தற்போது நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மிடையே விரிவாகப் பேசுகிறார்.
"நீங்கள் பேசினால் உங்களுடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்று நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து மிரட்டுகிறார் மத்திய அமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி. அமலாக்கத்துறை இன்று மோடி அரசின் கைத்தடியாக இருக்கிறது. இவர்களுடைய அரசியலுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறார்கள். ரஃபேல் விமான ஊழலில் மோடியைத் தானே அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்? பாஜகவினர் தான் ஊழல் பேர்வழிகள்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டமீறலைச் செய்து வருகிறது. சதித் திட்டத்தை அவர்கள் தீட்டி வருகிறார்கள். இரவு நேரத்தில் சிறையிலிருந்து அவரை அழைத்துச் செல்கிறார்கள். மோடி மற்றும் அமித்ஷாவின் வீட்டில் வேலை செய்பவர்கள் போல அமலாக்கத்துறையினர் நடந்துகொள்கின்றனர். இவை அனைத்தும் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. பி.டி.ஆர் அமைச்சராகவே இருக்கக்கூடாது என்பதுதான் பாஜகவின் விருப்பம். அதனால்தான் அவருடைய ஆடியோ விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கிறார்கள்.
யார் சமூகநீதி பேசினாலும் இவர்களுக்கு அது பிடிக்காது. குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் விசித்திரமாக இருக்கின்றன என்று சமீபத்தில் ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். குஜராத் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்கள் நிறைந்திருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி. ராகுல் காந்தியின் பதவியை வேண்டுமென்றே பறித்தனர் என்பது உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தின் மூலம் வெளிப்படுகிறது. மணிப்பூரில் பாஜகவின் செயல்பாடுகள் தவறு என்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இவர்களின் அராஜகம் நடக்கிறது.
பாராளுமன்றத்தில் ஏதேதோ பேசிய பிரதமர், மணிப்பூர் பிரச்சனை குறித்து தரவுகளுடன் பேச மறுக்கிறார். அதானி மற்றும் அம்பானி தான் மோடியை கட்டுப்படுத்துகின்றனர். இந்தியா கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளிக்க மோடி வேண்டும். மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் பதில் தருவார்கள்.