா புகழ் விஜயபாஸ்கர் அவர்களும், அந்தத் துறையினுடைய செயலாளராக இருக்கக்கூடிய திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வந்திருப்பதை அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் மருத்துவமனைகளில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படக்கூடிய அந்த நோயாளிகளை டெங்கு காய்ச்சல் என்று சொல்லக்கூடாது எனவும், டெங்கு காய்ச்சல் என்று சான்றிதழ் பெறுவதற்கு கூட அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய டாக்டர்கள் மறுத்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்று! வெட்கப்பட வேண்டிய ஒன்று!
ஆகவே, இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசைப் பொறுத்தவரையில் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்கு ஊழல் செய்யலாம்? எங்கு கொள்ளையடிக்கலாம்? எங்கு கமிஷன் வாங்கலாம்? எங்கு கலெக்ஷன் செய்யலாம்? என்கிற அந்த நிலையிலே தான் இன்றைக்கு இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல உதாரணங்களை நான் உங்களிடத்திலே எடுத்துக் காட்டிட முடியும்.
ஏற்கனவே குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் ரெய்டுகள் நடந்திருக்கிறது. அண்மையிலே முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ‘உண்மை தான்’ என்ற ஒரு நிலையிலே உயர்நீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது அதெல்லாம் சாட்சியாக இருக்கிறது என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும்.
செய்தியாளர்: டெங்கு காய்ச்சல் குறித்து விஜயபாஸ்கர் அவர்கள் இன்று ஆய்வு செய்ததில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 38 பேரில் 8 பேருக்குதான் இருக்கிறது என்றும், அதேபோல் குழந்தைகள் மருத்துவமனையில் 28 பேரில் 8 பேருக்குதான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதுபற்றி உங்களுடைய கருத்து?
ஸ்டாலின் : டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதை ஓரளவுக்கு ஒப்புக் கொண்டதற்காக முதலில் குட்கா புகழ் விஜயபாஸ்கருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதற்குரிய நடவடிக்கையை அவர் எடுக்காத காரணத்தால் தான் பல உயிர் இழப்பும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக என்னுடைய தொகுதியிலே 13 வயது நிரம்பிய சிறுவன் ரிஸ்வான் மரணம் அடைந்திருப்பதே ஒரு சாட்சி.