Skip to main content

சுட்டுக்கொல்லவேண்டும்! தெலுங்கானா, உன்னா, மால்டா, விழுப்புரம் அவலத்தால் தேசமெங்கிலும் வலுக்கும் கோரிக்கை

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

தெலுங்கானா, உன்னா, மால்டா, விழுப்புரம் என்று தேசமெங்கிலும் அவலம் தொடர்வதால், குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

 

j


தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவத்திலிருந்து மீள்வதற்குள், உன்னாவில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.   இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மாந்தோப்பில் இளம்பெண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்  வீட்டில் தனியாக இருந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

அடுத்தடுத்து பெண்கள் எரித்துக்கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

j

 

நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதால், தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்காவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற 4 பேரையும் கைது செய்து விசாரித்து வந்தபோது மக்கள் அலுத்துக்கொண்டனர்.  ஆனால், அந்த 4 பேரையும்  என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசாரை மக்கள்  பாராட்டி வருகின்றனர். 

 

என்கவுன்டருக்கு எதிர்ப்புகள் ஒருபுறம் வலுத்து வரும் நிலையில், ஆதரவும் குவிந்து வருகின்றன.   பொதுமக்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் என்கவுன்டருக்கு வரவேற்பு  தெரிவித்து வருகின்றனர்.

 

j


 
பிரியங்கா மரணத்திற்கு நியாயம் கிடைத்துவிட்டதாக அவரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில்,   உன்னாவில் எரித்துக்கொல்லப்பட்ட 23 வயது இளம்பெண்ணின் தந்தை, தன் மகளை எரித்துக் கொன்றவர்களை சுட்டுக்கொல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் உன்னா சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றே கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

பொதுமக்கள் பலரும், குற்றவாளிகளை தெலுங்கானாவில் நடந்தது போல் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறார்கள்.  இக்குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, குற்றவாளிகளை ஒருமாதத்தில் உத்தரபிரதேச அரசு தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி வருகிறார்.  

 

உன்னா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டி உ.பி. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.