சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி வெளியீட்டில் வெளியான ‘லவ் டுடே’ படம் தொடர்பாகப் பேசினார். தமிழகத்தில் மழை பாதிப்பு தீராமல் இருக்கிறது. எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் முதல்வருக்கு மூன்று மணி நேரம் படம் பார்க்க நேரம் இருக்கிறதா என்ற தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
" யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி அப்பா லவ் டுடே படத்தைப் பார்த்துவிட்டு நல்லா இருப்பதாகக் கூறினார்" என்று அவர் கூறிய அடுத்த நாளே முதல்வரையும் உதயநிதியையும் விமர்சனம் செய்தார் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, அண்ணாமலையின் விமர்சனம் சரியா என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " திமுகவில் அடுத்த முகமாக உருவாகி வருபவர் உதயநிதி. அவர்தான் தந்தைக்குப் பிறகு கட்சியில் அனைத்தும் என்று சொல்லப்படுபவர். அடுத்த முதல்வர் பதவி வரைக்கும் தொண்டர்களால் கொண்டு செல்லப்படுபவர்.
அப்படி இருக்கையில் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் எதிர்க்கட்சியினர் தீவிரமாகப் பார்ப்பார்கள். குறிப்பாக எப்படி திமுகவை எதிர்த்து அரசியல் செய்யலாம் என்று கொடாக்கண்டனாக இருக்கும் பாஜக அவரை தீவிரமாகக் கவனித்து வருகிறது. இந்த நேரத்தில் உதயநிதி அரசியலில் தீவிரம் காட்ட வேண்டும். அவரை தொழில் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அரசியலை அவர் இன்னும் தீவிரமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஆழமாக அவர் சினிமாவுக்கு சென்றிருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அவர் அமைச்சர் ஆகப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. படங்கள் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்ற பேச்சுக்கள் வரை எழுந்தது. வெளிவருகின்ற படங்கள் எல்லாம் அவர் வெளியீட்டில் வருகின்றபோது ஏற்படுகின்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறேன். தொழில் செய்யாதீங்க என்று சொல்லவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள நிலையில் இதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு அவர் தமிழக பிரச்சனைகளில் இன்னும் தீவிர கவனம் காட்ட வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையில், கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் என்ன நடைபெற்றது; அதிகாரிகள் என்ன தகவலை அப்பாவிடம் தந்தார்கள்; அப்பா அதற்கு என்ன செய்தார்; என்ன செய்யத் தவறினார் என்பது குறித்து இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதில் அவர் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர் எளிதில் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.