Skip to main content

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசிய இலக்கியவாதி டி.செல்வராஜ்!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

 

மிழின் முற்போக்கு எழுத்தாளரும், தமுஎகச அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவருமான டேனியல் செல்வராஜ் என்கிற டி.செல்வராஜ்(வயது81) நேற்று மாலை மதுரையில் மறைந்தார். உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்ததை அடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

 

d


முற்போக்கு சிந்தனை கொண்ட செல்வராஜ், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து தனது படைப்புகளில் பதிவு செய்துவந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 50 ஓரங்க நாடகங்கள் எழுதி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்,   தோல் எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் பெற்றுள்ளார்.  திருநெல்வேலி தென்கலம் பகுதியைச் சேர்ந்த இவர் திண்டுக்கல்லில் வசித்து வந்தார்.  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார்.

 

கேரளாவில் தேவிகுளம், பீர்மேடு தேயிலை தோட்டங்களில் பெற்றோருடன் தங்கியிருந்தபோது அங்கிருந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்திருந்தார்.   பின்னாளில் இந்த பிரச்சனைகளை மையமாக வைத்துதான் ‘தேனீர்’என்ற நாவலை எழுதினார்.  இந்த நாவலை ‘ஊமை ஜனங்கள்’ என்ற பெயரில் ஜெயபாரதி திரைப்படமாக கொண்டு வந்தார்.

 

t

 

திருநெல்வேலியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தி.க., சிவசங்கரன், தொ.மு..சி.ரகுநாதன், பேராசிரியர் வானமாமலை ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பினால் இலக்கியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு, எழுதத்தொடங்கினார்.  ஜனசக்தி, சரஸ்வதி, சாந்தி, செம்மலர், சிகரம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டே அப்பத்திரிகைகளில் சிறுகதைகளும் எழுதி வந்தார்.  

 

நெல்லை விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்துதான் ‘மலரும் சருகும்’ என்ற நாவலை எழுதினார்.  தொடர்ந்து ’தேனீர்’, ‘மூலதனம்’, ‘தோல்’, ‘அக்னிகுண்டம்’ உள்ளிட்ட 6 நாவல்களையும் எழுதினார்.   

 

ட்


 
தோல் பதனிடும் தொழிலோடு இணைந்த தலித் மக்களின் வாழ்க்கை, அவர்ளைக் கசக்கிப் பிழிந்த முதலாளிகளின் அரசியல், தட்டிக் கேட்கப் புறப்பட்ட செங்கொடி இயக்கத்தின் தத்துவம் என திண்டுக்கல் வட்டாரம் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் தமிழக உழைக்கும் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு கூறாகவே  ‘தோல்’ நாவல் உருவாகியுள்ளார் செல்வராஜ். 

 

நெல்லையில் படித்து முடித்த பின்பு, சென்னையில் சட்டம் படித்தார் செல்வராஜ்.  அதற்குப் பிறகு வழக்கறிஞர் தொழிலுக்காக திண்டுக்கல்லில் வசித்தார்.  அப்போது  திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பலருடன் நேரில் பழகி, அவர்களுடைய வாழ்க்கைக் கதையைப் பல வருடங்களாக குறிப்பெடுத்து வைத்திருந்தார்.  அந்தத் தொழிலாளர்களுக்கான பல வழக்குகளையும் நடத்தியிருக்கிறார் செல்வராஜ்.

 

ச்

 

தோல் பதனிடும் தொழிலாளர் வாழ்க்கையை நரக வாழ்க்கை என்றும்,  அந்த வேலை செய்யும் தொழிலாளர்களின் விரல் நகங்கள் கறுத்துவிடும் என்ற நிலை அறிந்தும், தொழுநோய் வந்தவர்களின் விரல்கள் போல ஆகிவிடும் அவர்களின் நிலைகண்டும் கலங்கினார்.  50 ஆண்டுகள் அவர்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விஷயம். என்பதையெல்லாம்  நேரில் பார்த்து மனம் உருகியிருக்கிறார் செல்வராஜ்.  அவர்களுடைய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்திய ஏ.பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்களுடனும் பழகியிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துத்தான் "தோல்' நாவலை எழுதினார்.  பலராலும் பாராட்டப்பட்ட இந்நாவலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.  இந்நாவலுக்கு 2012ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தபோது,  ’’ஏழை தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதி இதை மகிழ்வுடன் ஏற்கிறேன்’’என்று கூறினார் செல்வராஜ்.