காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது மத்திய அரசு மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மூத்த பத்தரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் இதுதொடர்பாக நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்தோடு இணைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து செய்ல்பட்டு வருகிறது. அதன் ஒரு நீட்சியாக தற்போது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் ஜல் சக்தி துறையின் கீழ் இணைத்து அதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டுள்ளார்கள். முன்பு எல்லாம் அதற்குப் பெயர் நீர்வளத்துறை தான். தற்போது அந்த பெயரை ஜல் சக்தி என்று மாற்றி உள்ளார்கள். எல்லாவற்றிலும் அயோக்கித்தனம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செய்து வருகிறார்கள். அவரவர்களின் மொழியிலேயே அவர்கள் அழைத்துக் கொண்டால் மத்திய அரசுக்கு என்ன குறைச்சல் வந்துவிட போகின்றது. ஆனால் வட மொழியைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பெயர் மாற்றும் முறையை அவர்கள் கொண்டுவருகிறார்கள். எல்லா மாநிலத்தவரும் அவர்கள் மொழியில் அதனை அழைத்துவிட்டு போகப்போகிறார்கள். ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் சக்தி என்ற பெயரில் அதனைத் தற்போது மாற்றி உள்ளார்கள். நிதி அயோக் என்பார்கள், எல்லாவற்றிலும் இந்த முட்டாள்தனத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். இது மாநில சுயாட்சியை அழிக்கும் நடைமுறைகளில் ஒன்று என்றுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும்.
இவ்வளவு சம்பவங்களையும் பார்த்து நம்முடைய எடப்பாடி பழனிசாமி சும்மா இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. மூன்று நாளில் கரோனா அழிந்துவிடும் என்று மிகவும் துல்லியமாகச் சொன்னவர் அவர். அதனால் இதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். ஏனென்றால் எஸ்.வி சேகர் வீட்டில் பால் பாக்கெட் கெட்டு போனதற்கே அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஆவின் அதிகாரிகளை அனுப்பி கெட்டுப்போன பாக்கெட்டுக்குப் பதிலாகப் புதிய பாக்கெட்டுக்களைக் கொடுத்த அவருக்கு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எல்லோரும் நம்ம வேண்டும். மத்திய அரசுடன் உரிமை போராட்டத்தை மேற்கொண்டு நமக்கான உரிமைகளை நிச்சயம் பெறுவார் என்று நாம் அனைவரும் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு திரூவாருரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 'காவிரி காப்பான்' என்ற விருதை அவர் வாங்கி இருக்கிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் மத்திய அரசுடன் போராடி காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் காப்பார் என்று நாம் அனைவரும் நம்புவோம்,என்றார்.