கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி குறித்தான வழக்கு, நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலமாக நடந்துகொண்டிருந்தபோது, மாணவர்கள் குறுக்கிட்டு, “ஐயா, எங்க எல்லாரையும் பாஸ் பண்ணிவிடுங்க ஐயா” என கூச்சலிட்டனர். இடையூறு ஏற்பட்டதால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அடுத்த விசாரணையின்போது வழக்கு விசாரணையை யூடியூபில் ஒளிபரப்பினார்கள், இந்த விஷயம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து விவாதம் நடந்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு எதன் வெளிப்பாடாக நாம் எடுத்துக்கொள்வது என்ற வினா எழுகிறது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு.
எனும் திருகுறளை குறிப்பிட்டு அரியர் தேர்வை இரத்து செய்த உங்களுக்குத்தான் மாணவர்களின் ஓட்டெல்லாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொண்டாடி தீர்த்தனர் மாணவர்கள். ஆனால், அவர்கள் கொண்டாட்டத்திற்கெல்லாம் பெரும் அதிர்வாய் அமைந்தது, மாநில அரசு அறிவித்த மாணவர்கள் தேர்ச்சி ரத்து செய்யச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
திருவள்ளுவர் கல்வியைக் குறித்து குறிப்பிட்ட குறளைத்தான் பெரும்பாலான சாதனையாளர்கள் தங்கள் தாரக மந்திரமாய் ஏற்றுக்கொண்டுள்ளனர். எம்.ஏ. பட்டப்படிப்பில் எல்லா பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சர்.சி.வி. ராமன் முதல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்ற இன்றைய கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வரையிலானோர் வாழ்க்கையிலும் கல்வி பெரும் பங்களிப்பாற்றியுள்ளது. இப்படியான பல வெற்றியாளர்களின் எதிர்கால சாதனைக்கான கல்வியின் தரத்தைத்தான் தற்போதைய கரோனா காரணத்தினால் மாநில அரசு, கேள்விக்குறியாக்கியுள்ளது.
12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல மாணவர்கள் தங்களது மருத்துவ கனவையும் வாழ்க்கையையும் தொலைத்து நிற்கிறார்கள். தேர்ச்சி என்பதே இங்கு முக்கிய காரணம். இந்தத் தேர்ச்சி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை.
கரோனா காரணமாக கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த இயலாத சூழ்நிலையில் இருப்பதால், தமிழகத்தில் இறுதியாண்டு தேர்வை தவிர்த்து மற்ற தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.எஸ்.) வழிக்காடுத்தல்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிவித்தது. இது விரைவாக வெளிவந்த அறிவிப்பும்கூட. முதிர்வுநிலையை எட்டிய கல்லூரி மாணவர்களுக்கே கரோனா தொற்று காலத்தில் தேர்வு நடத்துவது கடினம் எனத் தெரிவித்து எளிதில் தேர்வை ரத்து செய்த தமிழக அரசு, குழந்தைகளான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வை நடத்த மூன்று முறை ஆலோசனை நடத்தி இருமுறை தேர்வு நடத்த திட்டம் தீட்டி மூன்றாவது முறையாக தேர்வு ரத்து என அறிவிப்பு வெளியிட்டது.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் தேர்வுகளை நடத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ஆகிய இரண்டிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசின் முடிவை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, ‘சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு, அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறு. அரசிடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை கைவிடக்கோரி மனு அளித்தும் பலனில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது என்ன விவரம் என அறிய பிரபல தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். அவர், “எல்லா தனியார் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதேபோல் பொறியியல் பல்கலைக்கழகங்கள் ஏ.ஐ.சி.டி.இ. கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்தத் தேர்ச்சி விவகாரத்தில், அரசு யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் முதலில் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்கியிருந்தால், இந்த பிரச்சனைக்கான இடமே இருந்திருக்காது. இளங்கலை மாணவர் ஒருவர், மூன்றாம் ஆண்டு முடித்தும் தனது 2ஆம் பருவத் தேர்வில் தோல்வியுற்று இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த மாணவர் தற்போது, அரசின் அறிவிப்பின்படி அவர் தேர்ச்சி பெற்றுவிடுவார். அதனைக் கொண்டு அவர் முதுநிலை படிப்பில் சேர்ந்துவிட்டு, பிறகு நீதிமன்றம், அரசு அறிவித்த தேர்ச்சி செல்லாது என்று சொன்னால் அந்த மாணவனின் வாழ்க்கை என்னவாகும். முறையாக இது யாருடைய அதிகாரத்தின் கீழ் வருகிறதோ அவர்களிடம் ஒப்புதல் பெற்று அதன் பிறகு அரசு முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.
கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோல், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர்களின் மனுவில் மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டியது, “25 % மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால், கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளது. தேர்வுகளில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைப்பது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும். தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்தது தவறு” என்பதைதான்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. அப்போது இந்த வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா, “ஏற்கனவே, சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படித்தவர்களே பணியாற்றுகின்றனர். தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்” என கேள்வி எழுப்பியிருந்தனர். முயல், ஆமை போராட்டத்திலும்கூட ஆமையின் விடா முயற்சியால்தான் வெற்றி கிடைத்தது என்கிறது கதை. அப்படியிருக்க மனுவில் சுட்டிக்காட்டியிருப்பதுபோல் ஒரு மாணவர் படிப்பில் ஆர்வமே அற்று பல பாடங்களில் அரியர் வைத்திருந்தவரை ஒட்டுமொத்தமாக எளிதாக அவரின் உழைப்பிற்கும் மன உறுதிக்கும் சற்றும் இடம்கொடுக்காமல் வெற்றி பெற செய்வது சரியா என கேள்வி எழுகிறது.
இந்த அறிவிப்பு மேற்குறிப்பிட்ட வகையான மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கடின உழைப்பாலும் விடாமுயற்சியோடும் தேர்வை சந்திக்கும் மற்றும் சந்தித்து வெற்றி பெற்ற மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும் என்கிறார்கள் பேராசிரியர்கள். இதுகுறித்து தனியார் பல்கலைக் கழக பேராசிரியரான இளந்திரையன் நம்மிடம் பகிர்ந்துகொண்டது, “ஒரு நல்ல ஆசிரியராக நான் அடுத்த தலைமுறையை வளமாகக் கொடுக்க வேண்டும். அனைவரும் தேர்ச்சி என்று அவர்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்போது அவர்களின் செயல் பெரும் நன்மை பயக்காது. ‘எதிர்த்து வரும் நீரில்தானே மின்சாரம் உற்பத்தியாகும்’ இப்படி அனைவரும் தேர்ச்சி என்றால் இவர்களுக்கு அந்த எதிர்த்துப் போராடும் எண்ணமே இருக்காதே... இங்கு பொருளாதாரமும் பெரும் பங்கு வகிக்கிறது. பணம் இருப்பவர்கள் இந்தத் தேர்ச்சி சான்றிதழை வைத்துக்கொண்டு சுய தொழில் என்று சென்றுவிடுவார்கள். ஆனால், படிப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால் அவன் வாழ்க்கையே முடிந்தது. இதனால் தேர்வுகள் கண்டிப்பாக தேவை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1 அல்லது 2 அரியர்கள் வைக்கும் மாணவர்கள் என்பது வேறு. ஆனால், படிக்காமல் மொத்தம் 36, 40 அரியர்கள் வைப்பவர்களை என்ன செய்வது? இப்போது இவர்களின் இந்த முடிவு, இரண்டு தரப்பினரையும் ஒரே நிலையில் வைக்கிறது. இது நிச்சயம் தேர்வுக்காக தன்னை தயார் செய்து, தேர்வை சந்தித்து, தேர்ச்சி பெறுவர்களை மன ரீதியாக பாதிப்படைய செய்யும்” என்றார்.
இன்னொரு விளைவுக்கும் சாத்தியம் உண்டு என்கிறார் மனிதவள நிபுணர் ஒருவர். கல்லூரி வளாக நேர்முகத்தேர்வாக இருக்கட்டும் அல்லது இந்தாண்டில் படித்த மாணவர்கள் வெளியே போய் வேலை தேடும் போதாக இருக்கட்டும் நிறுவனங்கள் அவர்களை அப்படியே ஒதுக்கும் அபாயமும் இருக்கிறது. ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் இது பாதிப்பாகலாம் என்கிறார் அவர்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை எனும் பொருளுடன் மாணவர்களின் ஓட்டெல்லாம் உங்களுக்கே என்று பேனர் அடித்துக்கொண்டாடினர் மாணவர்கள். அப்படி பேனர் வைத்தவர்கள் மாணவர்களா அல்லது மாணவரணியா என்பதே தெளிவாகதநிலையில், தமிழக அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படுத்தபோகிற தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டியது.