Skip to main content

ஜப்பான் குரங்கு விழுங்கிய கொரியா அப்பம்! கொரியாவின் கதை #7

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
korea story 7



கொரியா முழுமையும் ஜப்பான் கட்டுப்பாட்டில் வந்தாலும், ராணி மின் இன்னும் அதிகாரத்தில்தான் இருந்தார். அதாவது, கொரியாவில் வர்த்தகம் செய்யும் உரிமையும், குடியேற்ற உரிமையும், ராணுவ பாதுகாப்பும் மட்டுமே ஜப்பானிடம் இருந்தது. ஜப்பான் தூதரகமும், ரஷ்யா தூதரகமும், வேறு சில நாடுகளின் தூதரகங்களும் கொரியாவில் செயல்பட்டன.

ஜப்பானின் ஆதிக்கம் வளருவதையோ, ரஷ்யாவின் செல்வாக்கு கொரியர்களின் மத்தியில் வளருவதையோ விரும்பாதவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற விடுதலைக் குழுக்களை அமைத்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள், அரச வம்சத்தை தலைமையாக கொண்ட இங்கிலாந்தைப் போன்ற ஜனநாயக அரசை விரும்பினார்கள்.

 

 


இந்நிலையில்தான் 1895ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ராணி மின் தங்கியிருந்த ஜியோங்போக்கங் அரண்மனைக்குள் ஜப்பானிய கூலிப்படையினர் புகுந்தனர் அவர்களுடன் அரசரின் ஊழியர் ஒருவரும் இருந்தார். அவர்கள் அரண்மனையின் வடக்குப் பிரிவில், ராணி மின்னை கொன்று அவருடைய உடலை நாசப்படுத்தினர். இந்தக் கொலைச் சதியை ஜப்பானிய அமைச்சர் மியுரா கோரோ திட்டமிட்டுக் கொடுத்ததாக ரஷ்யாவின் பழைய ஆவணங்களில் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ராணி மின் கொல்லப்படும்போது அவருக்கு வயது 43. ராணி மின் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் இளவரசர் ஹியூங்சியோன் அதே நாளில்  அரண்மனைக்கு வந்தார். 1896ஆம் ஆண்டு மன்னர் கோஜோங்கும் பட்டத்து இளவரசரும் அரண்மனையிலிருந்து வெளியேறி ஜியோங் டோங்கிலிருந்த ரஷ்ய தூதரகத்திற்கு இடம்பெயர்ந்தனர். அந்த அளவுக்கு அவர்களுடைய உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது.

 

 

arch

யெயோங்கியுன்மன் நுழைவாயில்



ரஷ்யா தூதரகத்தில் இருந்தபடியே கொரியாவை ஒரு ஆண்டு ஆட்சி செய்தனர். அரசர் ரஷ்யா தூதரகத்திற்கு இடம்பெயர்ந்தவுடன், கொரியாவின் கற்றறிந்தோர் கூட்டம் விடுதலை குழுவை அமைத்தது. கொரியாவில் அதிகரிக்கும் ஜப்பானின் செல்வாக்கை மட்டுப்படுத்த ரஷ்யா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் மன்னர் பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 1897ஆம் ஆண்டு இந்தக் குழுவினர் யெயோங்கியுன்மன் என்ற நுழைவாயிலை அழித்தனர். இந்த நுழைவாயில் அருகேதான், சீனாவிலிருந்து வரும் தூதர்கள் ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்படுவது வழக்கம். அந்த பெருமை மிகுந்த நுழைவாயிலை உடைத்துவிட்டு, விடுதலை வாயில் என்ற பெயரில் புதிய நுழைவாயிலை கட்டினார்கள். அவர்கள், ஜோங்னோ நகர வீதிகளில் தொடர் கூட்டங்களை நடத்தினார்கள். கொரியாவில் ஜனநாயக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், கொரியா விவகாரங்களில் ஜப்பானும் ரஷ்யாவும் தலையிடுவதை முடிவுகட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பினார்கள்.

