உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த பத்தரிகையாளர் கோவி. லெனினிடம் இதுதொடர்பான பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கரோனா தொற்றை, தேசிய பேரிடராகக் கருதும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ள மத்திய அரசு தமிழகத்துக்கு குறைவாக 510 கோடி என்ற அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. பாதிப்பு மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கும் நிலையில் நிதி ஒதுக்கீடு குறைவாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?
நோய்த் தொற்று எங்கே அதிகம் இருக்கிறது என்பதைப் பார்த்து மத்திய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும். ஏனென்றால் இது ஒரு பேரிடர் காலம். ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டபோதே அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் இடம்பெயர ஆரம்பித்தபோது மத்திய அரசு, அந்தெந்த மாநில அரசுகளே பேரிடர் நிதியினை வைத்து அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையானவற்றை செய்யும் என்ற உத்திரவாதத்தை அளித்தது. அதாவது மாநில அரசுகளே பார்த்துக்கொள்ளும் என்பதைப் போல மத்திய அரசு கூறியது. ஒரு பேரிடர் காலத்தில் மாநில அரசுகள் என்ன செய்ய முடியும். அனைத்திற்கும் மத்திய அரசின் நிதியினை எதிர்பார்க்கும் மாநிலங்கள் எப்படி இதற்கு நிதியினை ஒதுக்க முடியும் என்ற கேள்வி வருகிறது. இந்த நோய்த் தொற்றில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
மராட்டியம் முதல் இடத்தில் இருக்கும்போது, பாதிப்புக்கு ஏற்ப நிதி தர வேண்டும். ஏற்கனவே பிரதமரிடம் முதல்வர் 9,000 கோடி நிதி கேட்டுள்ளார். இரண்டாம் கட்டமாக 3,000 கோடி கேட்டுள்ளார். மொத்தம் 12 ஆயிரம் கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் குறைவான அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. இது பேரிடர் காலம். இங்கே மக்கள் அடிப்படையில் நிதி ஒதுக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோய் பரவும் வேகத்தையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தமிழகம் நோய்த் தொற்றில் இரண்டாம் இடத்தில் இருக்கும்போது, அதிகப்படியான நிதி தேவைப்படும். இன்னும் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் அதிகமான நிதி தேவைப்படும். ஜி.எஸ்.டி. போன்ற வருவாயில் மத்திய அரசுக்கு அதிகம் தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. ஆனால் பணத்தை வாங்கிக்கொள்ளும் அவர்கள், திருப்பி கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.
தற்போது எம்.பிக்களின் சம்பளத்தில் முப்பது சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. எம்.பி.க்கள் யாரும் சோற்றுக்குக் கஷ்டப்படப் போவதில்லை. ஆனால் தொகுதி வளர்ச்சி நிதி இனி வழங்கப்படாது என்றும், அந்தப் பணம் கரோனா தொற்றுக்காகச் செலவழிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது மிகத் தவறான ஒரு நிகழ்வு ஆகும். இது சந்தடி சாக்கில், சர்வாதிகாரம் செய்யும் செயலைப் போன்றது ஆகும். இதை எல்லாம் பார்க்கும்போது படேல் சிலைக்கு ஏன் 3,000 கோடி செலவு செய்தீர்கள், புதிய நாடாளுமன்றக் கட்டப்போவதாக 20,000 கோடி ஏன் செலவு செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்ற கேள்வி இல்பாகவே எழும். மக்களின் அத்தியாவசியத்துக்குச் செலவு செய்யாமல், அநாவசியத்துக்குச் செலவு செய்ய முயல்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.