தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து அடுத்த தலைமைச் செயலாளராக யார் வருவார் என தீவிரமான விவாதங்கள் எழுந்து வந்தன. இதில் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட சில பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 49வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சிவ்தாஸ் மீனா 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளில் சரளமாகப் பேசும் வல்லமை படைத்தவர்.
இதனிடையில், 1989 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சியை தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். அதைத் தொடர்ந்து வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என அடுத்தடுத்து பணி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்து துறைகளிலும் சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் என பல முக்கிய துறைகளில் சிவ்தாஸ் மீனா பதவி வகித்துள்ளார். 30 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் பணியில் அனுபவம் கொண்ட சிவ்தாஸ் மீனா, 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையில் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு கேடரில் இருக்கும் அதிகாரிகளில் சிவ்தாஸ் மீனா தான் பதவி அந்தஸ்தில் மூத்தவர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சிவ்தாஸ் மீனா மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசுக் கட்டுப்பாடு மத்திய வாரியத்தின் சேர்மன் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் 2021 ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஏனெனில் சிவ்தாஸ் மீனா எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் மிகவும் திறமையாகச் செயல்படக் கூடியவர் என்று நற்பெயரைப் பெற்றுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது வரை பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.