 

 


இதையடுத்து, 1897ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மன்னர் கோஜோங் தனது இன்னொரு அரண்மனையான டியோக்சுகங்கிற்கு திரும்பினார். கொரியா பேரரசு நிறுவப்படுவதாக பிரகடனம் செய்தார். இந்தக் காலகட்டத்தில் கொரியா அரசு மேற்கத்தியமயக் கொள்கையை கடைப்பிடித்தது. அதிகாரப்பூர்வமில்லாத கூட்டங்களுக்கு பேரரசர் கோஜோங் தடைவிதித்து அறிவித்தார். அதையடுத்து 1898 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி விடுதலைக் குழு கலைக்கப்பட்டது.

கொரியாவில் ரஷ்யா தலையீடு இருக்கும்வரை கொரியாவை முழுமையாக விழுங்கமுடியாது என்று ஜப்பான் நினைத்தது. எனவே அது ரஷ்யாவுடன் ஒரு தந்திரமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த விளைந்தது. மஞ்சூரியாவில் ஜப்பானுக்கு சொந்தமான உரிமைகளையும் நிலப்பகுதியையும் ரஷ்யாவுக்கு விட்டுத்தர ஜப்பானிய பேரரசு முன்வந்தது. ஆனால், ரஷ்யா இதை ஒப்புக்கொள்ளவில்லை. கொரியாவின் வடக்குப் பகுதி ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் பொதுவான பகுதியாக நீடிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல், ஆசியாவுக்குள் நுழையும் தனது நோக்கத்துக்கு பெரிய தடையாக இருக்கும் என்று ஜப்பானிய பேரரசு நினைத்தது. எனவே, ரஷ்யாவுடன் போர் நடத்த ஜப்பான் முடிவெடுத்தது.
 

 

russian army



ரஷ்யாவுடனான சமரசப் பேச்சு முறிந்தவுடன், சீனாவின் ஆர்தர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் கிழக்குக் கப்பற்படை பிரிவு மீது ஜப்பான் போர்க்கப்பல்கள் திடீர் தாக்குதலை தொடங்கின. இந்த யுத்தத்தில் ரஷ்யா தொடர் தோல்விகளை அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், ரஷ்ய சக்கரவர்த்தி ஜார் இரண்டாம் நிக்கோலஸ் ரஷ்யா வெற்றிபெறும் என்று உறுதியாக நம்பினார். எனவே போரை தொடர உத்தரவிட்டார். தொடக்கத்தில் சில குறிப்பிட்ட கடல் போர்களின் முடிவை அவர் எதிர்பார்த்தார். அவற்றில் தோல்வி ஏற்பட்டவுடன், இந்த போர் ரஷ்யாவுக்கு கவுரவப் பிரச்சனையாகிவிட்டது. ஒரு சமயத்தில் ஜப்பான், இதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விடக்கூட முன்வந்தது. ஆனாலும் ஜார் மன்னர் அதை நிராகரித்துவிட்டார்.

 

 


ஆனால், தொடர் தோல்விகள், ரஷ்ய வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் இரு நாடுகளுக்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து, போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், கிழக்கு ஆசியா முழுமையும் ஜப்பானின் ஆதிக்கத்தின்கீழ் சென்றது. இருக்கும் இடம் தெரியாமல் கிடந்த ஜப்பான் உலக அரங்கில் தனது பலத்தை நிரூபித்து மிரட்டியது. ஐரோப்பிய அரசான ரஷ்யாவுக்கு எதிராக முதன்முறையாக ஆசிய நாடு ஒன்றின் வெற்றியாக இதை உலக அரசியல் அறிஞர்கள் வர்ணித்தனர். ஜப்பானின் இந்த வெற்றி கொரியாவை முழுமையாக அதன் கைக்குள் கொண்டுவந்தது.

 

 

portsmouth

போர்ட்ஸ்மவுத் பேச்சுவார்த்தை



ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதிமுதல், 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தப் போரின் முடிவில் கொரியாவில் செல்வாக்கு செலுத்திய தனது கடைசி எதிரியான ரஷ்யாவை வெளியேற்ற உதவியது. போர்ட்ஸ்மவுத் உடன்படிக்கையின்படி, கொரியாவில் ஜப்பானின் ராணுவ அதிகாரத்தையும், பொருளாதார உரிமையையும் ஏற்பதாக ஒப்புக்கொண்டது.

