திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ளது சந்திரமௌலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் 4 பழமையான செப்புப் பட்டையங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார். கண்டறியப்பட்ட செப்புப் பட்டையங்கள் குறித்து அவரிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 46,020 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகளையும் செப்புப் பட்டையங்களையும், செப்பேடுகளையும் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளது. இச்சுவடித் திட்டப் பணிக்குழு இதுவரை 484 கோயில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளது. கள ஆய்வின் மூலம் சுருணை ஏடுகள் 1,80,280 (தோராய மதிப்பீடு), இலக்கியச் சுவடிக் கட்டுகள் 358 (32,133 ஏடுகள்), தாள் சுவடிகள் 6, செப்பேடுகள் 12, செப்புப் பட்டையங்கள் 25, வெள்ளி ஏடுகள் 2, தங்க ஏடு 1 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 48,691 ஏடுகள் முறையாகப் பராமரித்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முசிறி சந்திரமௌலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ப. சௌந்திரபாண்டி, சுவடிக் கள ஆய்வாளர் கோ. விசுவநாதனைத் தொடர்பு கொண்டு தங்கள் கோயிலில் 4 செப்புப் பட்டயங்கள் உள்ளன. அதைப் பிரதி செய்து தர முடியுமா? என்று கேட்டார். அதன் அடிப்படையில் எனது தலைமையில் முனைவர் வெ. முனியாண்டி, க. தமிழ்ச் சந்தியா, கு. பிரகாஷ் குமார் ஆகியோர் கோயிலுக்கு நேரடியாகச் சென்று செப்புப் பட்டையங்களைப் பார்வையிட்டு மின்படியாக்கம் செய்தோம். பின்னர் 4 செப்புப் பட்டயங்களையும் நான் முறையாகப் பிரதி செய்தேன். பிரதி செய்யப்பட்ட செப்புப் பட்டயங்களில் கீழ்க்காணும் அரிய செய்திகள் உள்ளன.
விஜயநகர அரசர்களின் திக் விஜய சிறப்பு:
வட இந்தியாவில் இருந்து இஸ்லாமிய சமயம் தென்னிந்தியாவிற்குள் பரவி விடாமல் தடுக்க வேண்டும் என சிருங்கேரி எனும் மடத்தின் மடாதிபதியான ஸ்ரீவித்தியாரண்யர் கருதினார். இந்து சமயத்தைக் காப்பாற்ற ஒரு புதிய அரசை உருவாக்க நினைத்தார். இதற்காகப் படைத் தளபதிகளாக இருந்த ஹரிகரர், புக்கர் எனும் இருவர் மூலம் ஒரு பேரரசை உருவாக்கினார். ஹரிஹரர் - புக்கர் இருவரும் வித்யாரண்யர் நினைவாக வித்யா நகரம் என்ற நகரை நிர்மாணித்து ஆட்சி செய்தனர். இவ்வரசு விஜயநகரப் பேரரசு என்று அழைக்கப்பட்டது. இவ்விஜயநகர பேரரசை சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு எனும் நான்கு மரபினர் ஆண்டனர்.
முசிறி கோயிலில் கிடைத்துள்ள 4 செப்புப் பட்டையங்களிலும் தொடக்க நிலைச் செய்தியாக விஜய நகர மன்னர்களின் வெற்றிச் சிறப்பும், பட்டப் பெயர்களும் திக்விஜயம் செய்த நிலையும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, விஜயநகரப் பேரரசர்கள் ஈழத்தை வென்றது; துலுக்கர், ஒட்டியரை வென்றது; ராட பாணாயன்பட்டணம் அழித்தது; திருகோணமலையைக் கொண்டது; வாதாபியை கொண்டது; சோழ மண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் வென்றது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மேலும் விஜய நகரப் பேரரசை ஆண்ட தேவமகா ராயர், மல்லிகார்ச்சுன ராயர், வீர நரசிங்க ராயர், விச்சவ ராயர், விசைய ராயர், பல்லகஷ்தன் தேவராயர், விருப்பாட்சி தேவராயர், பிரபு பட தேவராயர், பிரதாப தேவராயர், நிமிம்பகத் தேவராயர், வசவ தேவராயர், வச்சிரவாகு தேவராயர், புசபல தேவராயர், பூதி ராயர், உத்தமல்லைய தேவராயர், சென்ன வீர தேவராயர், தன் மராயர், ஈசுவரப்ப நாயக்கராயர், நரசாண் நாயக்க ராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர், சதாசிவ ராயர், மகாராமா சீரங்கா ராயர், வேங்கிடபதி ராயர் ஆகியோர் பெயர்களும் அமைந்து காணப்படுகின்றன. இது மன்னர்கள், பாளையக்காரர்கள் செப்பேடுகளை வெளியிடும் போது தங்கள் முன்னோர்களின் வெற்றிப் பெருமைகளையும் முன்னோர் பெயர்களையும் குறிப்பிடும் மரபின் அடிப்படையிலானதாக அமைகிறது. எனினும் விஜய நகர அரசர்களின் அரிய பல பெயர்கள் இப்பட்டயங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. செப்பேடுகளின் இறுதியில் தர்ம கட்டளைகளைப் பரிபாலம் பண்ணுபவர்கள் அடையும் பலனும் குந்தகம் செய்வோர் அடையும் பாவமும் கூறப்பட்டுள்ளன.
