Skip to main content

காந்தி மேஜிக்! - கனிந்த சுதந்திரம்!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
Gandhi Magic!



தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையிலிருந்து விலகி,  மக்களின் அதிமுக்கியப் பிரச்சனைகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே,  மகாத்மா என்று அடையாளம் காணப்பட்டார் காந்தி.  
 

மனவலியை ஏற்படுத்திய மகாத்மா பட்டம்! 
 

1915-ல் சாந்திநிகேதன் சென்றார் காந்தி. அங்கு ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்ததும் ‘நமஸ்தே குருதேவ்’ என்று கைகூப்பி வணங்கினார். உடனே தாகூர், ‘நான் குருதேவ் என்றால், நீங்கள் மகாத்மா’ என்றார். அதற்குமுன்பே, கோண்டுகள் என்று சொல்லப்படும் மத்தியப்பிரதேச பழங்குடிகள், காந்தியை மகாத்மா என்றார்கள். அந்த மக்கள் தன்னை இவ்விதம் உயர்த்திச் சொல்வதை காந்தி விரும்பவில்லை. ‘வெறுப்புக்கும் கண்டனத்துக்கும் உரியது’ என்றார். காரணம் – மகாத்மா பட்டம் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், மகாத்மா என்ற சொல்லை வைத்து மென்மையாகக் கிண்டல் செய்தார். தன்னைத்தானே நக்கலடித்து வாய்விட்டுச் சிரிப்பது அவருடைய இயல்பாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய புகைப்படத்தை வைத்திருந்த ஒருவரைக் கட்டாயப்படுத்தி தூக்கிப்போடச் செய்தார்.  ‘தங்களைப் பார்த்த மாத்திரத்தில் நோய் குணமானது’ என்று ஒருவர் சொன்னபோது, அவமானமும் வருத்தமும் அடைந்தார் காந்தி.  

 

Gandhi Magic!




‘மகாத்மா என்று உங்களை ஏன் அழைக்கின்றார்கள்?’ என்ற கேள்விக்கு காந்தி “மகாத்மா என்ற பட்டம் பலமுறை என்னைக் கடுமையான மனவலிக்குத் தள்ளியிருக்கிறது. இந்த உலகத்துக்குப் புதிதாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. உண்மையும் அஹிம்சையும் புராதன மலைகளைப் போன்றவை. என்னுடைய சொந்த வாழ்க்கையில், என்னால் முடிந்தவரை, இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறேன். இதைத்தான் என்னால் சொல்ல முடியும். என்னைப் பலரும் மதிப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், மற்றவர்களைக் காட்டிலும் அவர்களை நான் புரிந்து வைத்திருந்ததுதான்.” என்று விளக்கம் தந்தார்.  
 

கண்ணெதிரே சிதைந்த நம்பிக்கை!
 

ஒருபக்கம் மகாத்மா என்று தேசமே புகழ்ந்தாலும், தான் வாழ்ந்த காலத்திலேயே கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் காந்தி. 


 

Gandhi Magic!




சட்ட மறுப்பு இயக்கத்தை ரகசியம் சூழ்ந்துவிட்டதாகக் கூறி, இர்வினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் காந்தி. அப்போது நேதாஜியும், விட்டல்பாய் படேலும் வியன்னாவில் இருந்து ‘ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டார். இதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை. தன்னுடைய வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி இன்னும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது.’ என்று அறிக்கை விட்டனர். அந்தக் காலக்கட்டத்தில் சிலர், அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக உண்ணாவிரதத்தைப் பயன்படுத்தினார் என்று விமர்சித்தார்கள்.    ‘செத்து ஒழியுங்கள்’ என்றார்கள். ‘அரசியலைவிட்டு சன்னியாசம் செல்லுங்கள்’ என்று குரல் எழுப்பினார்கள். 
 

காந்தி லண்டன் சென்றபோது ஒரு ஆங்கிலேயச் சிறுவன்  “ஏய் காந்தி! எங்கே உன் டிரவுசர்?” என்று கேட்டபோது உற்சாகமாகச் சிரித்தவர் காந்தி. தன் மீதான விமர்சனம் குறித்த விவாதத்தின்போது காந்தி “எனது முரண்பட்ட நிலைகள் குறித்த ஏராளமான குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம், நான் பதிலளிப்பதில்லை. ஏனென்றால், அந்த விமர்சனங்கள் வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிப்பவை.” என்றார். ஆனாலும், தன்னுடைய இறுதிக்காலத்தில்,  மதப்பிரிவினையால் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதும், இந்துக்களில் சிலர் தன்னை மதத்துரோகி என்று வெறுத்ததும், மனிதர்கள் மீதான  தன்னுடைய நம்பிக்கைகள், தன் கண்ணெதிரே சிதைவதையும் கண்டு மனம் உடைந்தார். இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்திருந்தது. இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார். 


 

Gandhi Magic!



இவரளவுக்கு எவரும் இல்லை!
 

இருபதாம் நூற்றாண்டில், காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவுக்கு, வேறெந்த மனிதரின் வாழ்க்கையும் பதிவு செய்யப்படவில்லை. காரணம் – அவரளவுக்கு இந்த உலகத்தில்,  மிக எளிய வழிகளில்,  இவ்வளவு மனிதர்களை வழிநடத்திய தலைவர்கள் யாரும் இல்லை. இந்த தேசத்தில் கோடானுகோடி மக்களை அவர் ஆழமாகப் பாதித்திருக்கிறார். அதனால்தான், நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. வீட்டைவிட்டு வெளியில் வராத பெண்களும்கூட போராடி சிறை சென்றார்கள். 
 

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் பிரிவு இருப்பதையும், மற்ற இந்துக்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தி வந்ததையும் கடுமையாக எதிர்த்தார். தீண்டாமையை இந்து மதத்தின் சாபக்கேடு என்றார். அதனாலேயே, அம்மக்களுக்கு  ‘கடவுளின் குழந்தைகள்’ என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தினார். 


 

Gandhi Magic!




அவரே மிகவும் வருத்தப்பட்ட விஷயங்கள் என்றால், எளிதில் புரியாத தன்னுடைய கிறுக்கலான கையெழுத்தும், யாரையாவது தனக்கு மசாஜ் செய்துவிடச் சொல்வதும்தான். அடிப்படையில், அவர் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடந்தார்.  தன்னுடைய வாழ்வை, முழுமையாக, பிறர் இழிவாகக் கருதும் விஷயங்களைக்கூட, வெளிப்படுத்திய துணிவு அவருக்கு இருந்தது. துப்புரவுப் பணியிலிருந்து சகல வேலைகளையும் அவரே செய்தார். ஆனாலும், அந்த எளிமை யாருக்கும் உறுத்தலாகத் தெரியவில்லை. ஏனென்றால், மக்கள் அவரை ஒரு மகானாகவே பார்த்தார்கள். அதனால்தான், எங்கு சென்றாலும், மக்களை அமைதிப்படுத்த அவரால் முடிந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வன்முறையைக் கைவிட்டனர். சகோதரத்துவ உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். 
 

காந்தியை தீவிரமாக விமர்சித்துவந்த அன்றைய ஆங்கிலேய ஆதரவுப் பத்திரிக்கைகள், அவருடைய உன்னதக் கொள்கைகளையும், இந்திய மக்கள் அனைவரும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டதையும் பார்த்து ‘காந்தி மேஜிக்’ என்று வியந்து எழுதின. அதனால்தான், தேசப்பிதாவாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். 
 

இந்தியர்கள் நாம் காந்தி தேசத்தில் வாழ்வதில் பெருமிதம் கொள்வோம்!