அதாவது, ஒரு தனித்த இறையாண்மைமிக்க கொரியா தேசத்தை பூனைகளின் அப்பத்தை பங்குபோட்டதுபோல பங்குபோட்டு, ஜப்பான் குரங்கு விழுங்கியது. மொத்தத்தில் கொரியா தேசம் குரங்கின் கையில் சிக்கிய பூமாலையைப் போல சின்னாபின்னமாகத் தொடங்கியது.

ரஷ்யா வெளியேறி இரண்டே மாதங்களில் ஜப்பானின் ஆதிக்கத்தை ஏற்பதாக கொரியா அரசு ஒப்புக்கொண்டது. அதைத்தொடர்ந்து புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை ஜப்பான் அறிவித்தது. கொரியாவின் ராணுவத்தினர் எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து ஆயிரமாக குறைக்க ஜப்பான் முடிவெடுத்தது. கொரியாவின் தலைநகர் சியோலில் போலீஸ் அதிகாரம் முழுமையாக ஜப்பானின் கட்டுப்பாட்டுக்கு வருவதாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஏராளமான கொரியர்கள் கல்வி மற்றும் சீர்திருத்த இயங்கங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், கொரியா முழவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக 1905ஆம் ஆண்டு கொரியாவுக்கான அமெரிக்காத் தூதராக பொறுப்பேற்றிருந்த ஹொரேஸ் அல்லென் கூறியிருக்கிறார்.

 

 


1907ஆம் ஆண்டு, தி ஹேக் நகரில் நடைபெற்ற இரண்டாவது அமைதிப் பேச்சுவார்த்தை மாநாட்டிற்கு கொரியா பேரரசர் தனது மூன்று பிரதிநிதிகளை ரகசியமாக அனுப்பிவைத்தார். அது கொரியாவுக்கு புதிய பிரச்சனையை கொண்டுவந்தது. இந்த மூன்று பிரதிநிதிகளையும் விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அரசாங்கத்தின் சட்டபூர்வம உரிமை குறித்து இந்த மாநாடு கேள்வி எழுப்பியது. இதையடுத்து மூன்று பிரதிநிதிகளில் ஒருவரான யி ட்ஜவ்னே ஹேக் நகரிலேயே தற்கொலை செய்துகொண்டார். இதன்விளைவாக ஜப்பான் அரசு கொரியா மன்னரின் அதிகாரத்தை பறித்தது. அவருடைய பிரதிநிதியாக பட்டத்து இளவரசர் சன்ஜோங்கை நியமித்தது. இந்த நியமனத்துக்கு மன்னர் கோஜோங் ஒப்புதல் அளிக்கவில்லை. பொறுப்பேற்பு விழாவில் மன்னர் கோஜோங்கும் இல்லை. புதிய மன்னர் சன்ஜோங்கும் இல்லை. 1392ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜோசியோன் பேரரசின் கடைசி மன்னராக சன்ஜோங் ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதே ஒரு கேலிக்கூத்தாக அமைந்துவிட்டது.

1910ஆம் ஆண்டு மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தி்ல் ஜப்பான் ஆதிக்கத்தை ஆதரிக்கும் கொரியா அமைச்சர் யெ வான்யோங் கையெழுத்திட்டார். ஜப்பானின் யுத்த அமைச்சர் டெரவ்ச்சி மஸாடேக் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. கொரியாவின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு முழுவதும் ஜப்பான் அரசரின் கட்டுப்பாட்டுக்கு மாறியது. பத்திரிகை சுதந்திரம் முழுவதும் ஜப்பான் அரசின் மேற்பார்வைக்கு சென்றது. கொரியா 1910 முதல் 1919 வரை போலீஸ் ராஜ்ஜியமாக மாறியது. கொரியாவின் பிரதமரா யெ வான்யாங்கும், முதல் ஜனாதிபதியாக டெரவ்ச்சி மஸாடேக்கும் பதவியேற்றனர்.

கொரியர்கள் கொடூரமான அடக்குமுறைக்கு ஆளாகினர். ஜப்பானியரின் அடிமைகளாக மாறினர். அது வரலாற்றின் கண்ணீர் பக்கங்களாக இப்போதும் இருக்கின்றன.

(இன்னும் வரும்)

முந்தைய பகுதி:

சீனாவின் பிடியிலிருந்து கொரியாவை மீட்டது ஜப்பான்!!! -கொரியாவின் கதை #6