Skip to main content

"எங்களின் எதிர்காலத்தை ஏவிஎம் வேப்ப மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டோம்.." ரஜினி குறித்த நினைவை பகிர்ந்த கமல்!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

சென்னையில் உள்ள ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை கமல் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல் தனக்கும் ரஜினிக்குமான நட்பை பற்றி விரிவாக பேசினார். இந்த விழாவில்  கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றினர்.
 

df



விழாவில் பேசிய கமல்ஹாசன், " எனக்கும் ரஜினிக்குமான உறவு இன்று தொடங்கியது அல்ல. நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எழுபதுகளிலேயே தீர்மானித்துவிட்டோம். ஏவிஎம் வேப்ப மரத்தில் பேசி தீர்த்துக்கொண்ட நிகழ்வு அது. அப்போது நாங்கள் பேசியதை யாராது கேட்டிருந்தால் இவர்கள் இவ்வளவு கர்வம் பிடித்தவர்களா? என்று கூட நினைக்க தோன்றியிருக்கும். ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும், தக்க கவுரவம் தான். நான் வேறு பாணி, ரஜினி வேறு பாணி என்றாலும் ரஜினியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த அவர்கள் நடிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டு இருந்த சமயம் அது. ஒரு திருமண விழாவில் அவர் என்னிடம் படத்தின் தலைப்பு தளபதி என்று என்னிம் சொன்னபோது, எனக்கு கணபதி என காதில் கேட்டது. என்னங்க தலைப்பு விநாயகர் சதுர்த்தி மாதிரி இருக்கு என்று நான் கேட்க, அவர் மீண்டும் படத்தின் தலைப்பு தளபதி என்று கூறினார்.

நாங்கள் இருவரும் பேசுவதை, கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை கேட்டால் அசந்து போவீர்கள். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்களுக்கு ரசிகர்கள் வரும் முன்பே நாங்கள் தான் எங்களுக்கான ரசிகர்களாக இருந்தோம். ரஜினியும், நானும் பேசிக்கொள்வோம் என்பதால், எங்களுக்கு நடுவில் போட்டு கொடுப்பவர்கள் குறைவு.  இரண்டு கோல் போஸ்ட் கட்டி எங்கள் இருவருக்கும் இடையே விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல்படம் இயக்கும்போதே தெளிவாக இருக்கிறாரே? என மணிரத்னத்தை பார்த்து வியந்ததுண்டு. ஒருநாள் சினிமாவில் இருந்து ஒதுங்க என்னிமே அவர் ஆலோசனை கேட்டார். நீங்கள் ஒதுங்கனால், என்னையும் ஒதுங்கச்சொல்வார்கள், அதனால் வேலை செய்யுங்கள் என்று ரஜினியிடம் கூறினேன். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 50- வது படம் மிக பிரமாண்டமாக அறிவிக்கப்படும். 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள். வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. ரஜினி கையையும், எனது கையையும் யாராலும் பிரிக்க முடியாது" என்றார்.