நாயக்க மன்னர்கள் பேரில் புண்ணிய தர்மக் கட்டளை:
முதலாவது செப்புப் பட்டையம் சக வருடம் 1631 (பொ.ஆ.1709). விக்ருதி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் தியதி எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீ துப்பாக்குலு ராமகிருட்ணப்ப நாயக்கரும் தாண்டவராய முதலியார் ஆகிய இருவரும் விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், சொக்கனாத நாயக்கர், ரங்க கிருஷ்ணமுத்துவீரப்ப நாயக்கர், விசயரங்க கிருஷ்ணமுத்து வீரசொக்கநாத நாயக்கர் ஆகியோருக்கும் தங்களுக்கும் புண்ணியம் விளங்கிட திருச்சிராப்பள்ளி வடகரை ராச வளநாட்டில் உள்ள மும்முடிச் சோழப் பேட்டையில் (முசுறியில்) அமைந்துள்ள சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கோயில் விழா பூசைக்கு தர்மக் கட்டளை உண்டு பண்ணுமாறு வீரமலைப்பாளையம் பெரியோ பக்கமபய நாயக்கர் குமாரன் சின்னோயகுமாரக் கம்பய நாயக்கருக்கு கட்டளை பிறப்பிக்கின்றனர். அவரும், கூடலூர் பதி காவல் பணத்தில் இருந்து கோயில் விழாப் பூசைக்கு நாளொன்றுக்கு 2 பொன் வீதம் மாதமொன்றுக்கு 6 பொன்னும் வருடம் ஒன்றுக்கு பொன் 72ம் வழங்க வழக்கம் பண்ணிக் கொடுத்த செய்தி முதல் செப்புப் பட்டையத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாசனங்கள் நாயக்க மன்னர்கள் பேரில் ஏற்படுத்திய தர்மக் கட்டளை மானியம்:
முசிறி கோயிலில் கிடைத்த 2வது செப்புப் பட்டையம் எழுதப்பட்ட காலம் சக வருடம் 1631 (பொ.ஆ.1709). விக்ருதி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் தியதி ஆகும். இச்செப்புப் பட்டயமும் முதல் செப்புப் பட்டயத்தில் கட்டளை பிறப்பித்த மேற்படி நபர்கள் தங்களுக்கும் முன் சூட்டிய மதுரை நாயக்க மன்னர்களுக்கும் புண்ணியம் விளங்கிட மும்முடிச் சோழப்பேட்டை சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் திருக்கோயிலுக்கு புண்ணிய கட்டளை ஏற்படுத்திட கோபாலகிருஷ்ண சமுத்திரம் ஊர் மகா சனங்களுக்கு கட்டளையிட்டது பற்றி பேசுகிறது. கோபாலகிருஷ்ண சமுத்திரம் ஊர் மகாசனங்களும் ஒன்றுகூடி கோயில் புண்ணிய கட்டளைக்கு முன் மானியமாக 11 1/2 காணி நிலம் (15 ஏக்கர் 18 சென்ட் நிலம்) வழங்கியுள்ளனர். இதில் சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கோயில் மானியமாக விட்ட நிலம் 8 1/2 காணி (11 ஏக்கர் 22 சென்ட்), தலத்தார் நம்பியார் மானியமாக விட்ட நிலம் காணி 1 (1 ஏக்கர் 32 சென்ட்) , தாசிகள் மானியமாக விட்ட நிலம் காணி 2 (2 ஏக்கர் 64 சென்ட்) என்றும் பட்டையம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் இந்த நில மானியம் மூலம் கோயில் புண்ணிய கட்டளை பரம்பரையாகத் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செட்டியார்கள் நாயக்க மன்னர்கள் பேரில் அர்த்த சாம பல்லக்குச் சேர்வை கட்டளை நிறுவுதல்:
