Skip to main content

துப்பாக்கியால் சுட உத்தரவிட்டாரா துணைவட்டாச்சியர்? - பலியாடாகும் அதிகாரிகள்

Published on 04/06/2018 | Edited on 05/06/2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து டென்ஷனைத் தணிக்க வேண்டும் என்று தமிழக அரசு முனைப்பு காட்டியபோது, "ஏழு பேர் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்ட்டம்! மீதி ஆறு பேர் உடலை மறு உத்தரவு வரும் வரை போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது'’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துவிட, தூத்துக்குடியில் டென்ஷனோ டென்ஷன்.

 

tuticorin gunshotஇறந்தவர்களில் மீனவ வகுப்பினர் மூவர், நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் சமூகத்தில் இருவர், நாயக்கர் ஒருவர், ஆதிதிரா விடர் இருவர், அருந்ததியர் ஒருவர், புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த ஒருவர் என, பல சமுதாயத்தினரும் உறவுகளை இழந்து தவித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற 6 பேர் நிலை சீரியஸாக உள்ளது. இறந்தோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது, மக்களின் போராட்டம் எல்லை தாண்டும் என்கிற பீதி நிலவுகிறது.

வேம்பாரிலிருந்து ஆலந்தழை வரையிலும் உள்ள 20 கிராமங்களின் மீனவ நிர்வாகிகள் ஒன்றிணைந்து திருச்செந்தூர் ஜீவா நகரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பில் இறந்த அனைவரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்து, அங்கு மண்டபம் எழுப்பி, ஆண்டுதோறும் நினைவு தினம் அனுஷ்டிப்பதற்கு உறுதிமொழி தரவேண்டும். கலவரத்தின்போது பணியில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் கமிஷன் அமைத்து விசாரணை நடத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள், மீண்டும் ஒரு போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

 

tuti protest13 உடல்களுக்கும் தாசில்தார் 13 பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு உடலுக்கும் டிரைவர்கள் இருவரைக் கொண்ட தனித்தனி வாகனம், அந்த வாகனத்தின் பாதுகாப்புக்கு குறிப்பிட்ட காவல்நிலைய போலீசார் என உடல் ஒப்படைப்பு பணி நடைபெற்றது. மாசிலாமணிபுரம் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான வாகனத்தின் எண் பச 25 ஏ 0580 என்றும் 1510 எண் கொண்ட போலீஸ் டிரைவர் பிரபு எனவும், அந்த வாகன பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது தூத்துக்குடி தென்பாக காவல் துறையினர் என்றும் குறிப்பெழுதி வைத்திருந்தனர். இதே நடைமுறையைத்தான், ஒவ்வொரு உடலைக் கொண்டு செல்லும் போதும் பின்பற்றினர்.

"துப்பாக்கிச் சூடு நடத்த நாங்கள்தான் உத்தரவிட்டோம்' என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் ஒப்புதல் அளித்திருக்கும் தனித்துணை வட்டாட்சியர் சேகர், துணை வட்டாட்சியர் கண்ணன், கோட்ட கலால் அலுவலர் சந்திரன் ஆகியோர் பலியாடுகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்று ‘"உச்'’ கொட்டுகிறார்கள் வருவாய்த்துறையினர். "23-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு, கோட்ட கலால் அலுவலர் சந்திரன் உத்தரவிட்டதாக, தெற்கு காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், துப்பாக்கிச் சூடு நடத்த இவர்கள் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களும், இந்த மூவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதிகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை.

 

chandran

கலால் அலுவலர் சந்திரன்இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திட, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கு துணை வட்டாட்சியர் சேகர் உத்தர விட்டதாக முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

நடந்தது என்னவென்றால், மக்களின் கோபம் சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மீது இருப்பதால், அவரை மடத் தூர் பகுதி பந்தோபஸ்துக்கு அனுப்பியிருந்தார்கள். அவருக் குப் பதிலாக இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நியமித்திருந்தனர்.

எந்த நேரத்திலும் தங்களுக்கு எதுவும் நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அந்த மூன்று அதிகாரிகளின் குடும்பத் தினர்'' எனச் சொல்லும் வரு வாய்த்துறையினர், அந்த குடும்பத்தினர் குறித்த தகவல்கள் லீக் ஆகிவிடாமல் பாதுகாத்து வருகிறார்கள். மூவரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது எடப்பாடி அரசு. அது எந்தெந்த இடங்கள் என்பதையும் ரகசிய மாக வைத்திருக்கின்றனர்.


-சி.என்.இராமகிருஷ்ணன், நாகேந்திரன், பரமசிவன்
 

 

 

 

Next Story

அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Asset hoarding case against minister Rejection of the request of the ed

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 80% விசாரணை முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி ஐயப்பன் பிறப்பித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
High Court order for Henry Thibane case

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

High Court order for Henry Thibane case

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (01.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த அப்போதைய தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது” என வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரரான ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு எந்த தடையும் இல்லை” என வாதிட்டார். இதற்கிடையே சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை” எனத் தெரிவித்தார். 

High Court order for Henry Thibane case

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது. துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டது யார்?. இத்தனை உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப்போவது யார்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த எதிர் மனுதாரர்களின் ஆட்சேபத்துக்குப் பதிலளிக்க மனுதாரரான ஹென்றி திபேனுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.