Skip to main content

முத்தலாக்கில் அதிமுகவின் இரட்டை நாக்கு!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

இஸ்லாமியர்களின் சிறப்பு உரிமை ஒன்றை பறித்திருக்கிறது பாஜக அரசு. அதுவும் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி, அதற்கு தண்டனை பெற்றுத்தருகிற வகையில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமில் பெண்களுக்கு எதிரான விதிகள் இருப்பதைப் போலவும் அதில் ஒன்றை சீரமைத்திருப்பதைப் போலவும் காட்டியிருக்கிறது மோடி அரசு.
 

muslim ladies

 

 

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதைப் போல மோடி அரசு மார்தட்டுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி தின்றார்கள் என்றும், ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்தார்கள் என்றும் கும்பலாகச் சேர்ந்து வெறித்தனமாக கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை ஏன் மோடி அரசு காதில் வாங்கவில்லை என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதால் இந்தியாவே மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறியிருப்பதை பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள். அதாவது, இஸ்லாம் மீது வெறுப்பு கொண்ட பாஜக மகிழ்ச்சி அடைகிறது என்பதையே இந்தியா மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கிய கட்சி தங்களுடையது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இஸ்லாமியர் ஜனாதிபதி ஆனாலும், தலித் ஜனாதிபதி ஆனாலும் இந்து சாமியார் முன் தரையில்தான் அமர வேண்டும் என்ற நிலை இருப்பதை சொல்லவே மாட்டார். முத்தலாக் மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துள்ளன. தேர்வுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையயும் விடுத்தன. அதையும் மீறி வாக்கெடுப்புக்கு விட்டு, எதிர்த்த சில கட்சிகளை வெளிநடப்புச் செய்யவைத்து மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இதை தனது சாதனையாக வேறு பாஜக அரசு கூறிக்கொள்கிறது.

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட நிலைப்பாடுதான் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது. மக்களவையில் இந்த மசோதா வந்தபோது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால், அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத்குமார் இந்த மசோதாவை ஆதரித்து பேசி அதிர்ச்சியைக் கொடுத்தார்.
 

opr


“இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும். இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்துப் பெண்களுக்கும் சமஉரிமை வழங்கிட ஏதுவாக இருக்கும்” என்று அவர் பேசினார்.

இதுகுறித்து அதிமுகவில் பெரிய புகைச்சலே உருவானதாக கூறப்பட்டது. பாஜகவுக்கு பயந்து சிறுபான்மையினரை விட்டுக்கொடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் அதிமுகவின் நிலைப்பாடு தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அவர் கூறியபடியே, மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை எதிர்த்து பேசினார்.

“முத்தலாக்கிற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமில் முத்தலாக்கிற்கு அனுமதி இல்லை என்று அரசு சொல்கிறது. எனவே, இல்லாத ஒரு விஷயத்திற்கு எதற்காக சட்டம்? இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் பேசினார்.

இப்படி பேசிய அவர், மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தபோது தனது கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும் 84 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருந்தால் மசோதா தோற்றிருக்கும்.
 

navaneetha

 

 

அதிமுகவின் இந்த நிலைப்பாடு வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்துத் தெரிவித்தார். முத்தலாக் விஷயத்தில் பாஜகவுக்கு பயந்து இரட்டை நிலை எடுத்த அதிமுக, இறுதியில் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவெடுத்தது, அம்பலப்பட்டிருக்கிறது. அதிமுவை நம்பிய சிறுபான்மை இன மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருக்கிறது என்று இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.