முசிறி கோயிலில் கிடைத்த 3வது செப்புப் பட்டையம் எழுதப்பட்ட காலம் சக வருடம் 1631 (பொ.ஆ.1709). விக்ருதி வருடம் ஆவணி மாதம் 3 ஆம் தியதி ஆகும். இச்செப்புப் பட்டையமும் முதல் மற்றும் இரண்டாவது செப்புப் பட்டையத்தில் தானம் வழங்க கட்டளையிட்டவர்களே இதிலும் தங்களுக்கும் மேற் சூட்டிய நாயக்க மன்னர்களுக்கும் புண்ணியம் கிடைத்திட வேண்டி சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் அர்த்த சாம பல்லக்கு சேர்வை கட்டளை நிறுவ ஆதனூர் பத்துவில் குழித்தண்டலை ஊரினைச் சேர்ந்த கருத்தா செட்டி, தம்பி செட்டி, கவிச்சி, காத்திசெட்டி, அன்னமை செட்டி ஆகியோருக்குக் கட்டளையிடுகின்றனர். செட்டியார்களும் குழித்தண்டலையைச் சேர்ந்த சுங்கம் எட்டுத்துறைக்கு வரும் கிடைப்பொதி அல்லாமல் எந்தப் பொதி வந்தாலும் பொதி ஒன்றுக்கு அரை வீசம் (3/64) வீதம் சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கோயில் அர்த்த சாம பல்லக்குச் சேர்வை கட்டளைக்கு வழங்க வழிவகை செய்த செய்தியைச் செப்புப் பட்டையம் எடுத்துரைக்கிறது.
அயிலுசீமை கால சந்திக் கட்டளை தர்மம் நிறுவுதல்:
முசிறி கோயிலிலுள்ள 4வது செப்புப் பட்டயம் எழுதப்பட்ட காலம் சக வருடம் 1631 (பொ.ஆ.1709 ). விக்ருதி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தியதி ஆகும். இதில், முசிறி சோழீசுரமுடையாருக்கு அயிலுசீமை கால சந்திக்கட்டளைத் தர்மத்துக்கு அயிலூர் நாட்டுக் கணக்கு: பணம் 1, காவல்காரன் பணம் 3/4, கடைக்கா(ரன்) பணம் 3/4; காட்டுப் புத்தூர் நாட்டுக் கணக்கு பணம் 1, காவல்காரன் பணம் 1, கடைக்கா(ரன்) பணம் 3/4 ; சீலைப் பிள்ளையா புத்தூர் நாட்டுக் கணக்கு பணம் 1, காவல்காரன் பணம் 3/4, கடைக்காரன் பணம் 3/4, முருங்கை பணம் 1, பிடாமங்கலம் பணம் 1, கிடாரம் பணம் 1, ஒருவந்தூர் பணம் 1, கடாரம்பம் நாட்டுக் கணக்கு பணம் 1 இப்படி அயிலூர் சீமை மகமை பொன் 1, பணம் 7 ஆக மாதம் ஒன்றுக்கு பொன் 3 ஆக வழங்க கட்டளையிட்டது பற்றி செப்புப் பட்டையம் பேசுகிறது. செப்புப் பட்டையத்தின் இறுதியில் ஸ்ரீ துப்பாக்குலு ராமகிருஷ்டிணப்ப நாயக்கர், தாண்டவராய முதலியார் ஆகிய இருவரும் புண்ணியம் பெற முசிறி சோழீசுரமுடையார் - கற்பூரவல்லியம்மன் கால சந்தி கட்டளை உண்டு பண்ணின தர்மத்துக்கு நாளொன்றுக்கு ஒரு பணம் வீதம் மாதமொன்றுக்கு பொன் 3 -ம், வருடம் ஒன்றுக்கு பொன் 36ம் வழங்கியதாகவும் செய்தி உள்ளது. எனவே இதன் மூலம் கால சந்தி கட்டளையை ஏற்படுத்த கட்டளையிட்டார்களும் இவர்கள் தான் என்பது புலனாகிறது. செப்புப் பட்டையத்தில் மதுரை நாயக்கர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது” என்று பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.